விடுதலைச்சிறுத்தைகளின் பணி தொடர வேண்டும்!

0
1105

விடுதலைச்சிறுத்தைகளின்

பணி தொடர வேண்டும்!

– மக்கள் பாவலர் இன்குலாப்

14.4.2007 விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாடிய அறிஞர் அம்பேத்கரின் பிறந்த நாளை பண்பாட்டுச் சிறப்பு மிக்க  நாளாகக் கருதுகிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று  குறிப்பதுதான் ஒரு மரபு. ஆனால், கோயம்பேடு சந்தை அருகில் நடந்த அந்த மாபெரும் விழா, ஒரு பண்பாட்டுச் சிறப்புமிக்க  நாளாகவும் அமைந்தது. தொல் தமிழ்க் குடிகளின் கூத்தும் பாட்டும் அன்றைய மேடையை அணிசெய்தது மட்டும் இதற்குக் காரணம் அல்ல. அன்று ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகப் பாடுபடும் தோழர்களை அடையாளப்படுத்திப் பாராட்டும்  நாளாகவும் விடுதலைச்சிறுத்தைகள் கொண்டாடினர். அண்ணல் அம்பேத்கரின் பெயரில் ‘அம்பேத்கர் சுடர்’ என்ற  விருதை ஏற்படுத்தி, ரூ.50,000/-மும் பரிசளித்து  அந்த நாளைக் கொண்டாடும் ஒரு தொடக்க விழாவாக அது அமைந்தது.

‘அம்பேத்கர் சுடர்’ விருதுக்குரிய  முதல் தோழராகப் பேராசிரியர்  கல்யாணியை  இந்த விருதுக்குழு தேர்வு செய்தது. பாரதியாரைப் பாரதிதாசன்  பாராட்டும்போது, “தமிழால் பாரதி தகுதி பெற்றது, தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்” என்று பாடிச் செல்வார். அச்சுறுத்தல், பொய்வழக்குகள், கைதுகள் என்ற  அரசு விருதுகளால் மட்டுமே  கவனிக்கப்பட்ட  ஒரு தோழரை, ஒடுக்கப்பட்டோருடைய விடுதலைக்கான அமைப்பு, தங்களின் ஒருவராக அடையாளம் கண்டு, விருதளித்துப் பாராட்ட முன்வந்துள்ளன.

தோழர் கல்யாணியை என்னைப் போன்ற ஒரு பேராசிரியாக மட்டும் அறியவில்லை. ஒரு மண்ணின் போராளியாகத்தான் முதலில் அறிந்தேன். திண்டிவனத்தில் அரசுக் கல்லூரியில் அவர் பேராசிரியராகப் பணியாற்றிய போது, வகுப்பறைகளில் போதிப்பதோடு தமது பணி நிறைவடைந்து விட்டது என்று கருதவில்லை. கற்பிக்கப்படும் மாணவர்கள், அவர்களது  சமூகங்களில் ஒடுக்கப்பட்ட நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரு முதன்மையான  போராட்டத்தைக் கையிலெடுத்தார்.

அறிவியல், கணிதம், வணிகவியல் பாடங்களில் தனிப்பயிற்சி (டியூசன்) அளித்தும் சம்பாதிப்பது ஆசிரியர்களின் கூடுதல் தொழிலாக இருந்தது.  இது நடத்தவேண்டிய வகுப்புகளைப் புறக்கணித்துவிடும்  அளவுக்குச் சீரழிந்துபோனது. வசதியுள்ள மாணவர்களால் எளிதாகப் பெறமுடிந்த இந்தத் தனிப் பயிற்சிக் கல்வியை ஏழை-எளிய மாணவர்களால் பெறமுடிய வில்லை. இது மாணவர்களுக்கு ஆசிரியர் இழைத்த அநீதி. இதற்கு எதிராகப் போராடினார். சுவர்களின் ‘டியூசன் ஒழிக’ என்ற முழக்கம் எழுதப்பட்டது.

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் என்ற வகையில் பல ஊர்களில் பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தபோது திண்டிவனம்   அவரது சோதனைக் கூடமாக மாறியது. கல்விச் சார்ந்த சோதனைகள் என்று தொடங்கி  சமூகம் சார்ந்த  சோதனை கள் என்று வளர்ச்சி பெற்றன. அங்கு அதிகாரம் அத்துமீறிய பொழுதெல் லாம்,  சனநாயக சக்திகளை ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுத்தவராகத் தோழர் கல்யாணி விளங்கினார். திண்டி வனம்  என்பது ஒரு சிறு நகரந்தான் என்றபோதிலும், அவரது மக்கள் உரிமைப் போராட்டத்துக்கான ஒரு மாபெரும் களம் என்றுதான் அதை மதிப்பிடுகிறேன். ஒடுக்கப்பட்டோரு டைய உரிமைகளுக்காகப் போராட்டங்கள் பலவற்றை நடத்திவர் இன்று ஒடுக்கப் பட்டோருடைய கல்விக்காகவும் அரும்பணி செய்கிறார்.

திண்டிவனத்தில் தனிப்பயிற்சி கல்விக்கெதிராய் அவர் நடத்திய கூட்டத்தில் கலந்துக்கொண்ட நான், சில  ஆண்டுகளுக்கு முன்பு அவர் முன்னின்று நடத்தும் இருவர் குழந்தைகளுக்காக விடுதியையும் பார்த்தேன். பாதிக்கப்பட்டோர் தாம் அவருடைய சுற்றமாக அங்கிருக் கிறார்கள். அத்தியூர்  விஜயாவை  அங்குதான் முதலில் பார்த்தேன். அந்தப் பெண்மணிக்காக அவர் நடத்திய அயராத போராட்டம், மனித உரிமை வரலாற்றில் அழியாத இடம் பெறத்தக்கது.

இந்த விருது அவருக்கு  அளிக்கப்பட்டது மிகச் சரியானது. விருது தொகையைப் பெற்றுக் கொண்ட அவர், அந்தப் பெருந் தொகையைக் கல்விப் பணிக்காக பிற சமூகத் தொண்டுக்காக அந்த மேடையிலே அறிவித்தார். “ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவ பேரறிவாளன் திரு” என்ற குறள் தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

தோழர் கல்யாணி, தமது பெயரைப் ‘பிரபா.கல்விமணி’ என்று மாற்றிக் கொண்டார். அந்தப் பெயர் மாற்றம், தேசிய இனவிடுதலையில், கல்வியில் அவருக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதன் குறியீடுதான். இருள் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகக் குழந்தை களுக்கு, உணவும், கல்வியும்  அளித்து இவர் செய்யும் தொண்டைப் பார்க்கும்போது, மாற்றிக் கொண்ட பெயரில் இறுதி இரண்டெழுத்து ‘மணி’ எனக்கு மணிமேகலையை நினைவு படுத்துகிறது. அவர் கல்யாணியாய் இருந்தபோதும், அவரைப் பெண்ணென்று பலர் கருதினார்கள். கல்விமணி ஆனபோதும் அப்படிப் பலர் கருதலாம். தொண்டில் ஆணென்ன? பெண்ணென்ன?

விடுதலைச்சிறுத்தைகள், ஒரு பெரிய நிறுனம் செய்யவேண்டிய ஆனால் செய்ய மறுக்கிற ஒரு செயலை இவ்விருதின் மூலம் செய்து, ஒரு நல்ல தொடக்கத்தைச் செய்துள்ளது. இப்பணி தொடர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here