சிறுத்தைகளின் அரசியல் பலம் மூத்த பத்திகையாளர் சோலை

0
1571

இந்திய அரசின் ஆயுத உதவியோடும் ஆசிர்வாதத் தோடும் சிங்கள இனவாத அரசு ஈழத்தில் இறுதிப் போர் நடத்திக்கொண்டிருந்தது. முள்ளி வாய்க்கால் முற்றுகையில் ஆயிரமாயிரம் ஈழத்து மக்கள் பொடுப் பூச்சிகளாக மடிந்து கொண்டிருந்தனர். ஈழம் எரிகிறது, இன்னுமா உறக்கம் என்று சென்னையில் தேக்குமரத் தேகத்தான் முத்துக்குமரன் தீக்குளித் தான்.
இந்தச் சூழலில் புதுவை கவர்னர் மாளிகை அருகில் ராஜீவ்காந்தி சிலை களங்கப்படுத்தப்பட்டது. அதனை நாம் ஆதரிக்கவில்லை. அந்தச் சிலையைக் களங்கப்படுத்துவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் என்று தேசியத்தார் கோபம் கொண் டனர். தாக்கினர். திரும்ப சிறுத்தைகள் போர் முரசு கொட்டினர். ராஜீவ்காந்தி சிலைக்குக் களங்கம் சேர்த்தவர் கண்டுபிடிக்கப் பட்டார். பிரபல தமிழ்நாளேட்டின் பகுதி நேர நிருபர்தான் அந்தப் பணியைச் செய்தவர். ஆனால் அநியாயமாகச் சிறுத்தைகள் ரத்தம் சிந்தினர். காலம் காலமாக அவர்கள் ரத்தம் சிந்தியது போதாதா?
ஈழத்துக் கடற்கரையில் கற்பழிக்கப்பட்ட தமிழச்சிகளின் அவலக் குரல் அந்த நிருபருக்குக் கேட்டிருக்கும். அங்கே முள்வேலி முகாம்களில் எழுந்த ஈழத்துச் சகோதரர்களின் விக்கலும் விம்ம லும் அந்த இளைஞனுக்குக் கேட்டிருக்கும். இனமானம் அவனது ரத்தத்தைச் சூடேற்றியிருக்கும். ராஜீகாந்தி சிலையை அவர் அசிங்கப்படுத்திவிட்டார். ஆனாலும் அப்படி ஒரு செயலைச் செய்திருக்கக்கூடாது. எப்போதெல்லாம் ஈழத்து மக்கள் அடக்குமுறைக்கும் அழிவிற்கும் ஆளாக்கப்பட்டார்களோ அப்போதெல்லாம் விழுப்புரம் – கடலூர் மாவட்டங்களில் ராஜீவ்காந்தி சிலைகள் களங்கப்படுத்தப்பட்டன. அதனை நாம் ஆதரிக்க மாட்டோம்.
அந்த ஆத்திரச் செயல்களுக்கும் சிறுத்தைகள்தான் காரணம் என்று அப்போதும் ஆரம்பத்தில் ஆர்ப்பரித்தனர். ஆனால் விசாரணையின் தீர்ப்பு என்ன சொன்னது? அவ்வப்போது அந்த மாவட்டங்களில் எழுந்த தமிழ்த் தேசிய இயக்கங்கள் தான் அதற்குக் காரணம் என்றது.

அண்மையில் சென்னையில் ராஜீவ்காந்தி சிலை களங்கப்படுத்தப்பட்டது. அதற்கும் விடுதலைச் சிறுத்தைகள் தான் காரணம் என்றனர். தங்கள் இயக்கத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சிறுத்தைகளின் தளபதி திருமாவளவன் அறிவித்தார். இல்லை இல்லை அந்த இயக்கத்தினர் மீதுதான் சந்தேகம் என்று ஒரு காங்கிரஸ் பிரிவினர் கூறினர். தி.மு.க. கூட்டணியை உடைத்து காங்கிர கட்சியை அவர்கள் சந்தியில் நிறுத்த ஆசைப்படுகிறவர்கள்.

இன்றைக்குத் தமிழகத்தில் தி.மு. கழகம் அ.தி.மு. கழகத்திற்கு அடுத்து விடுதலைச் சிறுத்தைதள்தான் மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தர்தலில் காங்கிரசுக்கு வெற்றிக்கரம் கொடுத்தவர்களே அவர்கள்தான்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொங்கு வேளாளச் சமுதாயம்தான் தனிப்பெரும் பிரிவாகும். 35 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆனாலும் தங்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தொகுதிக்கே சம்பந்தமில்லாத சித்தன் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே கட்சி வேறுபாடின்றி அந்தச் சமுதாய மக்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்குத்தான் வாக்களித்தனர். கரூர் தொகுதிலும் அதேநிலைதான்.

ஆனாலும் சித்தன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காரணம் விடுதலைச் சிறுத்தைகளை தங்கள் விடிவெள்ளியாக போர்வாளாகக் காணும் ஆதிதிராவிட மக்கள், 50 ஆயிரம் வாக்காளர்கள் திருமாவின் சுட்டுவிரலுக் குக் கட்டுப்பட்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தனர். வாக்குகள் சிதறவில்லை.

ஏன்? மதுரைத் தொகுதியில் தி.மு. கழகம் வெற்றி பெற்றதில் விடுதுலைச் சிறுத்தைகளின் பங்கு மகத்தானது. தேனி மக்களவைத் தொகுதியிலும், விருதுநகர், நெல்லை தொகுதிகளிலும் ஆதி திராவிட மக்களின் 90 சதவிகிதம் பேர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். அவர்களுக்கு திருமாவளவன்தான் தானைத்தலைவர். ஏன்? கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் விடுதலைச் சிறுத்தைகளுக்குத்தான் முதல் மரியாதை அளிக்க வேண்டும். வெற்றி பெற்றவரைக் கேட்டுப் பாருங்கள்.

எனவே, இனியும் விடுதலைச் சிறுத்தைகளின்றி எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது. அவர்கள் கூட்டணியின் அச்சாணி. தூங்கா மணிவிளக்கு.
பொதுவாக தமிழகத்தில் தலித் சமுதாய மக்கள் மூன்று பிரிவுகளாக இருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் தேவேந் திர குல வேளாளர் முதல் பிரிவினர் அடுத்து ஆதிதிராவிட மக்கள் பின்னர் அருந்ததிய மக்கள்.
வட மாவட்டங்களில் தலித் சமுதாய மக்களில் 90 சதவீதத்தினர் ஆதி திராவிடர்கள்தான். அவர்களுக்குத் திருமா தான் வழிகாட்டி. கொங்குச் சீமையில் அருந்ததிய மக்கள் முன்னிலை வகிக்கின்றனர். அடுத்து ஆதிதிராவிடர்களும் தேவேந்திர குலத்தினரும் இருக்கிறார்கள். அவர்களில் ஆதிதிராவிடர்கள் தான் அதிகம்.

இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் 35 லட்சம் உணர்வுப்பூர்வமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பத்து ரூபாய் கட்டணம் செலுத்திய தீவிர உறுப்பினர்கள் 13 லட்சம் பேர். தி.மு.கழகத்திற்கு அடுத்தபடியாக சிறுத்தைகள் அமைப்பிற்கு 20 ஆயிரம் வலுவான கிளைகள் இருக்கின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 7 ஆயிரத்து 500 கிளைகள்தான் இருந்தன.

இப்போது ஆதிதிராவிட எல்லைகளைக் கடந்து சிறுத்தைகள் அமைப்பு விரிந்து வளர்ந்து வருகிறது. அண்மையில் கிருஷ்ணகிரியில் சிறுத்தை அமைப்பின் பொறுப்பாளர்கள் முகாம் நடைபெற்றது. 5 ஆயிரம் 500 பேர் கலந்துகொண்டனர். இப்படி இதுவரை 326 முகாம்கள் நடத்தபப்ட்டிருக்கின்றன. அவர்களுக்கு அரசியல் போதம் அளித்து வருகிறார் திருமா.

கிருஷ்ணகிரி முகாமின்போது 2 ஆயிரத்து 700 பேர் சிறுத்தைகள் அமைப்பில் இணைந்தனர். அவர்கள் அக்கினிக் குஞ்சுகளாக அரசியலில் அறிமுகமானவர்கள். அவர்கள் அனைவருமே வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மாவட்டத்திலும் சிறுத்தைகள் அமைப்புத்தான் மூன்றாவது பெரும் சக்தியாகும்.

திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர் வில்லவன் கோதை நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஈரோடு புறநகர் மாவட்ட அமைப்பாளர் சேதுபதி குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஈரோடு மாவட்ட அமைப்பாளர் விடுதலை முத்துவும், கோவை மாநகர் மாவட்ட அமைப்பாளர் தென்னரசும் அருந்ததிய சமூகம் சார்ந்தவர்கள். நெல்லை மாவட்ட அமைப் பாளர் கார்த்திக்கும், இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் கோபாலும் தேவேந்திரகுல ளோளர் சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள். விழுப்புரம் மாவட்ட ஒன்றிய அமைப்பாளர்களாக சோழிய வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் செயல்படு கிறார்கள்.

காலையில் அறிக்கை, மதியம் பேட்டி என்று திருமா காகிதக் கழனியில் தங்கள் இயக்கத்தை வளர்க்கவில்லை. ஆண் டாண்டு காலமாக அழுத்தப்பட்டு புழுவாய் நெளிந்த உழைக் கும் மக்கள் கரம் தூக்கிவிட்டு அவர்களையும் மனிதர்களாக்கு வதற்காகத் தொண்டால் பொழுதினை அளந்து கொண்டிருக் கிறார். ஆகவே, அவருடைய இயக்கம் ஆழ வேர்விட்டு வான் நோக்கி வளருகிறது.

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் பெற்றனர். அப்போது குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2006ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. அங்கம் பெற்றது. ஆனால் அதே குறிஞசிப்பாடி தொகுதியில் பன்னீர்செல்வம் 2 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில்தான் வெற்றி பெற்றார். விடுதலைச் சிறுத்தைகளின் மக்கள் செல்வாக்கைத் தெரிந்துகொள்ள இது ஓர் உதாரணம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் சிறுத்தைகள் இடம்பெற்றனர். சென்னை நகரில் மட்டும் அ.தி.மு.க. 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தத் தொகுதி களில் ஆதிதிராவிட வாக்காளப் பெருமக்கள் 20 சதவிகிதத் திற்கும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் திருமாவின் வேண்டுகோளை ஏற்று வாக்களித்தனர். அந்த வெற்றிகளுக்கு சிறுத்தைகள்தான் காரணம் என்று மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சேகர்பாபு மனம் திறந்து பாராட்டினார்.

தமிழகம் தழுவிய அளவில் 120 தொகுதிகளில் அவர்களுடைய வாக்கு வங்கிதான் வெற்றி – தோல்விகளைத் தீர்மானிக்கும்.
ஈழத்தை மயான பூமியாக்கிய ராஜபக்சேவுக்கு வரவேற்பா என்று திருமாவளவன் கேட்டார். தேசியத்தார் கோபம் கொண்டனர். ஆனால் அவர் கேட்டது நியாயமானது. அதுதான் தமிழகத்தின் உணர்வு. ஐ.நா. மன்றத்தில் உரை நிகழ்த்திச் சென்றார் ராஜபக்சே. 99 சதவிகித நாடுகள் புறக்கணித்தன. காரணம் மனித இன அழவின் அடையாளத்தைக் காண அந்த நாடுகள் விரும்பவில்லை. உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ராஜபக்சே விருந்து வைத்தார். ஒருவேளை இந்தியா விருந்து சாப்பிட்டிருக்கலாம். ஆனால் எல்லா நாடுகளுமே அந்த விருந் தைப் புறக்கணித்தன. காரணம் ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று பல லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களுக்குள் முடக்கிய ஒரு கொடூரன் தந்த விருந்தில் கலந்துகொள்ள அதே நாடுகள் விரும்பவில்லை.

எனவே, திருமாவளவனின் உணர்வு என்பது உலகத்தின் உணர்வாகும்.
அதற்காக தேசியத்தார் இனி சிறுத்தைகளுடன் உறவு இல்லை என்று முடிவு செய்தால் இழப்பு காங்கிரஸ் கட்சிக்குத் தான். சிறுத்தைகள் செயல் மறவர்கள். அவர்களுக்குக் களம் காணத் தெரியுமே தவிர கற்சிலைகளை அசிங்கப்படுத்தத் தெரியாது.

மாறுபட்ட கொள்கை கோட்பாடுள்ள கட்சிகளும் பொதுநோக்கிற்காகக் கூட்டணி காண்கின்றன. ஒருமித்த கருதுள்ளவர்களோடுதான் கூட்டணி என்பது இன்றைய நிலையில் எடுபடாது.

நன்றி : நக்கீரன், 2010 நவ. 10-12

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here