அமைப்பாய்த் திரள்வோம் – 42

0
677

உன்னையறிதல் என்பது தன் மனத்தை அறிதலேயாகும். மனத்தை அறிதல் என்பது மனத்தின் இயல்புகளை அறிவதாகும். மனத்தின் இயல்புகளே மனிதனின் இயல்புகளாகும். மனத்தை மனமே அறியும். மனம் ஒன்றாமல், எதனையும் அறிந்திட இயலாது. எந்தவொன்றுடன் மனம் ஒன்றுகிறதோ, ஊன்றுகிறதோ அந்தவொன்றையே மனிதனால் அறிய முடியும். ஒன்றும் மனமும், உழைக்கும் மூளையுமே மனிதனுக்கு அறிதலைத் தருகிறது. அதாவது, அறிவைத் தருகிறது.

தன்னையறிவதற்கு தன்னில் மனம் ஒன்றுதல் வேண்டும். மனத்தில் மனம் ஊன்றுதல் வேண்டும். மனம், எதை விரும்புகிறது? எதை வெறுக்கிறது? மனம், எதை ஏற்கிறது? எதை மறுக்கிறது? மனம், எதை ஆதரிக்கிறது? எதை எதிர்க்கிறது? மனம், எதை ஈர்க்கிறது? எதைத் தவிர்க்கிறது? மனம், எப்போது மகிழ்கிறது? எப்போது அழுகிறது? மனம், எப்போது துள்ளுகிறது? எப்போது துவளுகிறது? மனம், எப்போது கெஞ்சுகிறது? எப்போது விஞ்சுகிறது? மனம், எப்போது குளிர்கிறது? எப்போது குமுறுகிறது? மனம், எப்போது அமைதியாகிறது? எப்போது ஆவேசமாகிறது?.. இப்படி, மனம் உணர்ச்சிகளால் இயங்குவதை உற்றுநோக்குதல் வேண்டும். எத்தகைய உணர்ச்சிகளால் மனம் எத்தகைய வினைகளை ஆற்றுகிறது என்பதை அறிதல் வேண்டும்.

இவ்வாறு மனத்தின் இயல்புகளை அறிவதிலிருந்தே ஒருவன் தன்னை அறிந்திட இயலும். தன் மனத்தின் இயல்புகளை அறிவது மட்டுமே தன்னை அறிவது ஆகாது. இவ்வாறு அறியும் இயல்புகளிலிருந்து நிறை-குறைகளை மதிப்பிடுவதே தன்னை அறிவதாக அமையும். ஒன்றை அறிவதும், அறிந்தவற்றை ஆய்வதும், ஆய்ந்தவற்றை ஒப்பீட்டாய்வதும், ஒப்பிட்டாய்ந்தவற்றை மதிப்பிடுவதும், மதிப்பீடுகளிலிருந்து நிறை – குறைகளைத் தெளிந்து தேர்வதும் போன்ற செயற்பாடுகளே அறிதலை முழுமை செய்யும். இத்தகைய பயிற்சிமுறைகளிலிருந்தே தன்னையறிதலையும் நிகழ்த்த இயலும். அதாவது, அறிதல், ஆய்தல், ஒப்பீட்டாய்தல், மதிப்பீடு செய்தல், தெளிவு பெறுதல், தேர்வு செய்தல் என்கிற நடைமுறைகளின் வழியே
உண்மையை – முழுமையை அறிந்துகொள்ள முடியும். இவற்றைப் பின்பற்றத் தவறினால் ஒருவரின் தன்னையறிதலும் முழுமை பெறாது.

ஒருவர் தன் இயல்புகளை அறிவது அல்லது மதிப்பீடு செய்வதைப் போலவே, தனது பண்புகளையும் மதிப்பிடுதல் வேண்டும். இயல்புகளிலிருந்து பண்புகள் மாறுபடும். பெரும்பாலும் இயல்புகள் பொதுவானவையாக விளங்கும். பண்புகள் குறிப்பானவையாக இருக்கும். பண்புகள் அடிப்படையானவையாகும். இயல்புகள், பண்புகளின் வெளிப்பாடுகளாகும். பண்புகள், பெற்றோரின் வழி பெற்ற அகநிலைக் கூறுகளாகவும், குடும்பம், சமூகம் போன்ற சூழல்களின் வழி, வளர்ச்சியின் போக்கில் பெற்ற புறநிலைக் கூறுகளாகவும் இணைந்து கலந்திருக்கும். பண்புகள், அல்லவையாயினும் நல்லவையாயினும் அவை காலத்தாலும் பழக்கத்தாலும் வளர்ச்சிப் பெற்று, வலிமைப்பெற்று ஆளுமைக் கொண்டவையாக விளங்கும். இவை, தன்னலம் சார்ந்ததாகவோ, பொதுநலம் சார்ந்ததாகவோ, நன்மை பயப்பதாகவோ, தீங்கு இழைப்பதாகவோ, பெருமைக்குரியதாகவோ, இழிவுக்குரியதாகவோ, ஈர்ப்புக்குரியதாகவோ, வெறுப்புக்குரியதாகவோ.. இவ்வாறு ஏதேனும் ஒருநிலையில் அமையப் பெறலாம். இத்தகைய பண்புகளையும் அறிவதே தன்னை அறிவதாகும்.
உண்ணுவது, உறங்குவது, உடுத்துவது, உழைப்பது, கற்பது போன்றவை யாவும் அனைவருக்கும் பொதுவான இயல்புகளேயாகும். ஆனால், உண்ணுவது இயல்பாயினும் தனித்து உண்ணுவது அல்லது பகுத்து உண்ணுவது தனிநபரின் பண்பாகும். உடுத்துவது இயல்பாயினும், எளிமையை விரும்புவது அல்லது ஆடம்பரத்தை விரும்புவது தனியருவரின் பண்பாகும். இவ்வாறு, இயல்புகளையும் பண்புகளையும் ஆய்ந்து, ஒப்பிட்டு, தெளிந்து, தேர்வதன் மூலமே தன்னை அறிய இயலும். மனிதனின் இயல்புகளுக்கும் பண்புகளுக்கும் மனமே உறைவிடமாகவும் ஊடகமாகவும் இயங்குகிறது. அவ்வியல்புகளையும் பண்புகளையும் அறிவதன் மூலம் மனத்தை அறியவும், மனத்தை அறிவதன் மூலம் தன்னை அறியவும் இயலும்.

தனிவாழ்க்கையானாலும் பொது வாழ்க்கையானாலும் தன்னையறிதல் இன்றியமையாத தேவையாகும். உற்றார் – உறவினரோடு, உடன்பணியாற்றுவோரோடு இணைந்து இயங்கிட, இணக்கமாக வாழ்ந்திட தன்னையறிதல் தவிர்க்க இயலாத தேவையாகும். தன் இயல்புகளையும் பண்புகளையும் அறிவது, தன் நிறைகளையும் குறைகளையும் மதிப்பிடுவதைக் குறிக்கும். தனது நிறைகளை அறிவதில் ஆர்வம்கொள்ளும் மனமானது, தன் குறைகளை அறிந்திட ஒப்பாது. அதே வேளையில், பிறரின் குறைகளை அறிவதில் வேகம் காட்டும் மனமானது, பிறரின் நிறைகளை ஏற்காது. பொதுவாக, இது மனத்தின் இயல்பாகும். தன் குறைகளை அறிய மறுப்பதும் பிறர் குறைகளை அறியத் துடிப்பதும் போன்ற இயல்பானது அல்லது அணுகுமுறையானது அமைப்பாக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவே அமையும்.

அமைப்பாக்க நடவடிக்கையின்போது, உடன் பணியாற்றுவோர் மற்றும் அமைப்பாக்கப்பட வேண்டியோரின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது, அவற்றைக் களைவதற்கு ஒத்துழைப்பதாகவே அமைதல் வேண்டும். மாறாக, அவர்களைப் பழிப்பதாகவோ பகைப்பதாகவோ அமைதல் கூடாது. பிறரின் குறைகளைச் சுட்டுவதைப்போலவே நிறைகளைப் போற்றுவதும் வேண்டும். நிறைகளைப் போற்றுவது அமைப்பாக்க நடவடிக்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அது இணக்கத்தை வலுப்படுத்தும். இவ்வாறு, பிறரின் நிறைகளையும் குறைகளையும் நேர்மறையாய் அணுகுவதற்கு தனது நிறைகளையும் குறைகளையும் நேர்மையாய் அணுகுதல் வேண்டும்.

தனது நிறைகளை மட்டுமே அறிவதும் குறைகளை அறியத் தவிர்ப்பதும் நேர்மையான அணுகுமுறையாகாது. தனது நிறைகுறைகளை அறிந்து, நிறைகளைப் பெருக்குவதும் குறைகளைப் போக்குவதும்தான் தன்னை அறிதலை முழுமைப்படுத்தும். பெரும்பாலும், தனது குறைகளை அறிவதற்கே மனம் உடன்படாது. குறைகளை அறிந்தாலும் அவற்றை ஒப்புக்கொள்வதற்கு மனம் இசைவு தராது. குறைகளை ஒப்புக் கொண்டாலும் அவற்றைக் களைவதற்கு மனம் இடம் தராது. மனத்தின் இத்தகு இயல்புகளை அறிவதன் மூலமே, மனத்தை அதற்கேற்பப் பக்குவப்படுத்திட இயலும்.

இவ்வாறு, தன்னையறிவது அல்லது மனத்தின் இயல்புகளை அறிவது, மனத்தைக் கையாளுவதற்கு அடிப்படையாக அமையும். மனத்தைக் கையாளுவதன்வழியே, தேவைக்கேற்ப மனத்தைப் பக்குவப்படுத்த இயலும். மனத்தை அறிவது, மனத்தைக் கையாளுவது, மனத்தைப் பக்குவப்படுத்துவது போன்ற யாவும் மனத்தின் மீதான மூளையின் ஆளுமையை அல்லது அறிவின் ஆளுமையைக் குறிக்கும். மூளையின் அங்கமாக மனமும் மனத்தின் அங்கமாக மூளையும் இயங்குவதால் இவை ஒன்றையன்று ஆளுமை செய்யும். அதாவது, மூளையின் ஒத்துழைப்போடு மனமும், மனத்தின் ஒத்துழைப்போடு மூளையும் இயங்குவதால், ஒன்றன்மீது ஒன்று மாறி மாறி ஆளுமை செலுத்தும். மூளையே மனமாகவும், மனமே மூளையாகவும் இயங்கும் போக்குகளை அறிவதிலிருந்தே மனத்தைக் கையாளும் வழியைக் காண இயலும்.

அமைப்பாக்க நடவடிக்கையில், மனத்தைக் கையாளுதல் இன்றியமையாத ஒரு செயல்திறன் ஆகும். மனம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை மனத்தைக் கையாளும் செயல்திறனால் தீர்மானிக்கலாம். உணர்ச்சிகளால் உந்தப்படும்போது அல்லது அறிவால் வழிநடத்தப்படும் போது, மனம் எத்தகைய தாக்கத்திற்கு உள்ளாகும் என்பதை முன்கூட்டியே உணர்வதற்கு அம்மனத்தின் இயல்புகளையும் ஆற்றல்களையும் அறிந்திருத்தல் வேண்டும். எத்தகைய உணர்ச்சிகள், மனத்திற்கு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அறிந்தால்தான், அம்மனத்தை அதற்கேற்பப் பக்குவப்படுத்திட இயலும். தேவைக்கேற்ப மனத்தை ஒழுங்குபடுத்த, வலுப்படுத்த, பாதுகாக்க மேற்கொள்ளும் செயற்பாடுகளே மனத்தைப் பக்குவப்படுத்துதல் ஆகும். மனத்தைக் கையாளும் திறனால் மட்டுமே மனத்தைப் பக்குவப்படுத்த முடியும். வெற்றி அல்லது தோல்வி, இன்பம் அல்லது துன்பம் போன்ற எவையாயினும், அவற்றை ஏற்கவும், தாங்கவும், சகிக்கவும் பொறுக்கவும் ஏற்ற வகையில் மனத்தைப் பக்குவப்படுத்திட வேண்டும். அதற்குரிய வகையில் மனத்தைக் கையாளுதல் வேண்டும்.

அதாவது, தனது நிறைகுறைகளை மதிப்பிடும் பிறரின் செயற்பாடுகள் மற்றும் விமர்சனங்கள், மனத்தின் மீது உரிய தாக்கங்களை நேர்மறை யாகவோ எதிர்மறையாகவோ ஏற்படுத்தலாம். அத்தகைய சூழல்களில் அவற்றை எதிர்கொள்ள அவற்றுக்கேற்ப மனத்தைப் பக்குவப்படுத்துவது தேவையாகும்.

பிறரின் நிறைகுறைகளை மதிப்பீடு செய்யும் விமர்சனங்களைத் தோழமையாகவும் நேர்மறையாகவும் முன்வைத்தால் மட்டுமே, தன் மீதான நிறைகுறைகள் அல்லது விமர்சனங்களையும் அவ்வாறே எடுத்துக் கொள்ள இயலும். தன் மீதான இத்தகைய விமர்சனங்களை ஏற்கவோ, எதிர்க்கவோ வேண்டுமெனில், தன்னை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்துதல் வேண்டும். விமர்சனம் எளிதானது. சுய விமர்சனம் அவ்வளவு எளிதில் இயலாதது. அமைப்பாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தம்மை சுயவிமர்சனத்திற்குட்படுத்திட பக்குவம் பெற்றிருக்க வேண்டும். சுயவிமர்சனம் செய்துகொள்ள இயலாதோரால் தன்னை அறிந்திட இயலாது. தன்னை அறிய முயலாதோரால் சுயவிமர்சனம் செய்துகொள்ள இயலாது. சுயவிமர்சனம் செய்துகொள்ள முன்வராத எவராலும், உடன் பணியாற்றுவோருடன் ஒருங்கிணைந்து செயலாற்றவோ, மக்களை அமைப்பாக்கிடவோ இயலாது.

தன் மீதான பிறரின் விமர்சனங்களைத் தோழமையாக எதிர்கொள்ளவும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளவும் மனத்தைப் பக்குவப்படுத்தினால், தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்துகொள்வதற்கான துணிவைப் பெறலாம். தனது நிறைகளைத் தானே அறிந்துகொள்ளலாம். ஆனால், தனது குறைகளை பிறரின் விமர்சனங்களிலிருந்தே அறிந்திட இயலும். அந்த வகையில், தன் குறைகளை மதிப்பிடுவதற்கேனும் பிறரின் விமர்சனங்களை வரவேற்கவும் உள்வாங்கவும் வேண்டும். பொதுவாக, எதிர்மறையான விமர்சனங்கள் உள்நோக்கம் கொண்டவையாகவோ, ஆதாரமற்றவையாகவோ இருக்கலாம். எனினும் அவற்றை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். அப்போதுதான் அவ்விமர்சனங்களிலுள்ள உள்நோக்கத்தையும் உள்நோக்கத்திற்கான பின்னணிகளையும் அறிந்திட இயலும். பெரும்பாலும், உள்நோக்கத்துடன்கூடிய எதிர்மறை விமர்சனங்கள், போட்டி மற்றும் பொறாமை உணர்வுகளால் வெளிப்படும் அவதூறுகளாகவோ அடாதப் பழிகளாகவோ இருக்கலாம். இவற்றைப் பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் எதிர்கொள்வது, அமைப்பாக்க நடவடிக்கையில் தவிர்க்க இயலாததாகும்.

அவதூறுகளைப் பொறுப்பதும் சகிப்பதும் பக்குவத்தின் அல்லது முதிர்ச்சியின் வெளிப்பாடுகளாகும். இத்தகைய பக்குவத்தைப் பெற சுயவிமர்சனம் மிகவும் இன்றியமையாததாகும்.

தன் மீதான பிறரின் எதிர்மறை விமர்சனங்கள் தனக்கு எத்தகைய தாக்கத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிவதைப் போல, பிறர் மீதான தன்னுடைய எதிர்மறை விமர்சனங்கள், அவர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அறிதல் வேண்டும். பிறரைப் பாதிக்கும் தன்னுடைய நடவடிக்கைகளை அறிவது சுயவிமர்சனத்தின் மூலம் நிகழ்வதாகும். பிறர் மீதான உள்நோக்கத்துடன் கூடிய தனது எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்ப்பதற்கும், தன் மீதான பிறரின் எதிர்மறை விமர்சனங்களைத் தடுப்பதற்கும் சுயவிமர்சனமே வழிவகுக்கும்.

அமைப்பாக்க நடவடிக்கையில், சுயவிமர்சனம் தனக்குள்ளாகவே நிகழ்தல் பயன்தராது. பிறர் அறியாத வகையில், தான் மட்டுமே அறியும் வகையில் தனக்குத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்வதில் முழுமை இருக்காது. உடன்பணியாற்றுவோர் தமக்கிடையில் கலந்தாய்வு செய்வதும், வெளிப்படையாகத் தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்வதும் தமது குறைகளை ஒப்புக்கொள்வதற்கும், அவற்றைச் சரிசெய்வதற்கும் வழிவகுக்கும். சுயவிமர்சனத்தில், நிறைகளைக் காட்டிலும் குறைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதுதான் குறிப்பிடத்தக்கதாகும். பொதுவாக, விமர்சனங்கள் யாவும் வெளிப்படையாகவே இருக்கும். அதைப்போல, சுயவிமர்சனமும் வெளிப்படையாகவே அமைதல் வேண்டும். இத்தகைய வெளிப்படையான சுயவிமர்சனங்களே உடன்பணியாற்றுவோருக்கிடையில் நட்புறவையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும். எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்க்கச் செய்யும்.
சுயவிமர்சனமானது, ஒருவரின் ஒட்டுமொத்த தனிப்பட்ட வாழ்க்கை பற்றியதாக இருக்க இயலாது. தொடர்புடைய களத்தைப் பற்றியதாக அல்லது பொதுவாழ்க்கை பற்றியதாக அமையும். தனிப்பட்ட வாழ்க்கை யிலும் தன்னைத்தானே, தனக்குள்ளாகவே சுயவிமர்சனம் செய்து கொள்வது, தன்னை முழுமையாக சீர்செய்துகொள்ள வாய்ப்பளிக்கும். இது வெளிப்படையாக அமைதல் தேவையில்லை. எனினும், தன் மனம் அறியும் வகையில் வெளிப்படையானதாக அமையும். அதாவது, சுயவிமர்சனம் தனிவாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் இன்றியமையாத மற்றும் வெளிப்படையான தேவையாகும்.

விமர்சனமும், சுயவிமர்சனமும் தன்னை அறிவதற்கும், தன்னை நெறிப்படுத்துவதற்கும், தன்னை செழுமைப்படுத்துவதற்கும், தன்னை வலுப்படுத்துவதற்கும் ஏதுவான செயற்பாடுகளாகும். அதே வேளையில், விமர்சனங்கள் உள்நோக்கம் கொண்டவையாக இருத்தல் கூடாது. தன் மீதான பிறரின் விமர்சனத்தை நேர்மறையாக அணுகுதல் வேண்டும். பிறர் மீதான தன்னுடைய விமர்சனம் நேர்மையானதாகவும் நேர்மறையான தாகவும் அமைதல் வேண்டும். அவ்வாறின்றி, விமர்சனங்கள் கடுமையும் காழ்ப்பும் கொண்டவையாக அமையும்போது, உறவும் தோழமையும் சீர்குலைந்து, ஒற்றுமை சிதைந்து, குழுவாதப்போக்குகள் மிகுந்து அமைப்பாக்குதலைப் பாழ்படுத்தும். நேர்மையான சுயவிமர்சனங்களால் மட்டுமே, இத்தகைய எதிர்மறையான விமர்சனங்களை அல்லது அவதூறு களைத் தடுக்கவும் தவிர்க்கவும் முடியும். அதேபோல தோழமையை மற்றும் நல்லிணக்கத்தைப் போற்றவும் பெருக்கவும் இயலும்.
சுயவிமர்சனங்களின் மூலம் மனத்தை அறியவும், தேவைக்கேற்ப மனத்தைக் கையாளவும் இயலும். புறச்சூழல்களால் கட்டமைக்கப் பெறும் மனத்தை, அத்தகைய சூழல்களாலேயே முறைப்படுத்தவும் வலுப்படுத்தவும் முடியும். அதாவது மனத்தை முறைப்படுத்தச் சூழல்களை முறைப்படுத்தவும், மனத்தை வலுப்படுத்தச் சூழல்களை வலுப்படுத்தவும் வேண்டும். அதேபோல மனத்தை அறிந்திட சூழல்களை அறிந்திட வேண்டும். மனத்தையும் சூழல்களையும் அறிய, விமர்சனங்களும் சுயவிமர்சனங்களும் வேண்டும்.

இத்தகைய விமர்சனங்களாலும் சுயவிமர்சனங்களாலும் மனத்தைக் கையாளவும் பக்குவப்படுத்தவும் இயலும். மனத்தின் வடிவத்தையும் வலிமையையும் தேவைக்கேற்ப சீரமைத்துக்கொள்வதே மனத்தைக் கையாளும் ஆற்றலாகும். இது மக்களை அமைப்பாக்குவதற்குரிய மகத்தான ஆற்றலாக அமையும்.

விமர்சனம் ஏற்கும் வலிமை பெறுவோம்! – சுய
விமர்சனம் செய்யும் துணிவைப் பெறுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here