அமைப்பாய் திரள்வோம் – 41

0
583

மனத்தை அறிதல் என்பது ஒருவரின் பண்புகள் மற்றும் செயற்பாடுகளை மட்டுமே அறிதல் என்றாகாது. அவரின் மனம் சார்ந்த சூழல்களையும் மனத்தின் போக்குகளையும் ஆய்ந்தறிவதாகும். மனிதனின் இயக்கத்திற்கு மனமே அடிப்படை ஆற்றலாக அமைகிறது என்றாலும், மனத்தின் இயக்கத்திற்கு அம்மனம் சார்ந்த சூழல்களே முதன்மையான ஆதாரமாக அமைகிறது. அதாவது, மனத்தைக் கட்டமைப்பதில், மனத்தை இயங்க வைப்பதில், மனத்தோடு தொடர்புடைய சுற்றுச் சூழல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

பெற்றோரின் வழி பெறப்படும் பாரம்பரியப் பண்புகளால் கருவுறும் பிறவி மனம், படிப்படியாய், தொடர்புடைய புறச்சூழல்களால் உள்வாங்கப்படும் அல்லது திணிக்கப்படும் தாக்கங்களால் முழுமை பெறுகிறது. இவ்வாறு, முழுமைபெறும் மனத்தை அகமனமாகவும் புறமனமாகவும் பிரித்தறியலாம். அதாவது, பிறவி மனத்தை அகமனமாகவும் குடும்பம், சமூகம் போன்றவற்றால் கட்டமைக்கப் பெறும் மனத்தை புறமனமாகவும் புரிந்துகொள்ளலாம். இவ்விரு மனநிலை களையும் அறிந்துகொள்ளுதலே மனத்தை அறிதலாகும்.

புறமனமானது மனிதனைச் சுற்றியுள்ள யாவற்றோடும் கொண்டுள்ள உறவுகள் மற்றும் தொடர்புகளைப் பொறுத்து அமைவதால், அத்தகைய உறவுகளின் அடிப்படையான பண்புகளையும் போக்குகளையும் அறிவதிலிருந்தே மனத்தை முழுமையாக அறிந்துகொள்ளவியலும். அதாவது, மனத்தையறிதல் அல்லது தன்னையறிதல் என்பது தன்னோடு மட்டுமின்றி, தன்னைச் சுற்றிச் சூழ்ந்துள்ள உறவுகளையும் தொடர்புகளையும் அறிவதேயாகும்.

மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் மனத்தின் பங்களிப்பு முதன்மையானதாகும். மனத்தின் ஈடுபாடு இல்லாமல் மனிதனால் எந்தவொன்றிலும் ஈடுபட இயலாது. மனிதன் ஒன்றில் ஈடுபடுவதாயினும் அல்லது பிறரை ஈடுபட வைப்பதாயினும் அதற்கு மனத்தின் ஈடுபாடு இன்றியமையாததாகும். அத்தகைய மனத்தை அறியாமல் மனத்தின் ஈடுபாட்டைத் தீர்மானிக்கவியலாது. அமைப்பாக்க நடவடிக்கையிலும் மனத்தின் ஈடுபாடு மிக இன்றியமையாதது என்பதை உணரலாம். அமைப்பாக்கப் பணிகளை ஆற்றுவோர் மற்றும் அமைப்பை வழிநடத்துவோர், தத்தமது மனநிலையையும் அமைப்புக்குரியவர்களின் மனநிலையையும் அறியாமல் வெற்றிகரமாகச் செயலாற்ற இயலாது.

ஒவ்வொருவரும் தனித்தனியான மனநிலையைக் கொண்டிருந்தாலும் அவரவர் சார்ந்த புறச்சூழல்களைப் பொறுத்து அவர்களுக்கிடையில் ஒரு பொது மனநிலையை யும் கொண்டிருப்பது இயல்பேயாகும். மனிதனுக்கு அகமனமும் புறமனமும் இருப்பதைப் போலவே தனிமனமும் பொதுமனமும் உண்டு. அகமனமும் புறமனமும் இணைந்த ஒரு மனத்தை ‘தனிமனம்’ என அறியலாம். இது தனிநலனை முதன்மை யாகக் கொண்டிருக்கும். தனிமனமும் கூட்டுமனமும் இணைந்த ஒரு மனத்தை ‘பொதுமனம்’ என அறியலாம். இது பொதுநலனை முதன்மையாகக் கொண்டிருக்கும். இத்தகைய தனிமனத்தையும் கூட்டுமனத்தையும் இணைத்து பொதுமனத்தை வென்றெடுப்பதே அமைப்பாக்க நடவடிக்கையின் அடிப்படையாகும்.

ஒரு பொது அடையாளத்தின் அடிப்படையிலும் குறைந்த அளவிலான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து இயங்கும் ஒருமித்த மனோநிலையே ‘கூட்டுமனம்’ எனலாம். கூட்டு சேருவோரின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டிருந்தால் இது அவர்களுக்கான குழுமனம் அல்லது தனிமனமாகவே அமையும்; பொதுமனமாகாது. கூட்டுமனம் கொண்டியங்கும் ஒரு குழுவோடு இணையாத, இணைய வாய்ப்பில்லாத, அதேவேளையில், பொது அடையாளமுள்ள பிறரின் நலன்களையும் முதன்மையாகக் கொண்டிருந்தால், அதுவே பொதுமனமாகும்.

குழுமனம் அல்லது கூட்டுமனத்தை ‘அமைப்புமனம்’ என்றும் அறியலாம். இது குடும்பம், குலம், சாதி, மதம், மொழி, இனம், தேசம், அரசு போன்ற அமைப்பு வடிவங்களில், அவ்வப்போது தேவைகளின் அடிப்படையில் மாறி மாறி இயங்கும். இவை மட்டுமின்றி, இயக்கம், கட்சி மற்றும் வணிக நிறுவனம் போன்ற அமைப்பு வடிவங்களிலும் கூட்டுமனம் இயங்குவதைக் காணலாம். அதாவது, தன்மனம் என்னும் தனிமனம் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் தான் சார்ந்துள்ள ‘குடும்பமனம்’ என்னும் கூட்டுமனமும் உண்டு. அதைப்போலவே குலமனம், சாதிமனம், மதமனம் போன்ற ஏராளமான கூட்டுமனமென்னும் அமைப்புமனங்கள் உண்டு. இவை யாவும் ஒவ்வொருவருக்குமுள்ள ‘சமூக உளவியல்’ பண்பாகும். அமைப்பாக்க நடவடிக்கைகளில் இத்தகைய கூட்டுமனமென்னும் ‘சமூக உளவியலே’ மூலாதாரமாக இயங்குகிறது. தனிநபர் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான தேவைகளின் அடிப்படையில் அல்லது தொடர்புகளின் அடிப்படையில், இத்தகைய கூட்டுமனமென்னும் சமூக உளவியலின் பண்புகள் மற்றும் போக்குகள் தன்னியல்பாகவே அமைந்திருப்பதைக் காணலாம்.

ஒருவரின் உளவியல் பண்புகள் மற்றும் போக்குகள் யாவும் அவருக்குரிய சமூக உளவியலோடு தொடர்புடையவையாகும். சமூக உளவியல் பார்வை யின்றி தனிமனித உளவியலை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல் இயலாது. ஒருவர் தன்னைத்தானே அறிந்து கொள்ளுவதாயினும் பிறரை அறிந்து கொள்ளுவதாயினும் அவரவர் சார்ந்த சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாடு போன்ற புறச்சூழல்களின் பின்னணிகளைப் பற்றிய புரிதல் இன்றியமையாத ஒன்றாகும். இப்பின்னணிகள் ஒவ்வொன்றும் தனிநபரின் உளவியலில் தனித்தனியே ஆளுமை செலுத்தக் கூடியவையே ஆகும். குடும்பம், குலம், சாதி, மதம் போன்ற சமூக உளவியல் கூறுகள் மட்டுமின்றி, அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றின் உளவியல் கூறுகளும் தனிநபரின் உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. அதாவது, ஒவ்வொரு தனிமனித உளவியலிலும் சமூக உளவியலோடு, அரசியல்உளவியல், பொருளாதாரஉளவியல் மற்றும் பண்பாட்டுஉளவியல் போன்ற புறச்சூழல் உளவியல் பின்னணிகள் இணைந்த கூட்டுஉளவியலின் தாக்கம் இடம்பெற்றிருக்கும். இப்பின்னணிகள் பற்றிய புரிதலின்றி மக்களை வெற்றிகரமாக அணிதிரட்டவோ அமைப்பாக்கவோ இயலாது.

பொதுவாக, தனிமனித உளவியலும் கூட்டுஉளவியலும் இணைந்தே தனிநபரை வழிநடத்துகின்றன. தான் என்கிற தனிமனமும் தன்குடும்பம், தன்சாதி, தன்மதம், தன்மொழி, தன்இனம், தன்நாடு போன்ற வகையிலான கூட்டுமனமும் இணைந்தோ பிரிந்தோ மனிதனை இயக்கிக் கொண்டிருக் கின்றன. அமைப்பாக்க நடவடிக்கையில், இத்தகைய தனிநபருக்கான கூட்டுமனத்தின் அல்லது கூட்டுஉளவியலின் பங்களிப்பே முதன்மையான தாகும். ஒவ்வொருவரிடமும் இயல்பாக அமைந்துள்ள கூட்டுமனம், ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையில், பொதுநலன்களை முன்னிறுத்தி பொதுமனமாக ஒருங்கிணையும் நிலையில்தான் அமைப்பாதல் நிகழ்கிறது. அவ்வாறு பொதுநலன்களை முன்னிறுத்தாத நிலையில் தனிநபரிடையே காணும் கூட்டுமனமும் தனிநலன்களுக்குரியதாகவே அமையும்.

‘நான்’, ‘என்’ என்னும் தனிநலன் மனோநிலை மேலோங்கும் நிலையில் கூட்டுநலன்களும் பொதுநலன்களும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. பிறரோடு இணைவதற்கும் பிறரை இணைப்பதற்கும் இம்மனோநிலையே மிகப்பெரும் தடையாக அமைகிறது. அதாவது, அமைப்பாக்க நடவடிக்கைக்கு இது முற்றிலும் பகையாக விளங்குகிறது. தனிநலன்கள் மற்றும் கூட்டுநலன்களை அடிப்படையாகக் கொண்ட மனோநிலையிலிருந்து பொதுநலன்களுக் குரிய மனோநிலையைப் பெறுவதற்கான பரிணாமப் போராட்டமே அமைப்பாதலாகும். அமைப்பாக்க நடவடிக்கையில் ஒவ்வொரு தனிநபரும் இத்தகைய உளவியல் போராட்டங்களை எதிர்கொண்டேயாக வேண்டும். இதில் வெற்றி பெறுவோரால் மட்டுமே அமைப்பாக்க நடவடிக்கையையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல இயலும்.

பொதுநலன்களுக்கான பொதுமனோநிலையை வென்றெடுத்திட தன்னையறிதலும் பிறரையறிதலும் மிக இன்றியமையாத, சவால்கள் நிறைந்த தேவைகளாகும். தன்னை அறியமுடியாதவர்களால் ஒரு போதும் பிறரை அறியவே முடியாது. தன்னையோ பிறரையோ அறிய இயலாதவர் களால் ஒரு போதும் தன்னையும் பிறரையும் அமைப்பாக்கவே இயலாது. பொதுவாக, மனிதன் தன்னை அறிவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை விட தன்னைச் சுற்றியுள்ளவர்களை அறிவதற்கே பெரிதும் முயற்சிக் கிறான். தன்னை அறிவதற்கு முயற்சிக்காத நிலையில் பிறரை அறிவதற்கான அவனது முயற்சி வெற்றி பெறுவதில்லை. தன்னை அப்படியே ஏற்றுக் கொள்கிற அவனால், பிறரை அவ்வாறு ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தான் மட்டுமே தனக்குப் பாதுகாப்பு என நம்பமுடிகிற அவனால் பிறரை அவ்வாறு நம்பமுடிவதில்லை. தான் மட்டும்தான் தனக்குப்போட்டியாக இருப்பதில்லை என்பதை அறியமுடிகிற அவனால் பிறரைப் போட்டி யாளர்களாக மட்டுமே கருதமுடிகிறது. இவ்வாறு தன்னை மட்டுமே அய்யங்களுக்கு அப்பாற்பட்டு முழுமையாக ஏற்றுக்கொள்வதனால், தன்னைத்தானே உற்றுக் கவனிக்கவோ, கண்காணிக்கவோ, தன்னை ஆய்வுக்குட்படுத்தவோ, விசாரணைக்கு ஆட்படுத்தவோ முனைவ தில்லை. மாறாக, பிறரைக் கவனிப்பதிலும் கண்காணிப்பதிலும் விசாரிப்பதிலுமே ஈடுபாடுகொள்கிறான்.

தனது எண்ணங்களை, தனது உணர்ச்சிகளை, தனது செயற்பாடுகளை உற்று நோக்கிடவோ, ஆய்வுக்குட்படுத்திடவோ, நிறைகுறை காணவோ முனைப்புக் காட்ட இயலாத எவராலும் ஒருபோதும் தன்னை அறியவே இயலாது. தன்னுடைய எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் யாவும் தன்னுடைய நலன்களுக்குப் பாதுகாப்பானவை என்றாலும் அவை பிறரின் நலன்களுக்கு எவ்வகையில் பாதிப்பானவை என்பதை அறிவதிலிருந்தே தன்னை அறிவது தொடங்குகிறது எனலாம்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஏதோ ஒரு வகையிலான ஞாயங்கள் அல்லது காரணங்கள் உண்டு. அவரவரின் நலன்களிலிருந்தே அத்தகைய ஞாயங்கள் அல்லது காரணங்கள் அவர்களால் கற்பிக்கப்படுகின்றன. பொதுவாக, தன்னளவில் ஒருவன் தன் நடவடிக்கைகளுக்கு ஞாயம் கண்டபின்னரே அதில் ஈடுபடுகிறான். அச்சூழல்களில், பிறரின் நலன்களைப் பற்றியோ, பிறருக்கான ஞாயங்களைப் பற்றியோ, பிறருக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ, ஒருபொழுதும் அவனால் சிந்திக்க இயலுவதில்லை. தன்னுடைய செயற்பாடுகள் பிறருக்கு அல்லது பொதுநலன்களுக்கு எதிரானவை, ஊறு விளைவிப்பவை, ஞாயமற்றவை, நீதியற்றவை என அறிந்திருந்தாலும் தனது நலன்களுக்காக அவன் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை. அறிந்தே, துணிந்தே அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். அவை, சட்டத்திற்கும் சமூகத்திற்கும் எதிரான குற்றங்கள் எனினும், தன்னளவில் சரியானது என்றே ஞாயங்களைத் தேடுகிறான். தன்னை ஊக்கப்படுத்தும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் மட்டுமே வரவேற்கிறான். எதிர்ப்புகளையும் எதிரான விமர்சனங்களையும் எதிர்கொள்ள மறுக்கிறான். முற்றிலும் அவற்றை வெறுக்கிறான். மனிதனின் இத்தகைய போக்குகளுக்கு, தனக்கான தனிநலன்களை மட்டுமே முன்னிறுத்தும் அவனது மனோநிலையே அடிப்படையாகும். கூட்டு நலன்களையோ பொதுநலன்களையோ அவன் மனம் உள்வாங்கவில்லை என்பதேயாகும்.

கூட்டுநலன்கள் யாவும் பொதுநலன்களாகாது. தனிநலன்களின் சற்று விரிந்த பரப்பையே கூட்டுநலன்களாக அறியலாம். குடும்ப நலன்களும் கூட்டுநலன்களாக விளங்கும் தனிநலன்களேயாகும். குடும்பம் என்கிற அமைப்பு கூட்டுநலன் என்னும் தனிநலன்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆயினும், இத்தகைய கூட்டுநலன்களின் விரிவாக்கமே பொதுநலன்களாகப் பரிணாமம் பெறுகிறது. சாதிநலன்களாயினும் மதநலன்களாயினும் மொழி, இனநலன்களாயினும் இவை யாவும் கூட்டுநலன்கள் என்னும் குழுநலன்களே ஆகும். குடும்பம், சாதி, மதம், மொழி, இனம் என கூட்டுநலன்களின் பரப்பு விரிவடைய விரிவடைய அது பொதுநலன்கள் என்னும் படிமத்தைப் பெறுகிறது. எனினும், அவை பொதுநலன்களின் முழுமையாகாது. குறிப்பிட்ட குடும்பம், குறிப்பிட்ட சாதி, குறிப்பிட்ட மதம் போன்ற குறிப்பிட்ட வரம்புகளைக் கடந்த அனைத்துத் தரப்பு எளியோருக்குமான நலன்களையே பொதுநலன்களாக அறியலாம்.

பொதுவாக, மனிதனின் உளவியல் போக்கானது, அவனது தனிநலன்களி லிருந்து கூட்டுநலன்களும், கூட்டுநலன்களிலிருந்து பொதுநலன்களும் என்கிற படிநிலையில் நீட்சியடைவதாகவே அமைகிறது. பொதுநலன் களுக்காக தனிநலன்களையும் கூட்டுநலன்கள் என்னும் குழுநலன்களையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் அல்லது இழக்க வேண்டும் என்பதில்லை. மாறாக, பிறர்நலன்கள் அல்லது பொதுநலன்கள் குறித்த பார்வை, சிந்தனை, செயல் போன்றவற்றில் ஈடுபாடுகொள்ளும் மனோநிலையைப் பெறுதல் வேண்டும். இவற்றை உள்வாங்கும் நடைமுறைப் போக்கில்தான், மனிதனுக்குத் தன்னை அறிதல் நிகழும். கூட்டுநலன்கள் அல்லது பொதுநலன்களுக்கான கூட்டுநடவடிக்கைகள் அல்லது அமைப்பாக்க நடவடிக்கைகளின் போதுதான் கூட்டுமனம் அல்லது பொதுமனம் என்னும் மனோநிலை உருவாக்கம் பெறுகிறது. இத்தகைய பொதுமனோநிலை உருவாக்க நடைமுறையில் தான் மனிதனின் தனிநலன்களுக்கான தனிமனம் சீண்டப்படுகிறது.

ஏற்கனவே கட்டமைக்கப்பெற்ற, தனிநல உணர்ச்சிகள் நிறைந்த தனிமனம் அத்தகைய சீண்டுதல்களை அல்லது தாக்குதல்களை எளிதில் ஏற்பதில்லை. அத்தகைய சூழல்களில் எதிர்த்துத் தெறிக்கும் உணர்ச்சிகளிலிருந்தும் எதிர்வினைப் போக்குகளிலிருந்தும் மனிதன் தன்னை அறிந்துகொள்ளும் வாய்ப்பு நிகழ்கிறது. குறிப்பாக, பொதுநலன்களுக்கான மனோநிலையை மேலும் வலுப்படுத்தும் போக்கில் மட்டுமே, எத்தகைய உணர்ச்சிகளால் தனது தனிமனம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அதன் இறுக்கத்தையும் வலிமையையும் அறிந்துகொள்ளுதல் இயலும். தனிமனத்தின் இறுக்கத்தைத் தளரவும் நெகிழவும் செய்வதன் மூலமே பொதுநலன்களுக்கான பொதுமனத்தை உள்வாங்க இயலும். ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட தனது நலன்களுக்கான உணர்ச்சிகளாலும் கருத்துக்களாலும் நிரப்பப்பட்டுள்ள மனத்தில், பொதுநலன் களுக்கான புதிய கருத்துகளை, மாற்றுக் கருத்துகளை உள்வாங்கும் வகையில் இடம் உருவாக்க வேண்டும். இவ்வாறு, புதிய கருத்துக்களையும் மாற்றுக் கருத்துகளையும் அனுமதிப்பது அமைப்பாக்க நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமையும்.

பொதுநலன்களுக்கான மனோநிலையை உள்வாங்கும் நடைமுறையின் போது தனிநலன்களுக்கான மனோநிலையில் விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்ற உடைவுகள் நிகழும். ‘நான், என்’ என்கிற தனிப் படிமங்கள் உடைந்து ‘நாம், நம்’ என்கிற கூட்டுப் படிமங்கள் உருவாக்கம் பெறும். கூட்டுநடவடிக்கைகள் அல்லது அமைப்பாக்க நடவடிக்கைகளின்போது நிகழும் இத்தகைய உடைவுகள், ஒவ்வொருவரும் தன்னை அறிவதால் மட்டுமே நடந்தேறுவதாகும். தன்னை அறிவோரால் மட்டுமே பிறரையும் அறியமுடியும். பிறருக்காக தமது நலன்களை விட்டுக் கொடுக்கவும் இழக்கவும் முடியும்.

பிறரை அறிதலுக்கான முயற்சி பிறரிலிருந்து தொடங்குவதில்லை. அம்முயற்சியையும் தன்னை அறிதலுக்கான ஆதாரங்களிலிருந்தே நிகழ்த்த இயலும். பொதுவாக, தன்னை அறிவதற்கே தன்மனம் அவ்வளவு எளிதில் ஒப்புவதில்லை; ஒத்துழைப்பதில்லை. உற்றுநோக்கவோ, ஒப்பீடுசெய்யவோ, உண்மை உணரவோ இயலாதவகையில் உணர்ச்சிகளால் தடுமாற வைக்கும்; குற்றம் குறைகளைத் திருத்த மறுக்கும்; தன்னைப் பற்றி தனக்கு மட்டுமே தெரிந்த ஆதாரங்களையும் ஆய்வு செய்வதைத் தவிர்க்கும்; தன்னை மட்டும் உடனுக்குடன் மன்னிக்கும். இவை போன்ற தனிநல உளவியல் போக்குகளால் தன்மனம் தன்னைப் பற்றிய முழுப் பரிமாணத்தை அறிய இடமளிப்பதில்லை. தன்னை அறிவதற்கே இவ்வளவு சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில், பிறரை அறிவதில் எத்தகைய இடர்கள், தடைகள் குறுக்கிடும் என்பதை உணரலாம்.

பிறரின் உணர்வுகளைத் தன் உணர்வுகளாக உள்வாங்குதலே பிறரை அறிதலுக்கான அடிப்படையாகும். பிறரின் மனத்தை அறியாமல் பிறரின் உணர்வுகளை அறிய இயலாது. பிறரின் சூழலை அறியாமல் பிறரின் மனத்தை அறிய இயலாது. பிறரின் மனமும் தன்மனத்தைப் போலவே பிறரின் சூழல்உளவியலை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். அதாவது, அவர் சார்ந்த சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாடு போன்ற புறநிலைக்கூறுகளின் தாக்கங்களை அறிதல் மூலமே அவரின் சூழல்உளவியலை அறிய முடியும். இத்தகைய அறிதலுக்கு, தொடர்புடைய பிறரோடு பொதுநலன்களை முன்னிறுத்தி கலந்து, இணைந்து இயங்குதல் வேண்டும். இது பிறரை அறிவதற்கான ஒரு வழிமுறையாகவும் அமைப்பாக்க நடைமுறையாகவும் அமையும்.

பிறர்நலன் அல்லது பொதுநலன்களுக்கான புரிதலோடு தன்னையறிதலும் பிறரை அறிதலும் நிகழும்போது, பிறர்வலியையும் தன்வலியாய் உணர முடியும். இவ்வாறு உணரமுடியாதவர்களால் பிறரோடு இணைந்து தொடர்ந்து இயங்கமுடியாது. ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ போல, ‘தானே பிறராய்’ மாறி உணர்தல் அமைப்பாக்க நடவடிக்கையில் இன்றியமையாத தாகும். உடன் பணியாற்றுவோர் ‘தானே பிறராய்’ மாறி ஒருவரையொருவர் அறிந்து ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்துச் செயலாற்றுதல் வேண்டும். அத்துடன் அமைப்பாக்கப்பட வேண்டியோரின் தனிநபர் உளவியலையும் அவர் சார்ந்த சமூக உளவியல் அல்லது சூழல்உளவியலையும் அறிந்து அவர்களுக்கு ஈடுகொடுத்து இயங்குதல் வேண்டும். அதாவது, அமைப்பாக்கப்பட வேண்டியோரின் பொதுஉளவியலோடு தன்னைத் தகவமைத்துக்கொள்வதன் மூலமே அவ்வாறு அவர்களை அறியவும் அவர்களோடு இணையவும் இயங்கவும் இயலும். தனிநலன் சார்ந்த தனிமனோநிலையிலிருந்து பொதுமனோநிலையை வென்றெடுக்காமல், பொதுஉளவியல் அல்லது மக்கள் உளவியலை அறிந்துகொள்ளவோ அமைப்பாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்தவோ இயலாது.

தனிநலன் உடைபடப் பொதுநலன் பிறக்கும்! – அதுவே

தன்னையும் பிறரையும் அறிந்திட வைக்கும்!

இவண்
தொல்.திருமாவளவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here