அமைப்பாய்த் திரள்வோம் – 43

0
675

பொதுவாக விமர்சனம் என்பது குற்றம்-குறைகளைச் சுட்டிக் காட்டுவதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.

குறை என்பது விமர்சனத்தின் ஒரு பகுதியே ஆகும், குறைகள் மட்டுமின்றி நிறைகளையும் மதிப்பீடு செய்வதே விமர்சனமாகும். விருப்பு வெறுப்பின்றி, ஒருசார்பு நிலையின்றி பிறரின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் அணுகுமுறைதான் விமர்சனத்தின் முழுமையாகும். பிறரை மதிப்பிடுவது ‘விமர்சனம்’ எனில், தன்னைத்தானே மதிப்பிடுவது ‘சுயவிமர்சனம்’ ஆகும்.

பொதுவாக, பிறரை விமர்சனம் செய்வது மிகவும் எளிது. அதிலும் குற்றம் காணும் விமர்சனம் எளிதிலும் எளிது. ஆனால், சுயவிமர்சனம் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. தன்னிலிருந்து விலகிநின்று தன்னைத்தானே மதிப்பீடு செய்து, தனது நிறைகளை மட்டுமின்றி குறைகளையும் அறிந்து அவற்றை ஏற்பதைக் குறிக்கும். பிறரின் குறைகளைக் காண்பதும் தனது குறைகளைக் காணத் தவிர்ப்பதும் மனித இயல்பு. பிறரின் குறைகளை ஊதிப் பெருக்கிப் பூதாகரப்படுத்திப் பரப்புவதும், தனது குறைகளை நுணுக்கிச் சுருக்கி மூடிமறைத்து வெளிப்படுத்தத் தவிர்ப்பதும் மனிதனின் பொது இயல்பு. பெரும்பாலும் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்ள மனிதன் ஒப்புக் கொள்வதில்லை. பிறரின் குற்றங்களுக்காக அவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று துடிக்கும் மனிதன், தனது குற்றங்களுக்காகத் தன்னை எளிதில் மன்னித்துவிடுகிறான். தன்னைத்தானே ஒருபோதும் தண்டித்துக் கொள்வ தில்லை. தன்னுடைய செயற்பாடுகள் எவ்வளவு கொடிய குற்றங்களாயினும் அவற்றைக் குற்றங்களாகவே ஏற்றுக்கொள்வதில்லை. குறைகளாயினும் நிறை களாயினும் அவற்றை மதிப்பிடும்போது மற்றவர்களுக்கு ஓர் அளவுகோல்; தனக்கு ஓர் அளவுகோல்! மற்றவர்களுக்கு ஓர் அணுகுமுறை; தனக்கு ஓர் அணுகுமுறை! மற்றவர்களுக்கு ஒரு ஞாயம்; தனக்கொரு ஞாயம்! மற்றவர்களுக்கு ஒரு நீதி; தனக்கொரு நீதி! இவையே பெரும்பாலும் மனிதனின் பொதுவான பண்புகளாகும்.

இவ்வாறான பண்புகளைக் கொண்ட மனிதன் எவ்வாறு தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்ள முன்வருவான்? தன்னைத்தானே உணர்ந்து கொள்வது என்பது, தனது குறைநிறைகளை அறிந்து தனது வலிமையையும் வலுவின்மை யையும் அளவிட்டுப் புரிந்துகொள்வதாகும். இது ‘தன்னையறிதலாகும்’. தன்னை யறிதல் சுயவிமர்சனமாகாது. குறிப்பிட்ட செயற்பாடுகளில் குறிப்பிட்ட அளவுகளில் தனது குறைநிறைகளை வெளிப்படையாக அறிவிப்பது மற்றும் ஒப்புக்கொள்வது தான் சுயவிமர்சனம் ஆகும். பொதுவாழ்க்கையில் ஈடுபாடுள்ளவர்கள், அமைப்பு நலன் கருதியும் மக்கள் நலன் கருதியும் தன்னுடன் பணியாற்றுவோருடன் விமர்சனமும் சுயவிமர்சனமும் செய்துகொள்வது இன்றியமையாதத் தேவையாகும்.

சுயவிமர்சனம் செய்யும் துணிவில்லாதவர்களின் விமர்சனங்கள் நேர்மையானவை யாக அமையாது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும் தாங்கிக்கொள்ளவும் வலிமை யில்லாதவர்களால் சுயவிமர்சனம் செய்துகொள்ள இயலாது. சுயவிமர்சனத்திற்கு விமர்சனங்களே ஏதுவான கூறுகளாக அமையும். பொதுவாக, விமர்சனங்களை வெறுப்பதும் சுயவிமர்சனங்களைத் தவிர்ப்பதும் பெரும்பாலானவர்களின் இயல்பாகும். தன்னால் பார்க்க இயலாத அல்லது தான் பார்க்க விரும்பாத தன்னைப் பற்றிய எதிர்மறைப் பண்புகளை அல்லது குறைபாடுகளை பிறரால் மட்டுமே பார்க்க இயலும். அந்த வகையில் பிறர் செய்யும் விமர்சனங்கள் தன்னை அறிந்துகொள்வதற்கு வழிகாட்டக் கூடியவையாக அமையும். அவை, அவதூறுபரப்பும் உள்நோக்கம் கொண்டவையாகவோ செழுமைப்படுத்தும் உயர்நோக்கம் கொண்டவையாகவோ வெளிப்படுத்தப்படலாம். அவற்றைப் பிரித்தறிவதும் அதனடிப்படையில் அவற்றை ஏற்பதும் தவிர்ப்பதும் விமர்சனத்துக்குரியோரின் கடமையாகும்.

தன்னைக் காயப்படுத்தக்கூடிய, கடும்வலி தரக்கூடிய விமர்சனங்கள் உள்நோக்கம் கொண்ட அவதூறுகளாயிருப்பின், அவற்றைச் சகித்துக் கொள்வதும், நல்நோக்கம் கொண்ட உண்மைகளாயிருப்பின், அவற்றைப் பொறுத்துக்கொள்வதும் தவிர்க்க இயலாதவையாகும். தோழமையோடும் உரிமையோடும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வெளிப்படுத்தப்படும் விமர்சனங்கள் வலிதரக்கூடியவையாக இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு உள்வாங்கிக்கொள்வதும், அவற்றைச் சீர்செய்து தன்னை செழுமைப் படுத்திக் கொள்வதும்தான் தன்னை வலிமைப்படுத்திக்கொள்ள ஏதுவாக அமையும்.

பொதுவாக, விமர்சனங்கள் தோழமை கலந்த, நல்லெண்ணம் நிறைந்த அணுகுமுறைகளைக் கொண்டிருத்தல் வேண்டும். கசப்பும் வெறுப்பும் கலந்த விமர்சனங்கள் தோழமையை, நட்புறவைச் சிதைக்கும். அத்தகைய விமர்சனங்களைத் தவிர்ப்பவர்களால் மட்டுமே பொதுவாழ்வில் வெற்றிகர மாகப் பயணிக்க முடியும். அமைப்பாக்க நடவடிக்கையில் இது மிகமிக இன்றியமையாத ஒன்றாகும்.
கொள்கை-கோட்பாட்டுப் புரிதலும் தீவிர அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பும் எவ்வளவு இன்றியமையாத தேவையாக இருந்தாலும் அவற்றைவிட உடன் பணியாற்றுவோருடனும் மக்களுடனுமான ‘நட்பார்ந்த, தோழமையான அணுகுமுறை’ இன்றியமையாததாகும். குறை சொல்வது, குற்றம் காண்பது, கோள்மூட்டுவது, ஆதிக்கம் செய்வது, அவமதிப்பது போன்ற அணுகுமுறைகள் நட்புறவுக்கும் தோழமைக்கும் நேரெதிரானவையாகும்.

அதாவது, தலைசிறந்த கொள்கையாக இருந்தாலும், மிக உயர்ந்த கோட்பாடாக இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்து வதற்குத் தீவிரமான ஈடுபாடும் கடுமையான உழைப்பும் மட்டுமே போதாது; அதற்கான உத்திகளும் அணுகுமுறைகளும் மிகமிக இன்றியமையாதவையாகும்.

எந்தவொன்றையும் வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படவேண்டும். இவையே, உத்திகள் மற்றும் அணுகுமுறைகளாகும். பெரும்பாலும் வெற்றியாயினும், தோல்வியாயினும் அதற்கு உத்திகளும் அணுகுமுறைகளும்தான் அடிப்படைக் காரணிகளாக இருக்கும்.

சதிகளை அறுத்து, தடைகளைத் தகர்த்து, இலக்கினை எட்டும் வழிகளை வகுத்துச் செயல்படுத்தும் நடைமுறையை ‘உத்தி’ என அறியலாம். இடம், பொருள், ஏவலைப் பொறுத்து இந்தச் செயல்முறை வகுக்கப் பெறும். ‘இடம்’ என்பது செயற்பாட்டுக்கான ‘களத்தைக்’ குறிக்கும். ‘பொருள்’ என்பது செயற்பாட்டுக்கான ‘நோக்கத்தைக்’ குறிக்கும். ‘ஏவல்’ என்பது செயற்பாட்டுக்கான ‘அதிகாரத்தைக்’ குறிக்கும்.

ஒரு செயல் நிகழும் இடம் அல்லது நிகழ்த்த வேண்டிய இடம் எத்தகைய பின்னணிகளைக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, அதற்கேற்ற வகையில் செயல்முறைக்கான வழிவகைகளைக் கண்டறிதல் வேண்டும். இடம் என்பது ஒரு பகுதியை மட்டுமே குறிப்பதில்லை. குறிப்பிட்ட செயலுக்குரியவர்கள், அச்செயலில் பங்கேற்பவர்கள், அச்செயலுக்கு ஆதரவானவர்கள் – எதிரானவர்கள் என தொடர்புடையவர்களின் ‘தகுதி’யையும் குறிக்கும். அதாவது, யாரிடம் பேசுகிறோம், யாரிடம் கருத்துக் கேட்கிறோம், யாரிடம் பணியாற்றுகிறோம், யாரிடம் உதவி பெறுகிறோம், யாரிடம் உறவாடுகிறோம், யாரிடம் பகையாடுகிறோம் என செயலாற்றும் களத்தில் யார்யாரிடம் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்பதுவும் ‘இடம்’ என்பதைக் குறிக்கும். அதாவது, செயல் நிகழும் ‘பகுதி’யை மட்டுமின்றி, செயலுக்குத் தொடர்புடையோரின் பின்னணி, திறன் ஆகிய ‘தகுதி’யையும் குறிக்கும். உத்திகள், அணுகுமுறைகள் போன்ற செயல்முறைகள் இத்தகைய இடனறிந்து அமைதல் வேண்டும். இடனறிந்து கையாளாத உத்திகளும் அணுகுமுறைகளும் வெற்றிகரமாக அமையாது என்பதையும்விட, தேவையற்ற சிக்கல்களையும் சேதங்களையும் வலிகளையும் உருவாக்கும்.

எதைச் செய்வது, எங்கே செய்வது, எவர் செய்வது, எப்போது செய்வது, எப்படிச் செய்வது போன்றவற்றுக்கான விடைகாணும் வழிமுறைகள், வெளிப்படையான, மறைமுகமான மற்றும் தொலைநோக்கான நுட்பங்களையும் தந்திரங்களையும் கொண்டிருக்கும். இத்தகைய செயல் நுட்பங்களையும் செயல் தந்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட செயல்முறைகளே வெற்றிகரமான உத்திகளாக அமையும். இவ்வுத்திகளை வகுப்பதில் ‘இடம்’ என்பது மிகவும் அடிப்படையான ஒரு தேவையாக இருப்பதைப் போல, பொருள் மற்றும் ஏவல் ஆகியவையும் இன்றியமையாத கூறுகளாக விளங்குகின்றன.

‘பொருள்’ என்பது பொதுவாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களைக் குறிப்பதாகவே புரிந்துகொள்ளப்படும். ஆனால், இவ்விடத்தில் ‘பொருள்’ என்பது செயலுக்கான நோக்கம் மற்றும் குறிக்கோள்களைக் குறிக்கும். ஒரு செயல்திட்டத்தில் இறுதியாக எட்டவேண்டிய இலக்கு எதுவோ அதுவே நோக்கம் என்பதாகும். இறுதி இலக்கை எட்டுவதற்கு இடையிடையே தொடவேண்டிய இடைக்கால இலக்குகள் அல்லது நிறைவேற்றவேண்டிய குறுகியகால செயல்திட்டங்கள் எவையோ அவையே குறிக்கோள்கள் என்பனவாகும். அதாவது, குறிப்பிட்ட சில இலக்குகளின் வழியாகவே இறுதி இலக்கைச் சென்றுசேர இயலும். இறுதி இலக்கு நோக்கம் எனில், இடை இலக்குகள் குறிக்கோள்கள் எனப் புரிந்துகொள்ளலாம். இத்தகைய நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் போன்றவற்றையும் அடிப்படையாகக் கொண்டே உத்திகளும் அணுகுமுறைகளும் வரையறுக்கப்படும். எது நோக்கம், என்ன குறிக்கோள் என்னும் புரிதல்களின்றி உத்திகளை வரையறுத்திட இயலாது. செயலுக்கான நோக்கம் மற்றும் குறிக்கோள்கள், செயற்களத்தில் நேர்மறையாகத் தொடர்புடையோரின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் யாவும் ஒரே நேர்க்கோட்டில் அமையும் வெற்றிகரமான வழிமுறைதான் பொருளறிந்து வகுக்கப்பெறும் உத்திகளாகும்.

இவ்வாறு இடமறிந்து, பொருளறிந்து உத்திகளை வகுத்தாலும் ஏவலறிந்து வகுப்பதில் மட்டுமே அது முழுமைபெறும். ஏவல் என்பது, ஒரு குறிப்பிட்ட செயலை யார் செய்வது, யாருக்காகச் செய்வது, யாரைப் பகைத்துச் செய்வது என வகுக்கப்படும் அச்செயலுக்கான வழிமுறைகளைக் குறிக்கும். குறிப்பாக, செய்பவரின் செயல்திறன், செய்ய ஏவியவரின் வலிமைப் பின்னணி மற்றும் செயற்களத்தில் தொடர்புடையவர்களின் அதிகாரம் அல்லது ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது, தன்வலிமை மற்றும் மாற்றான் வலிமை ஆகியவற்றை அறிந்து அவற்றினடிப்படையில் செயல்முறை அல்லது உத்திகளை வகுத்திட வேண்டும். அவ்வுத்திகளின் அடிப்படையில் அணுகுமுறைகள் அமைந்திட வேண்டும்.
அமைப்பாக்க நடவடிக்கையிலும் உத்திகள் மற்றும் அணுகுமுறைகள் போன்றவை இடம், பொருள், ஏவல் அறிந்து வரையறுக்கப்படுதல் வேண்டும். ஒரு செயல் திட்டத்தில் இவ்வாறு வகுக்கப்படும் உத்திகள் எவ்வளவு இன்றியமையாதவையோ, அதைவிடவும் கூடுதலாக அணுகுமுறைகள் மிகமிக இன்றியமையாதவையாகும். வெற்றிகரமான அணுகுமுறைகளின் மூலமே உத்திகளையும் வெற்றிகரமானவையாக உறுதிப் படுத்திட இயலும். அணுகுமுறைகள் பக்குவமானவையாகவோ முதிர்ச்சி யானவையாகவோ அமையவில்லையெனில் உத்திகளும் வலுவிழந்துவிடும்.

பொதுவாக, அணுகுமுறைகள் பெரும்பாலும் இரண்டு வழிமுறைகளை அல்லது உத்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஒன்று மென்முறை; இன்னொன்று வன்முறை! இந்த இரண்டில் ஒன்றையோ அல்லது சமகாலத்தில் வெவ்வேறு சூழல்களில் இரண்டையுமோ கையாளுதல் நிகழும். மென்முறை என்பது மனிதனின் இயல்முறையாகும். வன்முறை என்பது மனிதனின் ஆதிக்கப் போக்கிலிருந்தும் அய்யம் மற்றும் அச்சம் ஆகிய மனோநிலைகளிலிருந்தும் வெளிப்படும் வழிமுறையாகும். அய்யமும் அச்சமும் மனிதனை வெறுப்புக்கும் விரக்திக்கும் தள்ளிவிடுகின்றன.

அய்யம், அச்சம், வெறுப்பு, விரக்தி, ஆதிக்கம் போன்ற மனோநிலைகள் மனிதனை வன்முறை வழிமுறைக்கு இட்டுச் செல்கின்றன. இவை அடிப்படையில் நட்புறவைச் சிதைத்து, தோழமைக்கு இடமில்லாத சூழலை உருவாக்கி விடுகின்றன. பொதுவாக, இத்தகைய மனோநிலைகள் மேலோங்கும் சூழலில் மனிதனைப் பொறுமை இழக்கச் செய்கின்றன. பொறுமை இழத்தலே பொறாமை என்பதாகும். பொறாமையே சினம்கொள்ளச் செய்கிறது. சினமே வன்முறைக்கு வழிவகுக்கிறது. அதாவது, பொறுமை இழக்கும் நிலையில் மனம் சமநிலை இழந்து பதற்றத்திற்குள்ளாகிறது. மனம் பதறும் நிலையில் ஆத்திரம் பீறிட்டு எழும். ஆத்திரம் மேலோங்கும் நிலையில் மனத்தின் அமைதி சிதறும். மனத்தின் அமைதி சிதறும் நிலையில் பேச்சும் செயலும் இயல்பு நிலைக்கு மாறாக வெளிப்பட்டு, சுற்றி நிலவும் அமைதியைச் சீர்குலைக்கும். குறிப்பாக, நட்புறவுச் சூழல்களைப் பாதிக்கச் செய்யும். இவ்வாறு நட்புறவை, தோழமையைப் பாதிக்கச் செய்யும் அணுகுமுறைகளே வன்முறை வழிமுறைகளாகும்.

அமைப்பாதல் நடவடிக்கையில் நட்புறவையும் தோழமையையும் போற்றிப் பாதுகாத்திடல் வேண்டும். தோழமைக்கான ஓர் உறவுச் சூழலில் பொறுமை இழத்தல் கூடாது. அதாவது, பொறாமை இருத்தல் கூடாது. பொறுத்துக்கொள்வதும் சகித்துக்கொள்வதும் தோழமைக் களத்தில் மிகவும் இன்றியமையாத பண்புக் கூறுகளாகும். பொறுத்துக்கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் இயலாத எவராலும் தோழமை உறவுகளைப் பேணிப் பாதுகாத்து, அரவணைத்து முன்னோக்கிச் செல்ல இயலாது. இத்தகைய நட்புறவை, தோழமையைச் சிதைக்கும் அணுகுமுறைகள் ஒருபோதும் வெற்றிகர மானவையாக அமையாது.

கொடுமைக்கெதிரான, பகைமைக்கெதிரான களத்தில் இந்த அணுகுமுறை களைக் கையாளுவது பொருந்தாது. தோழமைக் களத்தையும் பகைமைக் களத்தையும் ஒரே வகை உத்திகளால் அணுகமுடியாது; அணுகவும் கூடாது. தோழமை வடிவத்தில் தோற்றம் தரும் துரோகத்தையும் இடம், பொருள், ஏவல் அறிந்தே அணுக வேண்டும். துரோக உறவைத் தோழமை உறவாக நம்பி ஏமாறுவதோ, பாதிப்படைவதோ நேரலாம். எனினும், அதனைப் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும் முறியடிப்பதற்கான அணுகுமுறை களைக் கையாள வேண்டும். தோழமையை மட்டுமல்ல, துரோகத்தை அணுகுவதாக இருந்தாலும், பகைமையை அணுகுவதாக இருந்தாலும் பொறுமையை இழந்துவிடக்கூடாது என்பதே முதன்மையானதாகும்.

பொறுமையை இழக்காமலிருக்க இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று ஒப்புக்கொள்வது! இன்னொன்று சகித்துக்கொள்வது! ஒப்புக்கொள்வது என்பது, தன்னுடைய இயலாமையை, ஆற்றாமையை வெளிப்படை யாகவோ, மறைமுகமாகவோ ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். அத்துடன், பிறரின் ஆளுமையையும் ஆற்றலையும் அவ்வாறு ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். அதாவது, தன்னுடைய இயலாமையையும் ஆற்றாமையையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறபோது அல்லது மூடி மறைக்கிறபோது மனிதன் பொறுமையை இழக்கிறான். அதேபோல, மாற்றானின் ஆளுமையை, ஆற்றலை ஏற்க மறுக்கிறபோது, அல்லது முடக்கிட முனைகிறபோது பொறுமையை இழக்கிறான். பொறுமையை இழக்கும் இத்தகைய பொறாமைப் பண்புகள் வெற்றிகரமான அணுகுமுறைகளுக்கு இடம் தருவதில்லை.

சகித்துக்கொள்வது என்பது பொறுமைக்கு அடிப்படையான தேவை யாகும். அகச்சூழல்களாலும் புறச் சூழல்களாலும் உருவாகும் எளிதில் தாங்க இயலாத கடுமையான மனவலிகளைப் பொறுத்துக்கொள்வதைக் குறிக்கும். அதாவது, தோழமை வடிவில் வரும் துரோகங்களையும் பகைமை வழியில் வரும் இழிவுகளையும் கொடுமைகளையும் முறியடித்து வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையுடன் தாங்கிக்கொள்வதே சகித்துக்கொள்வ தாகும். சகித்துக்கொள்வது, பொறுமையை இழக்காமல் இருப்பதற்கு வழிவகுக்கும். பொறுமையை இழக்காமல் இருப்பது, தன்னை இழக்காமல் இருப்பதற்கு ஏதுவாக அமையும். தன்னை இழக்காமல் இருப்பது, வெற்றிகர மான உத்திகளையும் அணுகுமுறைகளையும் கையாளுவதற்கு அடிப்படை யாய் விளங்கும். பொறுமையும் சகிப்புத் தன்மையும் அமைப்பாக்க நடவடிக்கையில் தவிர்க்க இயலாத தேவைகள் என்பதை அறியலாம்.

பொறுமையும் சகிப்புத் தன்மையும் வரம்பில்லாதவை அல்ல. எல்லா வற்றுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதைப் போல பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் வரம்பு உண்டு. தனியருவரின் செயல் திறத்தையும் அவர் செய்யவிருக்கும் செயலின் வலிமையையும் அடிப்படையாகக் கொண்டு பொறுமையின் வரம்பு தீர்மானிக்கப்படும். செயல்திறம் மிக்கவர்கள் அவசரப்படுவதில்லை. ஒரு செயலை விரைவாக, வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்கிற அதேவேளையில், அவசரப்பட்டு அரைகுறையாகச் செயலாற்றுவது பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே, அவசரப்படாமலும் அதேவேளையில் விரைவாகவும் ஒரு செயலை நிறைவேற்றுவதற்குத்தான் ‘பொறுமை’ என்பது தேவையாகிறது. அத்தகைய பொறுமையானது மந்தமாகாது. மந்தம் என்பது ‘விழிப்பும் விரைவும்’ இல்லாத சோம்பலைக் குறிக்கும். பொறுமை என்பது ‘அவசரமும் பதற்றமும்’ இல்லாத விரைவைக் குறிக்கும். அதாவது, விழிப்புடன்கூடிய விரைவு, பதற்றமில்லாத விரைவு எனப் புரிந்து கொள்ளலாம்.

தன்னைப் பற்றிய பிறருடைய விமர்சனங்கள், செவிவழிச் செய்தியாக வந்துசேரும் நிலையில், உண்மையில் அக்குறிப்பிட்ட நபர் விமர்சனம் செய்தாரா, அவரது விமர்சனம் உண்மையானவையா என்றெல்லாம் அறிந்து உறுதிப்படுத்துவதற்குள் விமர்சித்ததாகச் சொல்லப்படும் நபர் மீது ஆத்திரம் கொள்வதும், அவரைப் பகைவராகக் கருதுவதும், பழிவாங்குவதற்கு முனைவதும் போன்ற முடிவுகளை எடுப்பது அவசர முடிவாக அமையும். உண்மையில், அவர் அவ்வாறு விமர்சிக்கவே இல்லை என்றும் விசாரணையில் தெரிய வரலாம். அல்லது விமர்சித்திருந்தாலும், ஆத்திரமூட்டும் வகையில் விமர்சிக்கவில்லை என்றும் தெரியவரலாம். இத்தகைய சூழலில், பொறுமை இழந்து அவசரப்பட்டு எடுத்த முடிவு ஆத்திரப்படுவதற்கும், பழிவாங்கு வதற்கும், பகை வளர்வதற்கும்தான் வழிவகுத்ததாக அமையும். அதாவது, அவசரப்படுவதும், ஆத்திரத்தில் முடிவுகள் எடுப்பதும், பக்குவமின்றிச் செயலாற்றுவதும், தோழமை உறவுகளைச் சிதைக்கும். இத்தகைய அணுகுமுறைகள் அமைப்பாக்க நடவடிக்கையை வெகுவாகப் பாதிக்கும்.

ஒரே களத்தில், ஒரே நோக்கத்திற்காக உடன் பணியாற்றுவோருக் கிடையில் நட்பும் தோழமையும் வலுப்பெறுவதற்குப் பொறுமையும் சகிப்புத் தன்மையும் வெகுவாகத் தேவைப்படும். உடன் பணியாற்றுவோர் செய்யும் துரோகம், அவமதிப்பு போன்றவை உறுதிப்படுத்தப்பட்ட நிலை யிலும் அவற்றைப் பொறுத்து அல்லது மன்னித்து அவர்களிடையே தோழமையை வென்றெடுக்க முயற்சிப்பதும், அம்முயற்சி வெற்றிபெறாத நிலையில் அவர்களைத் தண்டிப்பதும்கூட பக்குவமான அணுகுமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டும். மன்னிப்பதாயினும் தண்டிப்பதாயினும் அவசரப்படுவதாக அமைந்துவிடக் கூடாது. தேவையான எல்லைவரையில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்டு இதனை அணுக வேண்டும்.

உடன்பணியாற்றும் களப்பணியாளர்களின் சமூக, அரசியல், பொருளா தாரப் பின்னணிகளையும் அவர்களின் புரிதல் திறனையும் செயல்திறனையும் கருத்தில்கொண்டு, அவர்களின் வேகத்திற்கு அல்லது தம்முடைய வேகத் திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமது அணுகுமுறைகளை வரையறுத்தல் வேண்டும். ‘தனக்கு இணையாகப் பிறர் இல்லையென்று’ இறுமாப்புக் கொள்வதோ, அல்லது ‘பிறருக்கு இணையாகத் தான் இல்லையென்று’ தன்னைக் குறைத்து மதிப்பீடு செய்வதோ தோழமையைச் சிதைக்கும். இத்தகைய மனோநிலையிலிருந்து வெளிப்படும் அணுகுமுறைகள் முதிர்ச்சியற்றவையாக இருக்கும்.

உடன் பணியாற்றுவோருக்கிடையில் இவ்வாறான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் இருப்பினும் அவற்றை முன்னிறுத்தாமல், அமைப்பு நலன் கருதி, மக்கள் நலன் கருதி பாகுபாடில்லாத தோழமையைப் போற்றுவது தான் பக்குவமான அணுகுமுறையாகும். அவ்வாறின்றி, அய்யத்துடன் பழகுவது, அச்சத்துடன் அணுகுவது ஒருபோதும் இணக்கமான உறவுக்கு இடம் தராது.

தான் எதிர்பார்ப்பதைப் போல பிறர் தன்னுடன் உறவாடவோ உரையாடவோ வேண்டுமென்று கருதுவதைவிட, தான் பிறரின் விருப்பு வெறுப்பை அறிந்து, வெறுப்புக்கு இடம் தராத வகையில் அணுகுவது நல்லிணக்கமான உறவுக்கு வழிவகுக்கும். நம்பிக்கை தரும் உறவே நல்லிணக்கத்தை உருவாக்கும். அய்யமில்லாத, அச்சமில்லாத, குற்றம் சுமத்தாத, குறைகூறாத, அன்பு சார்ந்த உறவே நம்பிக்கையை உருவாக்கும். தன்னை நேசிக்காதவர்களை தன்னால் எப்படி நேசிக்க முடியும்? தனக்கு எதிராகக் குற்றம்-குறை கூறுபவர்களை, அவதூறு பரப்புபவர்களை, சதிவலை பின்னுபவர்களை தன்னால் எப்படி தோழமையாக அணுக முடியும்? இவை போன்ற கேள்விகள் எழுவது இயல்பே ஆகும்.

ஒரே களம், ஒரே நோக்கம் என உடன் செயலாற்றுவோரை நட்புக்குரிய அல்லது தோழமைக்குரிய உறவுகளாகக் கருதுதல் வேண்டும். இத்தகைய தோழமை உறவுகளின் எதிர்மறை செயல்களைப் பொறுத்துக்கொள்வதும் சகித்துக் கொள்வதும்தான் எதிர்வினையாக நிகழ்தல் வேண்டும். மாறாக, ஆத்திரப்படுவதும், எரிச்சலுறுவதும், கடுஞ்சொல் எறிவதும், பழிவாங்கத் துடிப்பதும், மனஉளைச்சலுக்குள்ளாவதும் போன்ற எதிர்வினைகளில் ஈடுபடுவது அமைப்பாக்க நடவடிக்கைக்கு நேரெதிராக அமையும். எளிதில் உணர்ச்சிவயப்படும் இத்தகைய அணுகுமுறைகள் தனிநபர்களுக்கிடையில் தேவையற்ற முரண்களையும், மோதல்களையும், குழுவாதப் போக்குகளையும் உருவாக்கும்! இடைவெளியைப் பெருக்கும்! தோழமையைச் சிதைக்கும்! அமைப்பாதலைத் தடுக்கும்!

தோழமை சக்திகளுக்கு எதிராக உணர்ச்சிவயப்படுதலைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் முயற்சி மற்றும் பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். போதிய அரசியல் விழிப்புணர்வோ அரசியல் உள்நோக்கமோ இல்லாத, அதிகார வலிமை இல்லாத, எளிய உழைக்கும் மக்களை அரசியல்படுத்தி அமைப் பாக்கும் வரலாற்றுக் கடமையினை மேற்கொண்டுள்ள களப்பணியாளர் களும் அதே சமூக, அரசியல் பின்னணியிலிருந்தே வந்தவர்கள், வருகிறவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, களப்பணியாளர்கள் அல்லது முன்னோடிகள் தனது களத்தைப் பற்றியும், தனக்கான தோழமை சக்திகள் மற்றும் பகைமை சக்திகள் பற்றியும், உத்திகள் மற்றும் அணுகு முறைகள் பற்றியும் போதிய அறிதலோ புரிதலோ இல்லாதவர்களாய் இருக்கலாம். அதனால், உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்ப்பவர்களாய் இருக்கலாம். எதிர்விளைவுகளைப் பற்றியும் எண்ணிப் பார்க்க இயலாதவர் களாய் இருக்கலாம். தன்னுடைய அணுகுமுறைகள் பிறரை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் சிந்திக்க இயலாதவர்களாக இருக்கலாம். தன்னுடைய நலன், தன்னுடைய பாதுகாப்பு என்கிற அளவில் மட்டுமே தனது பார்வையின் பரப்பைக் குறுக்கிக் கொண்டவர்களாய் இருக்கலாம். எனினும், மக்களை அமைப்பாக்கும் மகத்தான பணியில் ஈடுபடுவதால் அவர்களின் அணுகுமுறைகள் எத்தகையதாயினும் அவற்றை அவர்களின் சமூக அரசியல் பின்னணியிலிருந்து புரிந்துகொள்ளுதல் வேண்டும். பக்குவமில்லாத அணுகுமுறைகளை அவர்கள் கொண்டிருந்தாலும் அவை எரிச்சலூட்டுவதாக அமைந்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொள்ளவும், சகித்துக்கொள்ளவும் வேண்டும். களத்திலுள்ள ஒவ்வொருவரும் இவ்வாறு பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர்களாய் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டால் மட்டுமே தாங்களும் அமைப்பாவதுடன், மக்களையும் வெற்றிகரமாக அமைப்பாக்க இயலும்.

தனது விருப்பத்துக்கு எதிராக, எதிர்பார்ப்புக்கு மாறாக, தான் பணி யாற்றும் களம் அமையுமெனில், உடன் பணியாற்றும் களப்பணியாளர்களின் போக்கும் அவ்வாறு அமையுமெனில், அவை மிகுந்த ஏமாற்றத்தையும் தடுமாற்றத்தையும் உருவாக்கி, கடுமையான விரக்தியையும் வெறுப்பையும் விளைவிக்கும். இத்தகைய நெருக்கடியான சூழலின்போது, ‘எடுத்தேன்; கவிழ்த்தேன்’ என்கிற வகையில், களத்திலிருந்து பின்வாங்குவதோ, பயணத்தைப் பாதியிலேவிட்டு பாதை மாறுவதோ, பகைத் தரப்போடு சமரசமாவதோ, தன்னால் இயலாது என்று தன்னம்பிக்கையை இழப்பதோ, தனது இயலாமைக்கு பிறர் மீது பழிபோட்டுத் தப்பிக்க முனைவதோ, இன்னும் இவை போன்ற நடவடிக்கைகள் ஒருபோதும் தீர்வாகாது. ஏமாற்றம், தோல்வி, வஞ்சகம், வன்கொடுமை, இழிவு, துரோகம் போன்ற நெருக்கடிகளைப் பொறுத்துக்கொள்வதும் அவற்றால் விளையும் மன உளைச்சல்களைச் சகித்துக்கொள்வதும் பொதுவாழ்க்கைக்கு அல்லது அமைப்பாக்க நடவடிக்கைக்கு தவிர்க்க இயலாத தேவைகளாகும். அத்தகைய பொறுமையினையும் சகிப்புத் தன்மையினையும் களப்பணி யாற்றுவோர் படிப்படியாக வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் வேண்டும். அளப்பரிய இப்பண்புகளின் வழியாக பக்குவமான, முதிர்ச்சியான, வெற்றிகரமான அணுகுமுறைகளைப் பெற்றிட இயலும். தனிவாழ்க்கை யானாலும் பொதுவாழ்க்கையானாலும் கையாளும் அணுகுமுறைகளைப் பொறுத்தே வெற்றி-தோல்வி அமையும். நேர்மறையான பார்வை, நேர்மறையான புரிதல் போன்றவை நேர்மறையான அணுகுமுறைகளைத் தரும். நேர்மறையான அணுகுமுறைகளால் மட்டுமே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியும். நல்லிணக்கத்தால் மட்டுமே நம்பிக்கையையும் நம்பிக்கைக்குரிய தோழமையையும் வென்றெடுக்க இயலும்.

தன்னை அறியும் மனமே விரியும்! – வரும்
தடைகள் விலக்கிச் சாதனை புரியும்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here