அமைப்பாய்த் திரள்வோம் – 44

0
670

உணர்ச்சிகள்தாம் மனிதனை எப்போதும் உந்தி இயக்கும் முதன்மை ஆற்றல்களாய் விளங்குகின்றன.

உணர்ச்சிகள் வழிநடத்த மனிதன் பின்பற்றுகிறான். அன்பு, பற்று; இரக்கம், கருணை; வெறுப்பு, ஆத்திரம்; பயம், பதற்றம்; பொறாமை, பகைமை; மகிழ்ச்சி, இன்பம்; துக்கம், துன்பம் என இவை போன்ற உணர்ச்சிகளே மனிதனை வழிநடத்துகின்றன. எந்த நேரத்தில், எந்த உணர்ச்சி மனிதனின் மனத்தில் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அந்த நேரத்தில் அந்த உணர்ச்சியின் வடிவமாகவே மனிதன் இயங்குகிறான். உணர்ச்சிகளின் பிறப்பிடமாகவும் இருப்பிடமாகவும் மனிதனின் மனம் இயங்குகிறது. தன்னைச் சுற்றியுள்ள சூழல்களை மனம் எவ்வாறு புரிந்து, உள்வாங்குகிறதோ, அவ்வாறே மனத்திலிருந்து உணர்ச்சிகள் பிறக்கின்றன. உணர்ச்சிகளின் பிறப்பிடமான அம்மனமே, அவற்றின் இருப்பிடமாகவும் உள்ளது. மனத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகள் மாறிமாறித் தோன்றலாம்; மறையலாம். இவ்வாறு தோன்றும் உணர்ச்சியின் வலிமையைப் பொறுத்தும், அது மனத்தில் இருப்புக்கொள்ளும் கால அளவைப் பொறுத்தும் மனிதனின் நடவடிக்கைகள் அமைகின்றன. எந்த உணர்ச்சி, எவ்வளவு நேரம் அல்லது காலம், மனத்தில் இருப்புக்கொள்கிறதோ அல்லது ஆதிக்கம் செய்கிறதோ, அவ்வளவு நேரம் அல்லது காலம்வரையில் அந்த உணர்ச்சி மனிதனை ஆட்டிப்படைக்கிறது.

ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு பண்பைக் கொண்டிருக்கிறது. எந்தவொரு உணர்ச்சியால் மனம் நிரம்புகிறதோ, அந்த உணர்ச்சியின் பண்புக்கேற்பவே மனம் இயங்குகிறது. மனத்தின் போக்கின்படியே மனிதன் இயங்குகிறான். மனிதனின் வாழ்நிலை, சூழ்நிலைகளுக்கேற்ப அவனது மனத்தின் பண்பும் வலிமையும் வடிவம் பெறுகிறது.

ஒன்றை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ புரிந்துகொள்வதை, புரிந்து கொண்டவாறு உள்வாங்குவதை மனத்தின் பண்பு என அறியலாம். இத்தகைய பண்பு, பிறப்பின் வழியாக அல்லது பெற்றோரின் வழியாகப் பெறுவதாகவும், வளர்ச்சியின் போக்கில் வாழ்நிலை மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப மனத்தின்மீது ஏற்படும் தாக்கத்தின் மூலமாகப் பெறுவதாகவும் அமையலாம். நட்பு தொடர்பாகவோ, பிற உறவுகள் தொடர்பாகவோ, எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாகவோ, மனம் எதிர்மறையான அல்லது நேர்மறையான அணுகுமுறையின் மூலம் எந்தவொன்றையும் புரிந்துகொள்கிறது. இத்தகைய அணுகுமுறையானது, பெற்றோரின் பண்பிழைகளின் மூலமாகக் கருவிலிருந்தே பெற்றதாக இருந்தாலும், சுற்றுச் சூழல்களின் தாக்கத்தின் மூலமாக அல்லது பழக்கத்தின் மூலமாகப் பெற்றதாக இருந்தாலும், இவற்றைத் தொடர் பயிற்சியின் வழியாக தேவையை யட்டி சீர்செய்ய இயலும்.

ஒன்றைப் புரிந்துகொள்ளும் முறை, புரிந்துகொள்ளும் திறன், அவ்வாறு புரிந்து கொண்டதை உள்வாங்கும் முறை, உள்வாங்கும் திறன், அவ்வாறு உள்வாங்கியதைப் பயன்படுத்தும் முறை, பயன்படுத்தும் திறன் போன்றவையே மனத்தின் பண்பு மற்றும் வலிமை என அறியலாம். ஒன்றைப் புரிந்துகொள்வதிலிருந்தும், உள்வாங்குவதி லிருந்தும் உருவாகிற உணர்ச்சிகளை, மனம் எவ்வாறு வெளிப்படுத்துகிறது; கட்டுப்படுத்துகிறது; தாங்குகிறது போன்றவை மனத்தின் வலிமையைக் குறிக்கும்.
உணர்ச்சியின் பண்பும், உணர்ச்சியின் வலிமையும், மனத்தின் பண்பு மற்றும் வலிமையைவிட ஆளுமைமிக்கதாக இருப்பின் அவ்வுணர்ச்சிக் கேற்பவே மனம் இயங்கும். மனம் ஆளுமை மிக்கதாக இருப்பின் உணர்ச்சி களை ஆதிக்கம் செய்ய அனுமதிக்காது. தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப உணர்ச்சிகளை மனமானது கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் செய்யும்.

அவ்வாறு உணர்ச்சிகளைக் கையாள இயலாத அளவுக்கு மனம் வலுவற்றதாக இருக்கும்போது, ‘உள்ளது உள்ளபடியே’ உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். இந்த நடைமுறையே ‘உணர்ச்சிவயப்படுதல்’ என்பதாகும். உணர்ச்சிவயப்படுதலும் உணர்ச்சிமயமாதலும், மனமானது உணர்ச்சியைவிட வலுக்குன்றியதாக உள்ளதை உறுதிப்படுத்துவதாகும். அதாவது, மனத்தைவிட உணர்ச்சி வலுவாக உள்ளபோது மனமானது உணர்ச்சியின் வேகத்திற்கும் வீரியத்திற்கும் ஆட்பட்டு உணர்ச்சிமயமாகிவிடுகிறது. அதன்போக்கிலேயே மனிதனின் போக்கும் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் ஆதிக்கத்திற் குள்ளாகிறபோது, உணர்ச்சியின் பண்பே மனத்தின் பண்பாகவும் உணர்ச்சியின் வலிமையே மனத்தின் வலிமையாகவும் மாறிவிடுகிறது.

அதேவேளையில், உணர்ச்சியின் வேகத்திற்கும் வீரியத்திற்கும் ஈடுகொடுத்து இயங்கும் வலிமையில்லாதபோது மனம் உடைந்து போகிறது; நொறுங்கிப் போகிறது. இதுவே ‘இயலாமையாக’ வெளிப்படுகிறது. இயலாமையின் விளைச்சல்களே விரக்தி, வெறுப்பு, சலிப்பு போன்றவை யாகும். இயலாமை என்பது இயங்காமை என்றாகாது. உணர்ச்சிவயப் படுதலும் உணர்ச்சிமயமாதலும்கூட இயலாமையே ஆகும். அதாவது, உணர்ச்சிவயப்பட்டு எத்தகைய கட்டுக்குள்ளும் அடங்காமல் உணர்ச்சியின் வடிவமாகவே மாறிச் செயற்படுதலும், அவ்வாறே உணர்ச்சிவயப்பட்டு அவ்வுணர்ச்சிக்கேற்பச் செயற்பட இயலாமல் தேங்குதலும் திணறுதலும் இயலாமையைக் குறிக்கும். அதாவது, தோன்றும் உணர்ச்சிகளைத் தேவைக்கேற்ப, சூழலுக்கேற்பக் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்திக் கையாளும் வலிமை இல்லாத நிலையைக் குறிக்கும். உணர்ச்சிகளைக் கையாளும் மனவலிமை இல்லாத ‘இயலாமையினால்’தான் மனம் கடும் உளைச்சலுக் குள்ளாகிறது. குறிப்பாக, எதிர்மறையான உணர்ச்சிகள் தோன்றும்போது, அவற்றைச் சூழலுக்கேற்பக் கையாள இயலாதபோது, இயலாமை வெளிப் படுகிறது. அதுவே மனத்தில் மேலும் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் உணர்ச்சிகளை உருவாக்குகிறது. அதாவது, மனத்தை வாட்டி வதைக்கும் உணர்ச்சிகளைப் பிறப்பிக்கிறது. இயலாமையிலிருந்தே மன அழுத்தம் உருவாகிறது.

மனஅழுத்தத்திலிருந்து கசப்பு, சலிப்பு, வெறுப்பு, அய்யம், அச்சம், பொறாமை, பகைமை, ஆத்திரம், வெறி போன்ற உணர்ச்சிகள் ஊற்றெடுத்து உள்ளத்தை வதைக்கிறது; சிதைக்கிறது. இத்தகைய உணர்ச்சி களின் விளைச்சல்களே மன உளைச்சல்களாகும்.
தன்னையே வதைக்கும், தன்னையே சிதைக்கும் உளைச்சல்களுக்கான உணர்ச்சிகளைத் தானே சுரக்கும் மனம், அவற்றிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு தன்னைத்தானே வலிமைப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். எதிர்மறையான உணர்ச்சிகளால் எதிர்மறையான அணுகுமுறைகளும் எதிர்மறையான விளைவுகளும் உருவாகின்றன. இத்தகைய எதிர்மறையான உணர்ச்சி களுக்குத் தன்னைச் சுற்றியுள்ள சூழல்களும், தனக்கு வேண்டாதவர்களின் நடவடிக்கைகளும்தான் காரணிகளாக உள்ளன; தன்னைச் சுற்றியுள்ள சூழல்களின் அல்லது நபர்களின் போக்குகளில் மாற்றம் நிகழாமல், தனது எதிர்மறை சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் எவ்வாறு முறைப்படுத்த இயலும்? என்கிற கேள்வி எழுவது இயல்பேயாகும். இது ஒவ்வொரு மனிதனுக்கும் எழுகிற அய்யமே ஆகும்.

தன்னுடைய தீங்கான உணர்ச்சிகளுக்கும் அணுகுமுறைகளுக்கும் பிறரின் நடவடிக்கைகளே காரணம் என நம்புகிறபோது, அத்தகைய உணர்ச்சிகளின் வேகத்தை பிறரின் மீது வெளிப்படுத்த நேருகிறது. இதனால், பிறரை ஒழுங்குபடுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்களைக் காயப்படுத்தும் நிலை உருவாகிறது. இதுவே, தோழமையை, நட்புறவை வெகுவாகப் பாதிக்கிறது. அமைப்பாக்க நடவடிக்கையில் தோழமையைப் போற்றுவதும் ஒருங்கிணைந்துச் செயலாற்றுவதும் இன்றியமையாத தேவையாகும். உடன்பணியாற்றுவோர் தன்னைப்போல் இல்லாமல் எதிர்மறையான போக்குகளைக் கொண்டிருக்கிறபோது, அவற்றை எவ்வாறு நேர்மறையாக எடுத்துக்கொள்ள இயலும்? எவ்வாறு பொறுத்துக்கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் இயலும்? என்கிற கேள்விகள் எழுவதும் ஞாயமானதே ஆகும். உடன்பணியாற்றுவோர் நீதி, ஞாயங்களுக்குப் புறம்பாக செயற்படும்போது, கொடுமைகள் இழைக்கும்போது எழும் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப் படுத்த இயலும்? அல்லது அத்தகைய கொடிய உணர்ச்சிகள் உருவாகாதவாறு எவ்வாறு தடுத்திட இயலும்? என்கிற கேள்விகளும் ஏற்புடையதே ஆகும்.

தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாதபோது, நேர்மறையான சிந்தனைகளும் அணுகுமுறைகளும் இல்லாதபோது, தான் மட்டும் எவ்வாறு அவர்களுக்கு நேர்மாறாக இருந்திட இயலும் என்றும், பிறர் கெட்டிக்காரர்களாகவும் தான் மட்டுமே ஏமாளியாகவும் இருக்க முடியுமா என்றும் ஒருவன் சிந்திப்பதும் தவறு என்றாகாது. இதனால், தான் ஏமாளியல்ல என்றும், கோழையல்ல என்றும் நிலைநாட்டவேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்படுவதும் தவிர்க்க இயலாததாகிறது. இந்நிலையில் அவனும் பொறுமை இழப்பதும் உணர்ச்சிகளைக் கொட்டுவதும், கட்டுப் பாடற்ற நிலையில் செயல்படுவதும் நிகழ்கிறது. இத்தகைய போக்குகள் அமைப்பாக்க நடவடிக்கையில் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். உடன் பணியாற்றுவோருக்கிடையில் ‘ஒதுங்குவதும் ஒதுக்குவதும்’ நிகழும். தீங்கான குழுவாதப் போக்குகளும் ஒருவரை ஒருவர் வீழ்த்துவது என்னும் பழிவாங்கும் போக்குகளும் பெருகும். அது அமைப்பு நலன்களையும் மக்கள் நலன்களையும் வெகுவாகப் பாதிக்கும்.

அமைப்புக்காக, மக்களுக்காக தன்னைப் பிறர் அவமதிப்பதையும் காயப் படுத்துவதையும் எவ்வாறு பொறுத்துக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் இயலும்? தோழமை என்ற பெயரில் பிறரின் ஆதிக்கத்தை எவ்வாறு அனுமதிக்க முடியும்? இவை போன்ற கேள்விகள் பொதுவாழ்க்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் எழுவதைப் புறந்தள்ள முடியாது! இதனால், ‘இழிவுக்கு இழிவு’, ‘காயத்துக்குக் காயம்’ என பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆட்படுவதும் வெறுப்பைக் கக்குவது, வெறியைக் கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் அவற்றுக்கான எதிர்விளைவுகளைச் சந்திப்பதும் மனஅமைதியை இழப்பதும் என பதற்றமான மனநிலைக்குத் தள்ளப்படு கின்றனர். பதற்றம், பழிவாங்கும் உணர்ச்சி போன்ற உணர்ச்சிகளில் மனம் நிரம்பும்போது, அவ்வுணர்ச்சிகளின் கொந்தளிப்பில் மனம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. யாருக்கு எதிராக இத்தகைய உணர்ச்சிகள் பொங்கு கின்றனவோ அவருக்கு ஏற்படுத்தும் பாதிப்பைவிட அவ்வுணர்ச்சிகளுக்கு இடமளிக்கும் மனத்திற்குப் பெரும் பாதிப்பை உருவாக்கும்.

பிறரைப் பாதிக்கச் செய்ய வேண்டும் என்பதைவிட தன்னைப் பாதுகாத்திட வேண்டுமென்பது மிகமிக இன்றியமையாததாகும். அதாவது, மனத்தில் இத்தகைய உணர்ச்சிகள் உருவாவதற்கு இடமளிக்கக்கூடாது. அப்படி உருவானாலும் அவை மனத்தின் வலிமைக்கு மீறிய அளவில் மனத்தை ஆதிக்கம் செய்ய, ஆட்டிப்படைக்க அனுமதிக்கக் கூடாது. எத்தகைய உணர்ச்சிகளாக இருந்தாலும் அவற்றைக் கட்டுக்குள் வைத்துக் கையாளும் வலிமையை மனம் பெற்றாக வேண்டும். இத்தகைய வலிமைக்கு உரிய பயிற்சி தேவையாகும். நேர்மறையான புரிதல்களாலும் அணுகுமுறை களாலும்தான் மனத்தின் வலிமையைப் பெருக்கிட இயலும்.

நேர்மறையான புரிதல்கள் மற்றும் அணுகுமுறைகள் என்பவை, இருப்பதை இல்லாததாகவோ, இல்லாததை இருப்பதாகவோ புரிந்துகொள்வது ஆகாது. ‘உள்ளது உள்ளபடி’ புரிந்துகொள்வதே நேர்மறையான புரிதல் ஆகும். ‘உள்ளது உள்ளபடி’ அணுகுவதே நேர்மறையான அணுகுமுறையாகும். பொதுவாக, எதிர்மறை சிந்தனை உள்ளவர்களால் உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளவோ அணுகவோ முடியாது. அதேவேளையில், நேர்மறை யான சிந்தனை உள்ளவர்களால் உள்ளது உள்ளபடியே புரிந்துகொள்வதும் தனக்குத் தீங்கானவையாக இருப்பின் அவற்றை எப்படிப் பொறுத்துக் கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ இயலும்? அல்லது அவற்றை மனத்தி லிருந்து எவ்வாறு அப்புறப்படுத்த இயலும்? என்ற வினாக்களை எப்படிப் பொருட்படுத்தாமல் இருக்க முடியும்?

உடன் பணியாற்றும் தோழர்களாயினும் ஒரே களத்தில் எதிர்கொள்ள வேண்டிய பகைவர்களாயினும் அவர்களை நேர்மறையாக அணுகுவதன் மூலம்தான் உண்மையை உண்மையாகவே புரிந்துகொள்ளமுடியும். உண்மைகள் பெரும் பாலும் போலிகளாலும் மாயைகளாலும் திட்டமிட்டு மறைக்கப்படுவ துண்டு. அறிந்தோ அறியாமலோ ‘உள்ளது உள்ளபடி’யின்றி மிகைத்தோ குறைத்தோ காட்டப்படுவதுண்டு. இவை போன்ற நடைமுறைகளால் அவ்வளவு எளிதில் உள்ளதை உள்ளபடியே உணர்ந்திட இயலாது.
இந்நிலையில், எதிர்மறையான சிந்தனையும் அணுகுமுறையும் உள்ளவர் களால் உள்ளது உள்ளபடி உணர்த்தவும் முடியாது; உணரவும் முடியாது! அவ்வாறு, ஒன்றை உள்ளது உள்ளபடி உணர்வதும் உணர்த்துவதும் ஒவ்வொரு நாளும் மனிதன் எதிர்கொள்ளும் பெரும் போராட்டமாகும். பொதுவாக, பெரும்பாலானவர்கள் உண்மையை அறியும் வரையில் போராடுவதில்லை. அறிந்தவரையில் உண்மையென்றோ, பொய்யென்றோ ஒரு முடிவுக்குச் சென்று விடுகின்றனர். உண்மையை அறியும்வரையில் காத்திருப்பதற்குரிய பொறுமை இருப்பதில்லை. அத்தகைய காத்திருப்புக்கான அல்லது பொறுமைக்கான கால இடைவெளியில் நிகழும் போலிகளின், பொய்களின், மாயைகளின் நடவடிக்கைகளை அல்லது அநீதிகளைச் சகித்துக்கொள்ள இயலுவதில்லை.

இத்தகைய பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை இழக்கும் நிலையில், ஆற்றாமையும் இயலாமையும் வெளிப்படும் நிலை உருவாகும். ஆற்றாமையும் இயலாமையும் எதிர்மறையான புரிதல்களையும் அணுகுமுறைகளையும் உருவாக்கும்; மனத்தைப் பாதிக்கும் அளவுக்குப் பதற்றமான, கொந்தளிப்பான உணர்ச்சிகளைப் பிறப்பிக்கும்! இவ்வுணர்ச்சிகள் மேலோங்கி, ஆதிக்கம் செய்யும் நிலையில், தொடர்புடைய எந்தவொன்றும் உள்ளது உள்ளபடி மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுவதில்லை. எதிர்மறை யான வகையில், மனத்தில் மிகைப்படுத்தியோ குறைப்படுத்தியோதான் காட்சிப்படுத்தப்படும்.

இத்தகைய காட்சிகளும் புரிதல்களும் மனத்தில் நிறையும் நிலையில் மனம், அவை சார்ந்த உணர்ச்சிகளுக்கு மட்டுமே இடமளிக்கிறது. இவ்வுணர்ச்சிகள் மனத்தில் தேங்கத் தேங்க அவை வன்ம உணர்ச்சிகளாக வீரியம் பெறுகின்றன. இந்த வன்ம உணர்ச்சிகள் மனத்திரையில் காட்சிப் படுத்துபவையும் உண்மை நிலையும் பெரும்பாலும் பொருந்துவதில்லை. அதாவது, தனக்கு நேரும் பாதிப்புகளுக்கெல்லாம் தனக்கு வேண்டாத நபரின் நடவடிக்கைகளே காரணம் என்று எண்ணும்போது, அவன் மனத்தில் எழும் உணர்ச்சிகளும், அவை அவனது மனத்திரையில் காட்டும் காட்சிகளும் வேண்டாத நபருக்கு எதிரான வன்மத்தை மேலும் கூர்மைப்படுத்தும். ஆனால், உண்மையில் தனக்கு நேரும் பாதிப்புகளுக்கும் தனக்கு வேண்டாத நபருக்கும் தொடர்பில்லாமலும் இருக்கலாம். அதாவது, வேண்டாத நபரின் மீதான வெறுப்பும் அவ்வெறுப்பிலிருந்து எழும் அய்யம், அச்சம், பொறாமை போன்ற உணர்ச்சிகளும், அவ்வுணர்ச்சிகளின் பண்புகளால் உருவாகும் எண்ணங்கள் மற்றும் காட்சிகளும் உண்மை நிலையோடு பெரும்பாலும் பொருந்துவதில்லை. மனம் நிறைய வன்ம உணர்ச்சிகள் மேலோங்கி யிருக்கும்போது, உண்மை நிலைகளை உணரவோ உணர்த்தவோ முடியாது.

பொதுவாழ்க்கையில், உடன் பணியாற்றுவோரில் ஏதோவொரு வகையில் பிடிக்காதவர்கள், வேண்டாதவர்கள், துரோகிகள், எதிரிகள் என்று சிலரைக் கருத நேரலாம். அவர்கள் தொடர்பாக எதிர்மறையான சிந்தனைகளும் அணுகுமுறைகளும் உருவாகலாம். இவை அவர்களின் மீதான பொறாமை மற்றும் பகைமையை வளர்க்கலாம். இவற்றிலிருந்து வன்ம உணர்ச்சிகள் பெருகலாம். இவை நெடுங்காலத்திற்கு மனத்தைவிட்டு அகலாமல், மன அழுத்தத்தையும், பதைப்பையும், ஆத்திரத்தையும், வன்முறை நாட்டத்தையும் உருவாக்கலாம். இவ்வாறான போக்குகள் யாவும் பெரும்பாலும் வன்ம உணர்ச்சிகளின் பண்புகளேயாகும்.

அதைப்போல, அன்பு, பற்று, இரக்கம், கருணை போன்ற பாச உணர்ச்சிகள் மனத்தில் நிறையும்போது, மனமானது இவ்வுணர்ச்சிகளுக் கேற்பவே இயங்கும். இவ்வுணர்ச்சிகளால் மனம் பாதிக்கப்படுவதில்லை. சுற்றியுள்ள உறவுகளின் இணக்கம் பாதிக்கப்படுவதில்லை. தோழமை உறவு களை மென்மேலும் வலுப்படுத்தவே செய்யும். இவ்வுணர்ச்சிகள் மேலோங்கி மனத்தில் ஆதிக்கம் செலுத்தும்போது, அய்யம், அச்சம், பொறாமை, பகைமை போன்ற வன்ம உணர்ச்சிகளுக்கு மனம் இடமளிப்பதில்லை. அதே வேளையில், பாச உணர்ச்சிகளும் மனத்தை நிரப்பி ஆதிக்கம் செய்யுமெனில் அம்மனத்தால் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி உணர மனம் இடமளிப்பதில்லை. அதாவது, உள்ளது உள்ளபடி உண்மை நிலையை உணர எந்தவகை உணர்ச்சிகளும் மனத்தை ஆட்டிப் படைக்குமளவுக்கு ஆதிக்கம் செய்வது கூடாது. உணர்ச்சிகளை மனம்தான் கையாள வேண்டுமே தவிர, மனத்தை உணர்ச்சிகள் ஆளுமை செய்யக் கூடாது. பாச உணர்ச்சி களாயினும் வன்ம உணர்ச்சிகளாயினும் அவற்றைக் கட்டுக்குள் வைத்துக் கையாளும் அளவுக்கு ‘மனவலிமை’ இன்றியமையாததாகும்.

இத்தகு மனவலிமையைப் பெறுவதற்கு நேர்மறையான சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகள் மூலமான தொடர்பயிற்சி தேவையாகும். குறிப்பாக, வன்ம உணர்ச்சிகளின் தாக்குதலுக்கு ஆட்படாதவாறு மனத்தைப் பாதுகாத்திட வேண்டும். பிறரின் இயல்பான அணுகுமுறைகளால் அல்லது திட்டமிட்ட சதிவேலைகளால் மனம் பாதிக்கப்படும்போது உருவாகும் வன்ம உணர்ச்சிகளை வலுவிழக்கச் செய்தல் வேண்டும். அதற்கேற்ற மனவலிமையைப் பெறுவது இன்றியமையாத தேவையாகும். மனவலிமை இல்லையேல் பிறரால் மனத்திற்கு நேர்ந்த பாதிப்புகளிலிருந்து மீள இயலாது. பழிவாங்கும் உணர்ச்சி போன்ற வன்ம உணர்ச்சிகளின் ஆதிக்கத்தை விரட்ட இயலாது. தோழமையைப் போற்றி நட்புறவை வலுப்படுத்த இயலாது. உடன் பணியாற்றுவோருடன் இணக்கமாகச் செயல்பட்டு அமைப்பாக்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற இயலாது.

எனவே, அமைப்பு நலன் மற்றும் மக்கள் நலன் கருதி, தனிப்பட்ட முறையில் தனக்கு நேர்ந்த பாதிப்பைப் பொருட்படுத்தாமல், பாதிப்பை ஏற்படுத்திய நபர்களுடன் நட்பை, தோழமையைப் போற்றுதல் வேண்டும். அவர்களின் துரோகத்தால் ஏற்பட்ட காயங்களோ வடுக்களோ நெஞ்சில் ஆறாமல் இருப்பினும் அவற்றை ஆற்றுப்படுத்திட வேண்டும். அதற்குப் போதிய மனவலிமை தேவையாகும்.

தனிநபரால் தனிப்பட்ட முறையில் தனக்கு நேர்ந்த பாதிப்பை முன்னிறுத்தாமல், அமைப்புக்காக, மக்களுக்காக அப்பாதிப்புகளைப் பாடமாகக் கருதி மறக்கவோ அல்லது மடைமாற்றி நீர்த்துப்போகச் செய்யவோ வேண்டும். மறக்கவே இயலாத பாதிப்புகளாக இருப்பினும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளின் மூலம் அவற்றை வலுவிழக்கச் செய்தல் வேண்டும். அதற்கு அத்தகைய நபர்களை மன்னிப்பது மட்டுமே மாமருந்தாகும். கடுமையான பாதிப்புகளை அவ்வளவு எளிதில் மறக்கவோ, பாதிப்பை ஏற்படுத்திய நபர்களை அவ்வளவு எளிதில் மன்னிக்கவோ இயலாது! எனினும், பொது வாழ்க்கையில், குறிப்பாக, அமைப்பாக்க நடவடிக்கைகளில் ‘மறப்பதும் மன்னிப்பதும்’ தவிர்க்க இயலாத தேவையாகும்.

ஒரே அமைப்பில், ஒரே களத்தில், ஒரே இலக்கை நோக்கிப் பணியாற்றும் தோழர்களுக்கிடையில் அவ்வப்போது எழுகின்ற கசப்பு, வெறுப்பு, பொறாமை மற்றும் பகைமை போன்ற வன்ம உணர்ச்சிகளால் நேரும் பாதிப்புகளை மறப்பதும் மன்னிப்பதும் இன்றியமையாத தேவைதான் என்றாலும் அவ்வளவு எளிதில் அவற்றை மறக்கவோ மன்னிக்கவோ இயலாது. அமைப்புக்காக, மக்களுக்காக, பொதுநலன் கருதி அவற்றை மறக்கவும் மன்னிக்கவும் போதிய மனவலிமை தேவையாகும். தனிப்பட்ட முறையில் தனக்கு நேர்ந்த அவமதிப்பு, காயம், வலி ஆகியவற்றை முன்னிறுத்தாமல் அல்லது பொருட் படுத்தாமல், அமைப்புக்காக, மக்களுக்காக அவற்றைத் தாங்கிக்கொள்ளவும் பொறுத்துக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் தேவையான மனவலிமை பெற்றிருந்தால் மட்டுமே ‘மறக்கவும் மன்னிக்கவும்’ இயலும். தான், தனது நலன் என்று தன்னை குறுகிய வளையத்திற்குள் சிறைப்படுத்திக் கொள்ளாமல், அமைப்பு நலன், மக்கள் நலன் என விரிந்து பரந்த தொலைநோக்குப் பார்வையும் தோழமை உறவுகளால் நேரும் பாதிப்புகளையும் இழப்பு களையும் தாங்கிக்கொள்ளும் பக்குவமும் முதிர்ச்சியும்தான் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் உரிய மனவலிமையை உருவாக்கும்.

இத்தகைய மறத்தலால், மன்னித்தலால் குற்றமிழைத்தோரின், கொடுமை செய்தோரின் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டு, அவற்றை ஏற்றுக்கொண்ட தாகப் பொருளாகாது. அவர்களை அரவணைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே அதனைக் கருத வேண்டும். அவர்களை அமைப்புவழிப் படுத்துவதற்கும் மக்கள்வழிப் படுத்துவதற்கும் அளிக்கப்படும் வாய்ப்பாகவே புரிந்துகொள்ள வேண்டும். உடன் பணியாற்றுவோருக்கிடையில் முரண்களோ மோதல்களோ இன்றி நல்லிணக்கத்தை உருவாக்கவும், தோழமையை வலுவாக்கி ஒருங்கிணைந்து செயலாற்றவும் அமைப்பாக்க நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லவும் உருவாக்கப்படும் அளப்பரிய வாய்ப்பாகவே உணர்ந்துகொள்ள வேண்டும். இவையே நேர்மறையான புரிதலும் அணுகுமுறையும் ஆகும்.

இவ்வாறு, நேர்மறையான சிந்தனைகள், நேர்மறையான புரிதல்கள், நேர்மறையான அணுகுமுறைகள், நேர்மறையான உணர்ச்சிகள் போன்றவற்றின் மூலம் மனத்தைப் பாதுகாத்துப் பக்குவப்படுத்துவதன் மூலமே மனம் போதிய வலிமையைப் பெறும். இத்தகைய மனவலிமையால் மட்டுமே ‘மறக்கவும் மன்னிக்கவும்’ இயலும்! தோழமை உறவுகளைப் போற்றவும் பாதுகாக்கவும் இயலும்!

உள்ளம் பதைக்கும் உணர்ச்சிகள் தவிர்ப்போம் – மன்னிக்கும்
உயரிய பண்பால் உறவுகள் காப்போம்!

செப்டம்பர் – 2014

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here