அமைப்பாய்த் திரள்வோம் – 45

0
712

உணர்ச்சிவயப்படும்போது மனிதன் உணர்ச்சியின் பின்னாலேயே ஓடும்நிலை உருவாகிறது.

அது இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடவேண்டியுள்ளது. மேலோங்கும் உணர்ச்சியின் வேகத்திற்கேற்ப, வலிமைக்கேற்ப, பண்பிற்கேற்ப மனிதன் இயங்க வேண்டியுள்ளது. உணர்ச்சி, தன்னை ஆளுவதற்கு அனுமதிக்கும் போது அவ்வுணர்ச்சியால் ஏற்படும் விளைவுகளை அவன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எத்தகைய உணர்ச்சியாக இருந்தாலும் அவ்வுணர்ச்சியைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும்போது, மனிதன் அவ்வுணர்ச்சியால் பாதிப்பு நேராத வகையில் நெறிப்படுத்திக்கொள்ள இயலும். மனிதன் உணர்ச்சிகளை ஆள வேண்டும்; உணர்ச்சிகள் மனிதனை ஆளக்கூடாது. இந்த நுட்பமான ஆற்றல்தான் மனிதனை மாபெரும் வல்லமை பெற்றவனாய் ஆளாக்குகிறது.

மனிதன் மட்டுமல்ல, உயிர்கள் யாவுமே உணர்ச்சிகளால் உந்தப்படுபவையே ஆகும். உணர்ச்சிகளின்றி உயிரியக்கம் இல்லை. பசியுணர்வு, பாலுணர்வு, பாதுகாப்பு உணர்வு போன்ற உணர்ச்சிகள் அனைத்து உயிர்களுக்கும் உள்ள பொதுவான பண்புகளாகும். இவ்வுணர்வுகளால் வெளிப்படும் ஆற்றல்கள்தான் உயிரியக்கத்தின் அடிப்படையாகும். அதாவது, இவ்வுணர்வுகளின் உந்துதல்களால் தான் உயிர்கள் யாவும் இயங்குகின்றன. மனிதனும் இந்தப் பொதுவிதிக்கு உட்பட்டவனேயாவான். எனினும், மனிதன் அத்தகைய உணர்ச்சிகளைத் தனது கட்டுக்குள் வைத்து நெறிப்படுத்திக் கையாளக்கூடிய ஆற்றலைப் பெற்றவன். இந்த மகத்தான ஆற்றலை உணரும்போதுதான் மனிதன் தன்னை வலிமைப் படுத்திக் கொள்கிற வாய்ப்பைப் பெறுகிறான். உணர்ச்சிகளின் போக்கில் ஓடாமல், அவ்வுணர்ச்சிகளைத் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் கையாளு வதற்குரிய பக்குவத்தைப் பெறுவதில்தான் மனிதன் ஆளுமை பெறுகிறான்.

உணர்ச்சிகளின்றி வாழமுடியாது! உணர்ச்சிகளைத் தவிர்க்கவும் இயலாது! உணர்ச்சிகளை மேலோங்கவிடாமல், முறைப்படுத்திக் கையாள முடியும். தொடர் பயிற்சியின் மூலம் தேவையற்ற மற்றும் தீய உணர்ச்சிகளைத் தவிர்க்கவும் தடுக்கவும் இயலும். உணர்ச்சிகளின் பண்புகளையும் ஆற்றல்களையும் புரிந்து அவற்றின் தேவைக்கேற்ப, அவற்றைக் கையாளுவதிலிருந்தே மனிதனின் வெற்றி அமைகிறது. அவ்வாறு கையாளத் தெரியாமல் உணர்ச்சிவயப்படுகிறவன், உணர்ச்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் இடம்கொடுத்து வருகிறவன், தனது சுற்றத்தையும் நட்பையும் இழப்பதுடன் தனது ஆளுமையையும் இழக்கிறான். உணர்ச்சிகள் தன்னை ஆட்கொள்ளும்போது, அவற்றைக் கட்டுக்குள் வைத்து கையாளத் தெரியாமல், உள்ளது உள்ளபடியே உணர்ச்சிகளைக் கொட்டுகிறவன் தனது இயலாமையை உணர்வதில்லை. இயலாமையை உணர்கிறவன் அதனை மூடிமறைக்க முயலுகிறான்.

தான் ஒளிவு-மறைவு இல்லாதவன் என்றும், சூது – சூழ்ச்சி தெரியாதவன் என்றும், எதிர்விளைவுகளுக்கு அஞ்சாதவன் என்றும், மிகுந்த மானமுள்ளவன் என்றும், மிகுந்த நேர்மையானவன் என்றும், தவறென்று தெரிந்தால் உடனே தட்டிக் கேட்பவன் என்றும், அனைவருக்கும் நல்லவனாய் நடிக்கத் தெரியாதவன் என்றும், யாரோடும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாதவன் என்றும், ஒழுங்கு மீறுவோர் யாராயிருந்தாலும் உடனே அவர்களைத் தண்டிக்கக் கூடியவன் என்றும், அநீதிகளையும் அநியாயங் களையும் வேடிக்கைப் பார்க்கத் தெரியாதவன் என்றும், இன்னும் இவை போன்று ஏராளமாயத் தனது இயலாமைக்கு ஞாயம் கற்பிக்கிறான். நேர்மை, தூய்மை, துணிவு, விரைவு போன்ற உயரிய பண்புகள் மனிதனின் ஆளுமையைச் செழுமைப்படுத்தக் கூடியவையே ஆகும். இப்பண்புகள் யாவற்றையும் இழந்தால்தான் உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்க்கமுடியும் என்பதில்லை.

நேர்மை தூய்மையைத் தரும்! தூய்மை துணிவைத் தரும்! துணிவு விரைவைத் தரும்! இவை யாவும் மன அழுத்தத்தை அண்டவிடாமல் தடுக்கும்! உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்க்கும்! ஆனால், மனிதன் தனது உணர்ச்சிகளைத் கையாளத் தெரியாமல் தடுமாறும் இயலாமைப் போக்கிற்கு ‘நேர்மையின் வெளிப்பாடு’ என விளக்கம் கூறுகிறான். உணர்ச்சிவயப்படுவதுதான் நேர்மைக்கு அடையாளம், துணிவுக்கு சாட்சியம் என்பதில்லை. உணர்ச்சிவயப்படாமலிருப்பது என்பது, அடங்கிப் போவது என்றும் அச்சப்படுவது என்றும் பொருளாகாது. நெஞ்சுரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் உணர்ச்சிகளைத் தனது கட்டுக்குள் வைத்துக் கையாளும் பக்குவத்தைப் பெறவேண்டும். உணர்ச்சி களைக் கையாளத் தெரியாதபோது உறவுகளையும் கையாளத் தெரியாது. உணர்ச்சிகளுக்குரிய பண்புகளையும் ஆற்றல்களையும் அறியாதபோது அவ்வுணர்ச்சிகளைக் கையாள முடியாது.

ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒவ்வொரு வகையான பண்பு மற்றும் வலிமை உண்டு. எத்தகைய உணர்ச்சிக்கு மனிதன் ஆட்படுகிறானோ அவ்வுணர்ச்சியின் பண்புக்கும் வலிமைக்கும் ஏற்றவாறு செயற்படுகிறான். எனவே, தன்னை ஆட்கொள்ளும் உணர்ச்சியின் பண்பையும் வலிமையையும் அறிந்துகொள்வதன் மூலமே அவ்வுணர்ச்சியை எவ்வாறு கையாள வேண்டுமென்பதை மனிதனால் தீர்மானிக்க இயலும். பிறவிப் பண்பால் வெளிப்படும் உணர்ச்சிகளாயினும், புறச்சூழல்களால் தூண்டப் படும் உணர்ச்சிகளாயினும் அவற்றை எவ்வாறு கையாள வேண்டு மென்பது அவ்வுணர்ச்சிகளைப் பற்றிய புரிதல்களிலிருந்தே அமையும்.

பெரும்பாலும் உணர்ச்சிகள் பிறரால் அல்லது புறச்சூழல்களால் தூண்டப்படும். அத்தகைய சூழல்களையும் தூண்டப்படும் உணர்ச்சி களையும் கையாளுவதிலிருந்து மனிதனின் ஆளுமை வெளிப்படும். தனக்கு விருப்பமில்லாத, உடன்பாடில்லாத சூழல்கள் அமையும்போதும், உணர்ச்சிகள் தூண்டப்படும்போதும் அத்தகைய சூழல்களுக்கும் உணர்ச்சி களுக்கும் ஆட்படாமல் அல்லது தன்னை அவற்றுக்குப் பறிகொடுக்காமல் அல்லது பலியாகாமல் தற்காத்துக்கொள்வது இன்றியமையாததாகும். அமைப்பாக்க நடவடிக்கையில் இத்தகைய தற்காப்பு நடவடிக்கையானது தவிர்க்க இயலாத தேவையாகும். தன்னை ஆட்கொள்ளும் உணர்ச்சி களுக்கு, தற்காத்துக்கொள்வதற்கு உரிய முனைப்பும் தொடர் முயற்சிகளும் தேவை. தீங்கு விளைவிக்கும் உணர்ச்சிகள் தன்னை அண்டவிடாமல் தவிர்க்கவோ தடுக்கவோ வேண்டும். அவ்வாறு தவிர்க்கவோ தடுக்கவோ இயலாமல் தன்னை அண்டினாலும் அவற்றை நெடுநேரமோ அல்லது நெடுநாட்களோ நெஞ்சில் தேங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவற்றை நீர்த்துபோகச் செய்யவோ, முற்றிலும் அப்புறப்படுத்தவோ வேண்டும். அவ்வுணர்ச்சிகள் தூண்டப்படுவதற்கு எது மூலக்கூறோ அதனை மறக்கவோ, விலக்கவோ வேண்டும். இதற்கு நேர்மறையான சிந்தனைகளின் மூலமே தீர்வுகாண இயலும்.

எதிர்மறையான உணர்ச்சிகளைத் தூண்டும் எதிர்மறையான சிந்தனை களை நீர்த்துப்போகச் செய்வதற்கு அல்லது வலுவிழக்கச் செய்வதற்குத் தன்னைச் சுற்றியுள்ள தொடர்புகளையும் உறவுகளையும் நேர்மறை யானவையாக, ஆக்கப்பூர்வமானவையாக மாற்றி அமைத்துக்கொள்ளுதல் வேண்டும். ‘மாற்றி அமைத்தல்’ என்றால் தனக்கு வேண்டாத பிறரை அல்லது புறச்சூழலை தனது விருப்பத்திற்கேற்ப மாற்றுவது ஆகாது. அது அவ்வளவு எளிதானதல்ல. பெரும்பாலும் இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை.

எதிர்மறை சிந்தனைகள், எதிர்மறை அணுகுமுறைகள் என்னும் தன்னிலையிலிருந்து மாறாமல், பிறரை மாற்றவோ, புறச்சூழலை மாற்றவோ மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. நேர்மறை சிந்தனைகள், நேர்மறை அணுகுமுறைகள் என தன்னுடைய பார்வையில், தன்னுடைய போக்கில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சிகளே வெற்றிகரமாக அமையும்.
இவ்வாறு தன்னை மாற்றிக்கொள்ளும் நடைமுறைகளிலிருந்து மட்டுமே தனக்கு எதிரான அல்லது எதிர்மறையான உணர்ச்சிகளைத் தூண்டும் பிறரையும் புறச்சூழலையும் தனக்கு இணக்கமான வகையில் மாற்றிக்கொள்ள இயலும். இவ்வாறு தன்னை மாற்றிக்கொள்வது, தன்னை மாற்றிக்கொள்வதன் மூலம் பிறரை அல்லது புறச்சூழலை மாற்றுவது என்னும் இவ்விரு நடைமுறைகளும் வெற்றிகரமாக அமைவதற்கு, தான் சார்ந்துள்ள சூழலில் நிகழ்பொழுது இருப்புநிலையையும் இயல்புகளையும் ஒரு ‘பொது பண்பு’ என ஒப்புக்கொள்ளுதல் வேண்டும்.

அதாவது, தனக்கு எதிராக நடக்கும் யாவும் ‘தனக்கு மட்டுமே’ நிகழ்கின்றன என்று நம்புவது கூடாது. தனக்கு வேண்டாதவர்கள் திட்டமிட்டு தன்னை மட்டுமே குறிவைத்து தனக்கு எதிரான சதிவேலை களில் ஈடுபடுகின்றனர் என்றும், தனக்கு மட்டுமே ஏமாற்றமும், தோல்வியும், அவமானமும், அவதூறும் நிகழ்கின்றன என்றும் எண்ணாமல், மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இவை யாவும் வெவ்வேறு சூழல்களில் நிகழவே செய்யும் என்பதைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். இத்தகைய புரிதலே, சமூகத்தின் ‘பொதுப்பண்பு’ என ஒப்புக்கொள்ளுதலைக் குறிக்கும். உணர்ச்சிகள் தூண்டப்படுவதும், அவ்வுணர்ச்சிகளுக்கு ஆட்படுவதும், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தனது ஆளுமையை இழப்பதும் சுற்றம் மற்றும் நட்பைச் சிதைப்பதும் தனியருவருக்கு மட்டுமே நிகழக் கூடியவை அல்ல. ஒவ்வொருவரும் ஏதோவொரு சூழலில் எதிர்கொள்ளக்கூடிய மானுடத்தின் ஒரு பொதுப்பண்பே ஆகும்.

மற்றவர்களுக்கும் நிகழக் கூடியவையே தனக்கும் நிகழ்கின்றன என்றும், மற்றவர்கள் எதிர்கொள்வதைப் போலவே, தானும் அவற்றை எதிர்கொண்டேயாக வேண்டும் என்றும் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளவோ அல்லது பக்குவப்படுத்திக்கொள்ளவோ தனக்குத்தானே ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தகைய ஒப்புக்கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்னும் பண்புநிலையானது. குறிப்பிடத் தகுந்த, மிகவும் இன்றியமையாத ஒரு ‘மாற்றநிலை’யாகும். சமூக இருப்புநிலைகளை, மானுட இயல்புகளை, நேர்-எதிர் முரண்களையெல்லாம் யாவருக்கும் ‘பொதுவான உலகியல்பு’ என ஒப்புக்கொள்வதிலிருந்துதான் தன்னை மாற்றிக்கொள்ளும் புள்ளி தொடங்குகிறது. இவ்வாறு தன்னை மாற்றிக் கொள்வதற்கான பண்பு மாற்றமே தனக்கு ஏதுவான புறச்சூழல் மாற்றத்தை உருவாக்கும். ‘தான்மட்டுமே சரி’ என்றும் ‘தனக்கு மட்டுமே சதி’ என்றும் நம்புவதோடு, அக்கருத்தில் மறுஆய்வுக்கு இடமேயின்றி பிடிவாதமாக உறுதியாயிருப்பதும் புறச்சூழலை மாற்றுவதற்கு இடமளிக்காது.

பிறர் தன்னை மாற்றிக்கொள்ள உடன்படாதபோது, தான் மட்டும் ஏன் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்? தான் மட்டுமே தன்னை மாற்றிக் கொள்வதால், தான் பிறரிடம் தோற்றுப் போனதாகிவிடுமே! பிறர் வெற்றி பெற்றதாகிவிடுமே! மற்றவர்கள் கெட்டிக்காரர்களாகவும், தான் மட்டும் ஏமாளியாகவும் இருப்பதாகிவிடுமே! என்றெல்லாம் மிகைப்படுத்திப் பார்க்கும் எவராலும் தன்னை மாற்றிக்கொள்ளவே இயலாது. எந்தவொரு சூழலிலும் தான் தோற்றுப் போகவோ, ஏமாந்து போகவோ கூடாது என்று எண்ணுவதால், தன்னை மீளாய்வு செய்வதற்கோ, தன்னிலையை மாற்றிக் கொள்வதற்கோ இடம்தராமல், ‘தானே சரி; தானே கெட்டி; தனக்கே வெற்றி’ – என்கிற பிடிவாதம் மேலோங்கும்.

அமைப்பாக்க நடவடிக்கையில், உடன் பணியாற்றுவோருடன் அவ்வப் போது ஏற்படும் உணர்ச்சி மோதல்களின்போது, ஒவ்வொருவருக்கும் இத்தகைய பிடிவாதப் போக்குகள் இருப்பின், ஒவ்வொருவரும் உணர்ச்சி வயப்படுதலுக்கு ஆட்படும் நிலையே உருவாகும். இதனால், தோழமை உறவுகள் பாதிக்கப்பட்டு ஒருங்கிணைந்து களப்பணியாற்றிட இயலாத நிலை ஏற்படும். தான் தோற்றாவது, தான் ஏமாந்தாவது, உடன்பணியாற்று வோரின் தோழமையைக் காப்பாற்றுவதுதான், ஒரே நோக்கத்திற்கான களத்தில் உண்மையான வெற்றியாகும். பகைமையை வீழ்த்துவதில்தான் வெற்றி! தோழமையை அரவணைப்பதில்தான் வெற்றி! உணர்ச்சி வயப்படும்போது தோழமையையும், பகைமையாகவே கருத நேரிடும்! தனக்கோ அல்லது அமைப்புக்கோ அல்லது மக்களுக்கோ தோழமை என்னும் பெயரில் துரோகம் இழைக்கப்பட்டால், அத்துரோகத்தை எப்படி தோழமையாக அரவணைக்க முடியும் என்கிற கேள்வி எழலாம்! பகைமையைப்போல் துரோகம் வெளிப்படையானது இல்லை என்பதால் அதனை பாதிப்புகளின்போதுதான் அடையாளம் காண இயலும். துரோகம் பகைமையைவிடவும் கொடியது. பகைமையை வெற்றிகொள்ள வேண்டும்; துரோகத்தை வெட்டிஎறிய வேண்டும்! பகைமையை வீழ்த்த வேண்டும்; துரோகத்தைத் தண்டிக்க வேண்டும்!
துரோகத்தைத் தோழமை என்னும் பெயரில் அனுமதிக்கவோ ஏமாறவோ கூடாது.

பொதுவாழ்க்கையில் அல்லது அமைப்பாக்க நடவடிக்கையில் தனிநபர்கள் ‘தன்னை முன்னிறுத்துவது’ வழக்கமான நடைமுறையாகும். அமைப்பையும், அமைப்புக்கான கொள்கை மற்றும் நோக்கங்களையும் முன்னிறுத்துவதைக் காட்டிலும் ‘தன்னை முன்னிறுத்துவது’தான் பெரும்பாலும் முதன்மையானதாக விளங்கும். உடன்பணியாற்றுவோர் ஒவ்வொருவரும் தன்னை முன்னிறுத்துவதால் எழும் சிக்கல்களே, முரண்பாடுகளே உணர்ச்சிவயப்படுதலுக்கு அடிப்படையாக அமைகின்றன. தன்னை முன்னிறுத்துவதால், அதனை ஒவ்வொருவரும் தனக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதும் நிலை ஏற்படும். தன்னை முன்னிறுத்தாமல் அமைப்பை முன்னிறுத்துவோருக்கு, தன்னை முன்னிறுத்தும் பிறரின் நடவடிக்கைகள் தனக்கு எதிரானவையாகத் தெரிவதில்லை. எனினும், அமைப்புக்கு எதிரானவை என்று கருதலாம். தனக்கு எதிரானவை என்று கருதும்போது ஏற்படும் உணர்ச்சிகள், பிறரின் நடவடிக்கைகள் யாவும் தனக்கு எதிரான துரோகம் என்று நம்பவைக்கும். அதேவேளையில், தன்னை முன்னிறுத்தும் போக்குகள் யாவும் திட்டமிட்ட துரோகம் எனக் கருத முடியாது.

பிறர் தன்னை முன்னிறுத்துவது இன்னொருவருக்கு எதிரான துரோகம் எனப் புரிந்துகொள்வதைவிட, போட்டி எனப் புரிந்துகொள்ளலாம். உடன் பணியாற்றுவோருக்கிடையில் போட்டி உருவாவதும், போட்டியில் தான் பின்னுக்குத் தள்ளப்படாமல் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று விரும்புவதும் இயல்பானதேயாகும். தன்னை முன்னிறுத்தி, தன்னை நிலைநிறுத்தி தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பது, தன்னுடன் களத்தில் பணியாற்றும் பிறருக்குத் துரோகம் இழைக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது தான் சார்ந்த அமைப்புக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல. பொதுவாக தன்னை முன்னிறுத்துவதால் பிறருக்கு ஏற்படும் பாதிப்பு களைப் பற்றியோ, அமைப்புக்கு அல்லது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு களைப் பற்றியோ அவ்வாறு யாவற்றிலும் தன்னை முன்னிறுத்துவோர் சிந்திப்பதற்கு வாய்ப்பில்லை. தன்னுடைய நலன்களைக் கருத்தில் கொண்டு தன்னை முன்னிறுத்துவோருக்கு, அமைப்புக்கோ மக்களுக்கோ துரோகம் இழைக்க வேண்டும் என்கிற உள்நோக்கம் ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை. அமைப்பையும், மக்களையும் தனக்காகப் பயன்படுத்திக் கொள்வதும், அதன்வழி தன்னை முன்னிறுத்திக்கொள்வதும் ‘தன்னலத்தின்’ வெளிப்பாடுகளேயாகும். தன்னலம் என்பது அமைப்புக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கலாம்! அதனால், அது துரோகம் என்றாகாது. ஆனால், தன்னலம் துரோகத்திற்கு அடித்தளமாக அமையலாம்.

தன்னலம், தன்னை வெளிப்படையாக முன்னிறுத்துவதிலேயே குறியாக இருக்கும். துரோகம், தன்னை மூடி மறைத்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கும். தன்னலம், துரோகத்தை அடிப்படையாகக் கொண்டிருப்ப தில்லை. துரோகம், தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். தன்னலம், தனக்கே உரியதாக இருக்கும். துரோகம், பகைமைக்கானதாக இருக்கும். தன்னலம், வெட்கமறியாது! துரோகம், இரக்கமறியாது! தன்னலம், தன்னால் உருவாக்கப்படுவதாகும். துரோகம், பகைமைத் தொடர்புகளால் உருவாக்கப்படுவதாகும். தன்னலம், தன்னைச் சார்ந்தோருக்கும் பயன்படுவ தில்லை. துரோகம், பகைமைக்குப் பயன்படுவதாகும். தன்னலம், துரோகத்திற்கும் முந்தைய நிலை. துரோகம், தன்னலத்தின் அடுத்த நிலை. இவ்வாறு தன்னலத்தையும் துரோகத்தையும் பிரித்தறியலாம். இதிலிருந்து தன்னலத்தை துரோகமாகக் கருதக்கூடாது என்பதையும் அறியலாம். துரோகமானது பகைமையுடன் மறைமுகமான தொடர்புகளும், சதிவேலை களும் கொண்டிருக்கும். பகைமையால் இயக்கப்படுவதாக இருக்கும். இதுவே, துரோகத்தை தன்னலத்திலிருந்து வேறுபடுத்துவதாகும். எனவே, தன்னை முன்னிறுத்தும் தன்னலத்தைத் துரோகமாகக் கருதி, உணர்ச்சி வயப்படுவதும் தண்டிக்க முனைவதும் அமைப்பாக்க நடவடிக்கையில் தோழமையைச் சிதைக்கும்! ஒருங்கிணைவைப் பாதிக்கும்!

தன்னை முன்னிறுத்தி தன்னலத்துடன் செயல்படுவோரால் பிறருக்கும் தன்னை முன்னிறுத்தும் போக்குத் தூண்டப்படுகிறது. ஒருவரைப் பார்த்து இன்னொருவர் என ஒவ்வொருவரும் தன்னை முன்னிறுத்துவதில் போட்டி போடும் நிலை உருவாகிறது. இதனால், அமைப்பு நலன் மற்றும் மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்படுவதுடன், தன்னை முன்னிறுத்துவோருக் கிடையிலான போட்டி மனோ நிலையானது பொறாமை உணர்ச்சிகளை வளர்க்கிறது. பொறாமை உணர்ச்சிகள் மிகவும் தீங்கானவையாகும். பொறாமை, பகைமையைப் பெருக்கும்! பகைமை, தோழமையைச் சிதைக்கும்! பழிவாங்கத் துடிக்கும்! உடன்பாடுள்ளவர்களுடன் ஒருங்கிணைந்து குழுவாதம் வளர்க்கும்! இத்தகைய குழுவாதத்திற்குள் சிக்கிக்கொள்ளும் குழுவாதிகள், தன்னை முன்னிறுத்துவதுடன் தனது குழுவையும் முன்னிறுத்துவதில் தீவிரம் காட்டுவார்கள். இதனால், குழுக்களுக்கிடையில் போட்டியும் பொறாமையும் மோதலும் உருவாகும். அமைப்பாக்க நடவடிக்கையில் இது பெரும் பாதிப்பை விளைவிக்கும்.
தன்னை முன்னிறுத்துவதாலும் தனது குழுவை முன்னிறுத்துவதாலும் தங்களுக்கிடையில் உருவாகிற போட்டி-பொறாமை உணர்ச்சிகளால் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காக ஒருவருக்கொருவர் பழிசுமத்துவதும், அவதூறு பரப்புவதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை ஏற்படும். இவை தன்னலம் சார்ந்த போக்குகளின் வெளிப்பாடுகளேயாகும். இவை தண்டிக்கப்படுவதற்குரிய தீங்குகள் அல்லது குற்றங்களே ஆகும். எனினும் இவற்றை துரோக வரையறைக்குள் மதிப்பிடக்கூடாது. இவை சட்டத்தால், விதிமுறைகளால் நெறிப்படுத்தக் கூடியவையே ஆகும்.

தன்னையோ தன்னுடைய குழுவையோ முன்னிறுத்துவதால் விளையும் கேடுகளானாலும், பகைமையுடன் மறைமுக உறவுகொண்டு சதிவேலை களில் ஈடுபட்டு துரோகமிழைப்பதால் விளையும் தீங்குகளானாலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தண்டனை வழங்குவது இன்றியமையாத தேவையாகும். அமைப்பாக்க நடவடிக்கையில் ஈடுபடுவோர், தண்டனை வழங்குவதிலும் தன்னை முன்னிறுத்துவதனால், அது விருப்பு – வெறுப்பின் அடிப்படையில், ஒரு சார்பு நிலையில், உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப் படுவதாகவே கருதப்படும். எத்தகைய குற்றங்களாயிருப்பினும், எத்தகைய நபர்களாயிருப்பினும், விசாரணை மற்றும் தண்டனை வழங்குவதில் தன்னை முன்னிறுத்துவது கூடாது. விசாரிப்பதற்கும் தண்டிப்பதற்கும் உரிய அதிகாரமுடையவர்களாயிருப்பினும், அமைப்பையும் அமைப்புக்கான சட்டத்தையுமே முன்னிறுத்த வேண்டும். அமைப்பே விசாரிக்கிறது; சட்டமே தண்டிக்கிறது என்கிற நம்பிக்கை தண்டிக்கப்படுவோருக்கும் பிறருக்கும் உருவாதல் வேண்டும். அவ்வாறின்றி, தன்னை முன்னிறுத்தும் போது, தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படவோ, தண்டனையை ஏற்றுக்கொள்ளவோ உடன்படுவதில்லை என்னும் நிலை உருவாகிறது. அத்துடன், தண்டனை வழங்குவோரின் நடவடிக்கைகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவமதிப்புச் செய்வதும் போன்ற எதிர்வினைகள் ஆற்றும் நிலையும் உருவாகிறது.
எனவே, எத்தகைய தண்டனைகள் வழங்குவதாக இருந்தாலும், அமைப்பையும் சட்டத்தையும் முன்னிறுத்துவதுதான், அமைப்பு நலன் மற்றும் மக்கள் நலன்களைப் பாதுகாப்பதாக அமையும். விருப்பு-வெறுப்பின்றி, நீதி தவறாமல் நேர்மையாக விசாரித்தாலும், தண்டித்தாலும், அமைப்பையும் சட்டத்தையும் முன்னிறுத்தாதபோது, தன்னை முன்னிறுத்தும் தனிநபர் மீதே வெறுப்பும் பகையும் உருவாகும்!

அமைப்புக்காக, மக்களுக்காக தனிப்பட்ட பகையை வளர்த்துக்கொள்வது தேவையற்றதாகும். போட்டி – பொறாமை, வெறுப்பு-பகைமை போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், ஆட்படாமல், தவிர்ப்பதற்கும் தற்காத்துக்கொள்வதற்கும், அமைப்பாக்க நடவடிக்கையில் தன்னையோ, தனது குழுவையோ முன்னிறுத்தும் தன்னலப் போக்கைக் கைவிட்டு, அமைப்பையும், மக்களையும், அமைப்புக்கான சட்டம் மற்றும் விதிகளையுமே முன்னிறுத்த வேண்டும்! இத்தகைய அணுகுமுறையே தனிநபர்களுக் கிடையிலான முரண்பாடுகளையும் மோதல்களையும் தடுக்கும் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களுக்கு வழிவழிக்கும்! வலுசேர்க்கும்!

அமைப்பை முன்னிறுத்தும் அடித்தளம் அமைப்போம்! – அமைப்பின்
அரசியலை முன்னிறுத்தும் ஆளுமை வளர்ப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here