இராமன் பாலம் கட்டியது உண்மையா?

0
1716

 

இராமன் பாலம் கட்டியது உண்மையா?

அண்டப்புளுகர்களின் செப்படிவித்தை செல்லாது!

கலைஞர் தலைமையிலான பொதுக்கூட்டத்தில்
திருமாவளவன் எச்சரிக்கை

16.5.2007 அன்று தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் சென்னை அண்ணாநகர் புல்லாரெட்டி நிழற்சாலையில் ‘சேது சமுத்திரக் கால்வாயும் ராமர் பாலமும்’ என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக முதல்வர் கலைஞர் தலைமை தாங்கினார். மாண்புமிகு அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் என்.வரதராசன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, விடுதலைச்சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். விடுதலைச்சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் உரையாற்றும்போது பலத்த கரவொலி எழுப்பி ஒவ்வொரு வார்த்தையையும் வரவேற்றனர். அந்த சிறு உரையை இங்கே பதிவுசெய்கிறோம்…

மிழக முதல்வர், சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களே, தலைவர் பெருமக்களே, தமிழ்ப் பெருங்குடி மக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கம். இந்த நல்ல வேளையில், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய நன்றியைச் சொல்ல கடமைப்பட் டிருக்கிறேன். தன்னுடைய ஆசைப் பேரப்பிள்ளை அமர்ந்திருந்த அமைச்சர் நாற்காலியில் ஒரு ஆதிதிராவிட சகோதரனை அமர வைத்து அழகு பார்த்துக்கொண்டி ருக்கின்ற முதல்வர் கலைஞர் அவர்களை முதலில் நெஞ்சார பாராட்டுகிறேன், நெஞ்சார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியாரின் வழிவந்த தலைவர் என்கிற காரணத்தால், இன்றைக்கு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த ஒரு சகோதரனைத் தன்னு டைய பேரப்பிள்ளை (தயாநிதி மாறன்) அமர்ந்த நாற்காலியில் அமரவைத்து, சமத்துவத்தை நிலை நாட்டி, தான் பெரியாரின் பேரப் பிள்ளைதான் என்பதை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார். இந்தச் சூழலில் பெரியாரின் கருத்துக்களை பாதுகாத்திட வேண்டும்; மதவாத ‘குரங்கு’களின் சேட்டையை தடுத்து நிறுத்திட வேண்டும்; அந்த வானரங் களின் வாலை அறுத்தாக வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த பொதுக்கூட்டத்திற்கும் கலைஞர் அவர்கள் உடனடியாக ஏற்பாடு செய்திருக்கிறார். அண்டப் புளுகர் கள், ஆகாசப்புளுகர்கள் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக நடத்து கின்ற நாடகத்திற்கு அசட்டையாக இருந்துவிடாமல், இதற்கெல்லாம் ஏன் பதில்சொல்லவேண்டும் என்று எண்ணி இருந்துவிடாமல், இது பொய்தானே உண்மையல்லவே என்று அலட்சியம் செய்துவிடாமல், கலைஞர் அவர்கள் இதற்காக ஒரு பொதுக்கூட்டம் கூட்டி விளக்கம் சொல்ல வந்திருக்கிறார் என்கிற போது மொய்சிலிர்க்கிறது. ஒவ் வொரு நாளும் நாடாளு மன்றத்திலே பாரதிய சனதாவினர் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் எத்தனையோ குடிசைகள் எரிந்துக் கொண்டிருக்கின்றன, அதைப்பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை. குடிசை போடுவதற்குக்கூட வழி யில்லாமல் வறுமையிலே வாடுகின்ற மக்கள் ஏராளம் இருக்கிறார்கள்; அவர்களுக்காக வாதாட அவர் களுக்கு நேரமில்லை. ஆனால், இல்லாத ஒன்றுக்காக வரிந்து கட்டிக்கொண்டு, இராமர் பாலத்தை இடிக்கப்போகிறார்கள் என்று கண்ணீர் வடிக்கிறார்கள்! என்ன வேடிக்கை இது!

இங்கே பேசிய தலைவர்கள் பலரும், “தலைவர் கலைஞருக்கு இந்தப் புகழ் ஒரு சரித்திரப் புகழாக நிலைநாட்டப்படும் என்கிற பொறாமை உணர்ச்சியால், காழ்ப் புணர்ச்சியால் சிலர் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்புகிறார்கள்” என்கிற கருத்துக்களைச் சொன்னார்கள்!
கலைஞர் அவர்கள் எப்போதுமே காலம் உள்ளவரையில் தன்னுடைய சாதனைகள் நிலைத்து நிற்க வேண்டும் என்று எண்ணி திட்டம் போட்டு செயல்படக்கூடியவர்; தொலைநோக்கு பார்வை உள்ளவர். அதனால்தான், வள்ளுவனுக்கு கோட்டம் அமைத்தார்! இந்த மண்ணில் தமிழன் உள்ளவரையில், வள்ளுவர் கோட்டத்தை பார்க்கின்ற போதெல்லாம் கலைஞர் அவர்களை நினைத்து பெருமைப்படுவான்! வள்ளுவனுக்கு குமரி முனையிலே சிலை எழுப்பினார்! தமிழன் குமரி முனையில், வள்ளுவனின் உச்சி முடியை பார்க்கின்றபோதெல்லாம் கலைஞரை எண்ணி பெருமைப் படுவான்; மகிழ்ச்சியடைவான்! அதைப்போலவே, பூம்புகார் கோட்டத்தையும் கட்டபொம்மனுக்கு நினைவிடத்தையும் எழுப்பினார்.

இவையெல்லாம் காலம் உள்ள வரையில் கலைஞருடைய பெருமை களைச் சொல்லுகின்ற சாதனைகள். அந்தவரிசையில், இனி எத்தனை தலைமுறையானாலும் கலைஞரின் பெருமையைப் சொல்லுகின்ற ஒரு திட்டம்தான் ‘சேது கால்வாய் திட்டம்’! கல்லணையைக் கட்டினான் கரிகாலன் என்று இன்றைய தலைமுறையில் நாம் வரலாற்றிலே படித்துக்கொண்டிருக்கிறோம். ‘கால்வாயை வெட்டினார் கலைஞர்’ என்று இனி வரும் தலைமுறை படிக்கப்போகிறது. “சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம்” என்றான் பாரதி! அந்த மணல் திட்டுக் களில் இன்னும் கொஞ்சம் மணல் கொட்டினால், அங்கே வீதியைப் போட்டு இலங்கையையும், இந்தியா வையும் இணைத்துவிடலாம் என்று கனவு கண்டான் பாரதி! அந்த இடத்திலே வீதி அமைப்பதற்குப் பதிலாக, சேதுவை ஆழப்படுத்திக் கால்வாய் வெட்டினால் தமிழர்களுக்கு பெரும் பயன் விளைவிக்கும் என்று கருதி இன்றைக்கு அங்கே கால் வாயை வெட்டிக்கொண்டிருக்கிறார். இந்த வரலாற்றுப் பெருமை கலைஞர் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்று எண்ணுகிறவர்கள்தான் இப்படிப்பட்ட கதைகளை கட்டிவிடு கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

‘இராமாயணமும், பகவத் கீதையும் பைத்தியக்காரர்களின் உளறல்கள்’ என்று சொன்னவர், தந்தை பெரியார் மட்டுமல்ல; புரட்சி யாளர் அம்பேத்கர் அவர்களும் தான்! இராமாயணத்தை கொளுத்தி யிருக்கிறார், பகவத் கீதையை கொளுத்தியிருக்கிறார்.

அந்த புரட்சியாளர்கள் தோன்றிய இந்த மண்ணில் இன்றைக்கு நாம் எதற்கெல்லாம் விடை சொல்ல வேண்டிய, விளக்கம் சொல்லவேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கி றோம் என்பதுதான் வேதனையளிக்கிறது.
இராமன் பாலம் கட்டியது உண்மையென்று நம்பினால், அணில் மணல் சுமந்த கதையை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அந்தப் பாலத்தை கட்டுவதற்காகத் தானே அணில் போய் மணலிலே படுத்துப் புரண்டு முதுகிலே மணலை ஒட்டவைத்து அந்த மணல் மூலமாக பாலத்தை கட்டினான் என்று கதைச் சொல்லுகிறது. அப்படியென் றால், அணில் மணலை அள்ளியது உண்மை என்று ‘நாசா’ விஞ்ஞானி களும் ஒத்துக்கொள்கிறார்களா? என்கிற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, இந்த கற்பனை கதை களுக்கு தமிழர்கள் பலியாகக்கூடாது; இராமன் கதைகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதற் காகத்தான் ராம் லீலாவுக்கு மாற்றாக தந்தை பெரியார் இராவண லீலாவை நடத்தினார். இராவணன் தமிழன், இராவணன் தமிழை வளர்த்தவன் என்று இராவணனுடைய காவியத்தை புலவர் குழந்தை படைத்தார். இராவண காவியத்தை நாம் படிப்ப தில்லை. இராவண காவியத்தை படிக்கின்றபோதுதான், இராவணன் தமிழனாக வாழ்ந்தான், தமிழனாக ஆட்சி புரிந்தான், தமிழை வளர்த்தான் என்கிற வரலாற்றை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இராவணன் மிகச்சிறந்த ஒரு மருத்துவராக, தமிழ் மருத்துவராக, சித்த மருத்துவராக விளங்கி இருக்கிறார் என்கிற குறிப்புகள் கிடைக்கின்றன.

அவற்றுக்கெல்லாம் குறிப்புகள் இருக்கின்றபோது, இராமன் பாலம் கட்டியதற்கு ஏன் குறிப்புகள் இல்லை? புராணக் கதைகளைத்தவிர வேறு எந்த ஆதாரங்களும் இல்லையே! கரிகாலன் கல்லணை கட்டினான் என்பதற்கு குறிப்புகள் இருக்கின்றன. சிங்களவர்கள் பனிரெண்டாயிரம் பேரை சிறைபிடித்துவந்து இங்கே கல்லணை கட்டினான் கரிகால் பெருவளத்தான் என்பதற்கான கல்வெட்டு குறிப்புகள் இருக்கின்ற போது, அந்தக் காலத்திலே 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னா லேயே இராமனால் பாலம் கட்ட முடிந்தது என்று சொன்னால், அது வரலாற்றிலே எவ்வளவுப்பெரிய இடத்தைப் பெற்றிருக்க வேண்டும்! எவ்வளவு சிறப்பான இடத்தை பெற்றிருக்க வேண்டும்? அவை ஏன் இல்லை?
இல்லாத ஒன்றை கற்பனைச் செய்து, இன்றைக்கும் நம்மை ஏய்க்கப்பார்க்கிறார்கள்; இராமன் பெயரைச் சொல்லி ஏய்க்கப் பார்க்கின்ற கும்பலுக்கு நாம் விடை யளிக்க வேண்டும். நாம் எடுத்திருக் கின்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் கலைஞர் அவர்கள் இந்த மகத்தான பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் இருக்கின்றவரையில், இப்படிப்பட்ட அண்டபுளுகர்களுக்கும், ஆகாசப் புளுகர்களுக்கும் இந்த மண்ணிலே இடம் இருக்காது, அவர்களின் செப்படிவித்தை செல்லாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

பாபர் மசூதி இருந்தது என்பதற்கு வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அந்த பாபர் மசூதியை இடித்தார்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதைப் போல பாபர் மசூதியை இடித்ததற்கு ஒரு எதிர்வினை இருந்துதானே தீரவேண்டும். ஒருவேளை இராமர் பாலம் இருப்பது உண்மை என்றால், பாபர் மசூதியை இடித்ததற்காக இராமர் பாலத்தை இடித்தே தீரவேண்டும்! அதுதான் பெரியாரின் பிள்ளைகள், பெரியாரின் பேரப் பிள்ளைகள் செய்யவேண்டிய கடமையாகும்! ஆனால், இராமர் பாலம் இல்லை. அப்படி ஒரு கதை தான் கட்டப்பட்டிருக்கிறதே தவிர உண்மை அதுவல்ல என்பதை உலகம் நன்கு உணரும். விஞ்ஞானி கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே, அப்படிப்பட்ட அந்த இடத்திலே இன்றைக்கு, ஆழ கால்வாய் தோன்றி தமிழர்களின் எதிர்காலத்திற்கு நல்ல பயனுள்ள திட்டத்தை கொண்டுவர முயன்றிருக் கின்ற நம்முடைய இன்றைய கரிகால் சோழனாய் இந்த மண்ணிலே வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற தம்முடைய பிள்ளைமீது புகார் வந்தால்கூட, தாம் விசாரித்தால் சந்தேகப்படுவார்கள், சி.பி.ஐ.விசாரிக் கட்டும் என்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட்டு இன்றைக்கு மனுநீதிச் சோழனாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்ற மாண்புமிகு கலைஞர் அவர்களே உங்கள் முயற்சி வெல்லும்! அதற்கு விடுதலைச்சிறுத்தைகள் என்றைக்கும் உறுதுணையாக இருப்போம் என்றுச் சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

16.5.2007 – ‘சேது சமுத்திரத் திட்டமும் ராமர்பாலமும்’நிகழ்வில் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here