திருமா காட்டும் புதிய பாதை! – ஜூனியர் விகடன் நேர்காணல்

0
372

அ.தி.மு.க-வுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க-வுக்கு உண்டு!

 திருமா காட்டும் புதிய பாதை!
க்கள் நல கூட்டியக்கம் சார்பில் போராட்டங்கள், சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான தலையீடுகள், தேர்தல் கூட்டணிக்கான தயாரிப்புகள் என பரபரப்பாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்தோம்.
‘‘இந்தியாவில் தமிழகம்தான் சாதி கொடுமைகளில் முதலிடத்தில் இருக்கிறது. குடிசைகள் எரிப்பு, பாலியல் வன்கொடுமைகள், சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதை எல்லாம் அரசு கண்டுகொள்வதே இல்லை. உதாரணமாக, கோகுல்ராஜ் கொலை வழக்கில் உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால், ஓர் அதிகாரியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும். ஆனால், இப்போதுவரை அந்த வழக்குச் செல்லும் பாதை தெரியவில்லை. குற்றவாளியே, விசாரணை அதிகாரியிடம் தான் பேசிய உரையாடலை வெளியிடுகிறார். அந்த நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது. இதுபோன்ற சாதிய வழக்குகளில் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழக சட்டமன்றத்திலும் பெயரளவுக்குக்கூட ஜனநாயகம் இல்லை’’ என்று காரசாரமாக ஆரம்பித்தார் திருமாவளவன்.
“தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய வன்முறைகளுக்கு பா.ம.க-தான் காரணம் என்று பொதுவாகக் குற்றம்சாட்டுகிறீர்களே?”
“ஆமாம். அதுதான் உண்மை. ராமதாஸின் ‘அனைத்து சமுதாய அரசியல்’ என்பதே தலித் மக்களைத் தவிர்த்த அரசியல் பாதைதான். இது பி.ஜே.பி-யின் போக்கை போன்று இருக்கிறது. பி.ஜே.பி-யோ, முஸ்லிம்கள் இல்லாத அரசியலை செய்யப் பார்க்கிறது. தலித் மற்றும் சிறுபான்மை மக்களை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்தாலும் தங்களால் வெற்றிபெற முடியும் என்று மோடி நினைக்கிறார். அதைத்தான் பா.ம.க-வும் செய்கிறது. குஜராத்தில் இஸ்லாமியர்களை படுகொலைசெய்து வெற்றிபெற்றதைப்போல, தர்மபுரியில் இளவரசனின் மரணத்தால் அன்புமணி வெற்றிபெற்றார். அதிகாரம் வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை, ஆனால் அது, தலித் மக்களை காவு வாங்கித்தான் நடக்க வேண்டும், தலித் மக்களின் ரத்தத்தில் சோறுபிசைய வேண்டும் என்று ராமதாஸ் எண்ணுவதைத்தான் தவறு என்று சொல்கிறோம். அவர், ஒரு காலத்தில் ‘தமிழர்… தமிழர்’ என்று பேசினார். அது கைகொடுக்கவில்லை. அதன்பின், வட மாவட்டங்களில் பலம் வேண்டும் என்பதற்காக, தலித் மக்களின் ஓட்டுகளைப்பெற எங்களுடன் கைகோத்தார். அந்த சமயங்களில் அவரின் செயல்பாடுகளுக்காக ‘தமிழ்க்குடிதாங்கி’ பட்டம் கொடுத்தோம். ஆனால், இன்று அவர் சாதிய அரசியல்தான் தனக்குக் கைகொடுக்கும் என்று எண்ணிச் செயல்படுகிறார்.”
 “பா.ம.க-வின் வரைவுத் தேர்தல் அறிக்கையையும், கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“இந்த நடவடிக்கைககள் எல்லாமே பேரம் பேசுவதற்காகத்தான். யாரும் இவர்களோடு கூட்டணி சேர மாட்டார்கள். அதைத் தெரிந்துகொண்டு, தங்களைக் கூட்டணியில் இழுக்க நினைக்கும் பி.ஜே.பி-யிடம், ‘தன் மகனை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்குங்கள் அல்லது மத்திய அமைச்சர் பதவி கொடுங்கள்’ என்று காய் நகர்த்தவே இந்தத் தேர்தல் அறிக்கை, பிரசாரக் கூட்டங்கள், முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புகள் எல்லாம்.
அண்மைக்காலமாக, ராமதாஸ் போன்றவர்கள் தலித் வெறுப்பு அரசியலை ஒரு யுக்தியாக கையாள்கிறார்கள். இவர்கள், அன்று இளவரசனில் ஆரம்பித்து வைத்ததுதான், இன்று கோகுல்ராஜ் கொலை வரை தொடர்கிறது. சாதியப் பிரச்னைகளை வைத்து பா.ம.க என்றைக்கு அரசியல் செய்ய ஆரம்பித்ததோ, அன்றைக்கே பெரியாரின் உழைப்பு வீணடிக்கப்பட்டு, தமிழகம் பாழ்பட்டுவிட்டது.”
“வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு எப்படித் தயார் ஆகிவருகிறீர்கள்?”
“இதுவரை அதில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, தலித் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடந்துவருகின்றன. அந்தப் போராட்டக் களங்களில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த மாதம் முதல் மாவட்டம்தோறும் பயணம் செய்து உறுப்பினர்களைச் சந்தித்து, அதன் பின்னர் சட்டமன்றத் தொகுதிவாரியாகப் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டு, ‘வேர்களைத் தேடி’ என்கிற பயணத்தைத் தொடங்க உள்ளோம். அதன் பின்புதான், தேர்தலுக்கான செயல்திட்டங்கள் வகுக்கப்படும்.”
“மக்கள் நல கூட்டியக்கம் விடுதலைச் சிறுத்தைகளின் முயற்சியில் உருவானதுதானே?”
“மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை எதிர்க்கவே இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், தனியார்மயம், ஊழல், மது வியாபாரம், வகுப்புவாத சக்திகளை ஊக்கப்படுத்துதல், ஆணவக் கொலைகள், சாதிப் பிரச்னைகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதே எங்கள் நோக்கம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற கொள்கையை வலியுறுத்தி, தமிழக அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது இடதுசாரி தலைவர்கள், இது வழக்கமான தேர்தல் கூட்டணிபோல அல்லாமல் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் ஒரு கூட்டணியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைத்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.”
“மக்கள் நல கூட்டியக்கமே கூட்டணியாக மாறி தேர்தலை சந்திக்குமா? ஐந்து கட்சி தலைவர்களிடம் ஒருமித்த கருத்து இருக்கிறதா?”
“மக்கள் நல கூட்டியக்கமே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்கிற கருத்து வலுத்துவருகிறது. இயக்கத்தில் இருக்கும் தலைவர்களே இதை வெளிப்படையாகச் சொல்லி வருகிறார்கள். தொண்டர்களும் அதனை பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால், இது ஏதோ அவசர முடிவாக இல்லாமல், கலந்து ஆலோசித்து குறைந்தபட்ச செயல்திட்டங்களை வரையறுத்துக்கொண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் போதுதான் தெரியவரும். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசனும், வைகோ-வும் ‘தி.மு.க., அ.தி.மு.க-வின் பின்னால் இனி போக வேண்டாம். நாமே கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும்’ என்று சொன்னார்கள். ஆனால் ஜவாஹிருல்லா, ‘நாம் கலந்து ஆலோசிக்காமல் இப்படி முடிவெடுப்பது சரியா? இதில் ஜனநாயகம் இருக்கிறதா?’ என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார். மற்றபடி, இந்த இயக்கத்தைவிட்டு அவர் வெளியேறவில்லை.”
“இது பலமான கூட்டணியாக அமையுமா?”
“பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு வந்தன. அதனால், அவர்களின் வாக்கு சதவிகிதம் அதிகமாக உள்ளது. தங்கள் கட்சி பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டும் என்று, எங்களைப் போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடங்களையே கொடுத்தனர். அதனால், எங்களின் வாக்கு சதவிகிதம் குறைவானது என்பதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்போது, மக்கள் ஒரு மாற்று சக்தியை எதிர்பார்க்கிறார்கள். அதைப் பூர்த்திசெய்ய மக்கள் நல கூட்டியக்கத்தால் முடியும். நீங்கள் சொல்வதைப்போல வாக்கு வங்கி, மக்களின் எண்ண ஓட்டம் எல்லாவற்றையும் வைத்துத்தான் நாங்கள் முடிவு செய்வோம்.”
“ம.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருவதற்கு தி.மு.க-தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே?”
“அது அவர்களின் உள்கட்சி விவகாரம். ஆனால், மக்கள் நல கூட்டியக்கத்தைக் காரணம் காட்டி வெளியேறுவது ஒரு நொண்டிச்சாக்கு. அதை நான் ஏற்கவில்லை. கட்சியின் கூட்டணியை முடிவுசெய்ய வேண்டியது அந்தக் கட்சியின் தலைவர்தான். அதற்கு உடன்படாதவர்கள் வெளியேறுகிறார்கள், அவ்வளவே. ஆனால், அ.தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்றால், தி.மு.க-தான் முன்நின்று கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் ம.தி.மு.க-வை அவர்கள் இப்படி சோதிப்பது எந்த விதத்தில் அவர்களுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை.”
“மக்கள் நல கூட்டியக்கத்தில் மேலும் கட்சிகள் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா?”
“இந்த இயக்கத்தை இன்னமும் பெரிதுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் இல்லை. வகுப்புவாத சக்திகள், சாதிய மற்றும் ஊழல் கட்சிகளை நாங்கள் இணைத்துக்கொள்வது இல்லை என்கிற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். அப்படிப் பார்த்தால் பி.ஜே.பி., பா.ம.க., தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகியோர் எங்களுடன் இணையவே முடியாதே. அ.தி.மு.க-வும் சாதிய அரசியலை மறைமுகமாக ஊக்கப்படுத்திவருகிறது. அதில், சர்வதிகாரப்போக்கும் அதிகம்.”
“தொடர்ந்து தி.மு.க-வோடு இணக்கமாக இருந்த உங்களுக்கு, தற்போது அவர்களுடன் என்ன மனக்கசப்பு?”
“தேர்தல் கூட்டணி என்பது அந்தத் தேர்தலுக்கு மட்டுமே. ஒருமுறை கூட்டணி வைத்தால் அது ஆயுள் முழுவதும் தொடர வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. அவர்களுக்கு நாங்கள் தேவைப்பட்டால் கூட்டணியில் தொடரச்செய்வார்கள். தேர்தல் அல்லாத நேரங்களில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான பணிகளை மேற்கொள்கிறோம். இப்போது, வைகோ போன்றவர்களோடு மக்கள் பணி மேற்கொள்கிறோமே தவிர, தி.மு.க-வோடு எந்த மனக்கசப்பும் இல்லை. மாநிலம் முழுவதும் தொண்டர்களைச் சந்தித்த பின்புதான் கூட்டணி முடிவுகள் எடுப்போம்.”
 – மா.அ.மோகன் பிரபாகரன்
படம்: கே.கார்த்திகேயன்
நன்றி : ஜீனியர் விகடன், 07 அக்டோபர் 2015

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here