அமைப்பாய்த் திரள்வோம் – 46

0
807

அமைப்பாக்க நடவடிக்கையின்போது, உடன் பணியாற்றுவோர் தங்களுக் கிடையில் நல்லிணக்கமான நட்புறவை, தோழமையான அணுகுமுறையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

நட்பும் தோழமையும் பாதிக்கும் வகையில் உணர்ச்சிவயப்படுதல் கூடாது. அமைப்புக்காக, மக்களுக்காக, கொள்கைக்காகத் தங்களுக்கிடையில் தோழமையைப் போற்றுவது தவிர்க்க இயலாத தேவையாகும். உணர்ச்சிவயப்படுதல் தோழமைக்குப் பகையாகும். உணர்ச்சிவயப்படுவோரின் சொல்லும் செயலும் தோழமை உறவுகளைப் பகைக்கும்! சிதைக்கும்!

மனிதன் உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் இருத்தல் இயலாது. எனினும், உணர்ச்சிகளுக்குப் பலியாகாமல் இருத்தல் வேண்டும். தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பாதிப்பை உருவாக்கும் வகையிலான உணர்ச்சிகளைப் பக்குவமாகக் கையாளும் ஆற்றலைப் பெறுதல் வேண்டும். தூண்டப்படும் உணர்ச்சிகளைத் தவிர்க்கவோ தடுக்கவோ இயலாத நிலையில் அவற்றால் பாதிப்பு நேராவண்ணம், அவற்றை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். குறிப்பாக, அய்யம், அச்சம், ஆத்திரம் ஆகியவை அனைத்து வகையான தீய உணர்ச்சிகளுக்கும் அடிப்படைகளாக அமைகின்றன. இவை யாவற்றுக்கும் அடிப்படையாக, ‘தன்னை முன்னிறுத்தும்’ தன்னலப் போக்கு அமைகிறது.

தன்னை முன்னிறுத்தும் ஆசை என்பதுவும் ஓர் உணர்ச்சியே ஆகும். ஆசை என்னும் இவ்வுணர்ச்சிதான் மனிதனை இயக்கும் உந்து விசையாகும். ஆசை இன்றி அசைவு இல்லை. எனவே, ஆசை மனிதனின் இன்றியமையாத ஒரு தேவையாகும். ஆனால், அது தன்னை மட்டுமே முன்னிறுத்துவதாக அமைதல் கூடாது. தன்னுடைய நலன்களை மட்டுமே முன்னிறுத்தும் போக்கு, உடன் வசிப்போர் மற்றும் களப்பணியாற்றுவோருக்கிடையில் நிலவும் இணக்கத்தைக் கெடுக்கும்! இடைவெளியைப் பெருக்கும்! ‘ஆசை’யானது வளர வளர, அது ‘பற்று’ என்னும் பேராசையாக வலுப்பெறும். ஆசையை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்வது தான் ‘பற்று’ ஆகும். தன்னை முன்னிறுத்தும் ‘ஆசையானது’, ‘கெட்டிப்படக் கெட்டிப்பட’ அது தன்னை மையப்படுத்தும் ‘பற்றாக’ பரிணாமம் பெறும். தன்னலன் சார்ந்த பற்று, தனக்கு உடன்படுவோர் மீது ‘விருப்பையும்’ தன்னுடன் முரண்படுவோர் மீது ‘வெறுப்பையும்’ உருவாக்கும்! இத்தகைய விருப்பு-வெறுப்பு குழுவாதப் போக்கு களுக்கு இடம் கொடுக்கும்! அமைப்பாக்க நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும்!

தன்னலன் சார்ந்த ஆசை வளர வளர, அது தன்னலன் சார்ந்த பற்றாக வளர்ந்தோங்கும். தன்னலன் சார்ந்த பற்று மேலோங்க மேலாங்க, அது தன்னலன் சார்ந்த வெறியாக வலுப்பெறும். தன்னலன் சார்ந்த வெறி வலுப்பெற வலுப்பெற, அது தன்னலன் சார்ந்த வன்முறையாக வெடிக்கும்! இத்தகைய தன்னலன் சார்ந்த ஆசை, பற்று, வெறி மற்றும் வன்முறை போன்றவை யாவும் நம்பிக்கைக்குரிய நட்புக்கோ, தோழமைக்கோ ஒருபோதும் இடமளிக்காது. களத்தில் உடன் பணியாற்றுவோருக்கிடையில் நல்ல நட்புக்கோ, தோழமைக்கோ இடமில்லை யெனில் அமைப்பாக்க நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமையாது. ஆசை கூடாது என்பது மானுட இயல்புக்கு மாறானது.

ஆசை வேண்டும்! ஆனால், அது பிறர் நலன்களுக்குப் பாதிப்பு நேருவதாகவோ, தீங்கு விளைவிப்ப தாகவோ அமையும்போது எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும்! உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளின்றி மனிதனால் வாழமுடியாது. ஆசைப்படாமல் இத்தகைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய இயலாது. பசிக்கு உணவு, தன்மானத்திற்கு உடை, பாதுகாப்புக்கு உறையுள் என அடிப்படைத் தேவைகளுக்கு ஆசைப்படுவது தன்னலன் சார்ந்தது என்றாலும் ஆசைப்படாமல் அவற்றைத் தவிர்த்துவிட முடியாது. தன்னலன் சார்ந்ததாகவோ, பொதுநலன் சார்ந்ததாகவோ இருப்பினும் ‘ஆசைப்படுவது’ இன்றியமையாத தேவையே ஆகும். ஆனால், தன்னலன் சார்ந்த ஆசையானது, ‘பற்றாகத்’ தொற்றும்போதுதான் அய்யம், அச்சம், ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும் நிலை உருவாகிறது.

அதேவேளையில் ஆசைகள், தன்னலனிலிருந்து பொதுநலனாக விரிவடையும்போது தோழமை உறவுகளைப் பாதிக்கும் வகையிலான உணர்ச்சிகள் மேலோங்காது. அதாவது, பொது நலன்களை அல்லது மக்கள் நலன்களை முன்னிறுத்தும்போது, உடன் பணியாற்றுவோருக்கிடையில் போட்டி, பொறாமை உணர்ச்சிகள் தலைதூக்குவதற்கு வாய்ப்பில்லை. போட்டி வேகத்தை மூட்டும்! பொறாமை பதற்றத்தைக் கூட்டும்!

போட்டியும் பொறாமையும் தோழமையைப் பகைமையாய்க் காட்டும். தோழமையை வீழ்த்தி வெற்றிகொள்ள வேண்டுமென வெறிகொள்ள வைக்கும்! இலக்கை எட்டும் பாதைவிட்டு இடறவைக்கும்! பகையை வென்று நிலைநாட்ட வேண்டிய வல்லமையைத் தோழமையிடம் வெளிப் படுத்தச் செய்யும்! விட்டுக்கொடுக்கும் பேராண்மையை ஏமாளித்தனம் என நம்பவைக்கும்! எதிரியே தன்னை வென்றாலும் தோழன் தன்னை வென்று விடக்கூடாது அல்லது தன்னைவிட ஒரு அடிமுன்னே சென்றுவிடக்கூடாது எனப் பதைக்க வைக்கும்! தன்னை முன்னிறுத்துவதால் தன்னைச் சுற்றி யுள்ளோரின் எதிர்வினைகளால் இத்தகைய பக்கவிளைவுகள் உருவாகும்! அதாவது, தோழமை உறவுகளைப் பாதிக்கச் செய்யும் போட்டி – பொறாமை உணர்ச்சிகளும் அவற்றிலிலிருந்து அய்யம், அச்சம், ஆத்திரம், வன்முறை போன்ற பெருந்தீங்குப் போக்குகளும் விளையும்! பொது நலனையோ அல்லது அமைப்பு நலனையோ முன்னிறுத்துகிறபோது போட்டி – பொறாமை போன்ற எதிர்வினைகள், ஒரே அமைப்புக்குள், ஒரே களத்திற்குள் ஒருபோதும் எழுவதில்லை; எழவும் வாய்ப்பில்லை!

தனக்கில்லாமல் பிறர்க்கில்லை! தானில்லாமல் எதுவுமில்லை! தனது சொல்லே ஆணை! தனது முடிவே தீர்ப்பு! தனது நலனே கொள்கை! – என ஒவ்வொருவரும் தன்னை முன்னிறுத்தினால், ஒருவர் இன்னொருவருக்கு ஒத்துழைக்கும் பொது ஒழுங்கு உருவாகாது. தனக்கு வழிகாட்ட, தனக்குப் புத்திசொல்ல, தனக்கு ஆணையிட, தனக்குமேல் யாருமில்லை; தேவையு மில்லை எனத் தான்தோன்றியாய், தற்குறியாய்ச் செயல்படும் போக்குகளே தலைதூக்கும்! தனக்கு இணையாகவும், துணையாகவும் தன்னோடு களத்தில் பணியாற்றுவோரின் உணர்வுகளை மதிக்கவோ, கருத்துக்களைக் கேட்கவோ ‘தான்’ என்னும் தற்குறிப்போக்கு அனுமதிப்பதில்லை. தான் மட்டுமே உழைப்பதாகவும் தன்னால் மட்டுமே நடப்பதாகவும் தன்னை முன்னிறுத்துவோரின் தற்பெருமை தானே முந்துறும்! தன்னை ஏற்போரைத் தூக்கிப் பிடிப்பதும், தன்னை மீறுவோரைத் தூக்கி எறிவதும் தன்னை முன்னிறுத்தும் தான்தோன்றித் தனத்தின் வெளிப்பாடுகளாக அரங்கேறும்!

தன்னை முன்னிறுத்தும் இத்தகைய போக்குகளால், உடன் பணியாற்று வோர் தங்களுக்கிடையில் யாரும் யாரையும் மதிப்பதில்லை; பின்பற்றுவ தில்லை! யாரும் யாருக்கும் கட்டுப்படுவதில்லை; ஒத்துழைப்பதில்லை! அமைப்பாக்கச் செயற்களத்தில் இவைபோன்ற நடவடிக்கைகள் எத்தகைய ஒழுங்குமுறைக்கும் இடம் கொடுப்பதில்லை.
பொதுவாக, மனிதன் இன்னொரு மனிதனைத் தனக்கு மேலானவன் என்று ஏற்கவோ, கீழ்ப்படியவோ, கட்டுப்படவோ உடன்படுவதில்லை. தவிர்க்க முடியாத சூழல்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே ஒருவனை ஒருவன் மதிக்கவும், ஒருவனுக்கு ஒருவன் கட்டுப் படவும் ஒப்புக்கொள்கிறான். வயதில் மூத்தோரை, அறிவில் சிறந்தோரை, ஆற்றலில் வல்லோரை மதிக்கவும் அவர்தம் வழிகாட்டுதலை ஏற்கவும் கற்றுத் தருவதையே கடமையெனக் கொண்டு இயங்கும் அமைப்புகளே காலப்போக்கில் மடங்களாகவும் மதங்களாகவும் பரிணாமம் பெற்று வலுப்பெற்றன. குடும்பம், சாதி, மதம் போன்ற அமைப்புகள் யாவும் இத்தகைய ஒழுங்குமுறைகளைக் கற்பிக்கும் நிறுவனங்கள் எனலாம்.

பெற்றோருக்குப் பிள்ளைகள் கட்டுப்படவும், குருவுக்குச் சீடர்கள் கட்டுப்படவும் காலம் காலமாக கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது விதிகளை வகுத்தும், திணித்தும், கண்டித்தும், தண்டித்தும் ஏதோ ஒரு வகையிலான அச்சுறுத்தலின் அல்லது வற்புறுத்தலின் வழியாகவே அவரவருக்கு உரிய ஒழுங்குமுறைகள் கற்பிக்கப்படுகின்றன. தலைமுறை தலைமுறையாய்க் கற்பிக்கப்படும் இத்தகைய குடும்ப ஒழுங்கு, சாதி ஒழுங்கு, மத ஒழுங்கு போன்றவையே கலாச்சாரமாகவோ அல்லது பண்பாடாகவோ மாறியிருக்கின்றன. இவை யாவும், மனிதனை மனிதன் மதிக்கவும் மனிதனுக்கு மனிதன் கட்டுப் படவும் மானுட வாழ்வை ஒழுங்குசெய்து நெறிப்படுத்தவும் யுகம் யுகமாய் மனிதன் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாய் உருவானவையே ஆகும். மனிதனை ஒழுங்குபடுத்தும் அல்லது நெறிப்படுத்தும் கருத்தியலின் அடிப்படையில்தான் பண்பாட்டுத்தளத்தில் ‘மதம்’ என்னும் நிறுவனம் ஆளுமை செய்கிறது! அரசியல் தளத்தில் ‘அரசு’ என்னும் நிறுவனம் ஆட்சி செய்கிறது. மதமாயினும் அரசாயினும் மனிதனுக்கு மனிதன் கட்டுப்பட்டு ஒரு ஒழுங்குமுறைக்குள் இயங்குதல் வேண்டும் என்பதுதான் அடிப்படையாகும்.

வழக்கமாக, வலுத்தவனின் விருப்பங்கள்தாம் சட்டங்களாகவும் நெறிமுறைகளாகவும் வகுக்கப்படுகின்றன. சிந்தனையிலும் செயலிலும் வல்லவன் எவனோ அவனே வலுத்தவனாகிறான். பண்பாட்டுத் தளத்தில் அவன் ‘குரு’வாகிறான். அரசியல் தளத்தில் அவன் ‘தலைவன்’ ஆகிறான். சமூகத் தளத்தில் அல்லது குடும்பத்தில் அவன் ‘தந்தை’ ஆகிறான்.

குடும்பத்தில் தந்தை, மதத்தில் குரு, அரசியலில் தலைவன் என ஒவ்வொரு தளத்திலும் ஆளுமை செலுத்துவோர் அவரவருக்குரிய மானுட ஒழுங்கைப் போதிக்கவும் நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். உடன்படுகிறவர்கள் தந்தைக்குப் பிள்ளைகளாகவும், குருவுக்குச் சீடர்களாகவும், தலைவர்களுக்குத் தொண்டர்களாகவும் கட்டுப்பட்டு உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுகின்றனர். உடன்படாதவர்கள் மறுத்தும் எதிர்த்தும் ஒழுங்குகளை மீறுகின்றனர். பொதுவாக வலுத்தவர்கள் வகுக்கும் ஒழுங்குகள் எளியவர்களுக்கு எதிரானவையாக இருக்கும். அத்தகைய ஒழுங்குமுறைகள் ஒடுக்குமுறைகளாகவும் இருக்கும். எனவே, அவற்றை ஏற்க மறுப்பதும் எதிர்ப்பதும் இயல்பானவையே ஆகும்.

ஒழுங்குமுறைகளைப் போதிப்பவர்கள், நடைமுறைப்படுத்துபவர்கள் தாம் சார்ந்த அமைப்பையோ, கோட்பாட்டையோ முன்னிறுத்தாமல் தம்மை முன்னிறுத்துகிறபோது அவர்களின் அணுகுமுறையானது ஆதிக்கமாக வெளிப்படுகிறது. அத்தகைய ஆதிக்கப்போக்கை மிகவும் எளிய மனிதனும் ஏற்றுக்கொள்வதில்லை. அதாவது, தன் மீது இன்னொருவன் ஆதிக்கம் செய்வதை அனுமதிக்கமுடியாது என அடங்க மறுப்பது அல்லது ஆதிக்கம் செய்வதற்குரிய ஒழுங்குமுறை என்னும் ஒடுக்குமுறையை ஏற்கமுடியாது என அத்துமீறுவது ஒருவகை! தனக்குப் புத்திசொல்ல, தனக்கு வழிகாட்ட, தன்னைக் கட்டுப்படுத்த, தன்னை நெறிப்படுத்த தனக்குமேல் எவனுமில்லை என்று எந்த ஒழுங்குமுறைக்கும் ஒத்துழைக்க மறுப்பது இன்னொரு வகை. இவ்விருவகையிலும் கட்டுப் படாதவர்களை வென்றெடுக்கும் வகையில், நெறிப்படுத்தும் வகையில் கையாளப்படும் மிகவுயர்ந்த உத்தியே ‘இறைவனை’ முன்னிறுத்துவ தாகும்!
மனிதனுக்கு மனிதன் இணையாகிறான். இணையாகச் சிந்திக்கவும் இணையாகச் செயல்படவும்கூடிய இணையான ஆற்றல் பெற்றவனாய் இருக்கிறான். எனவே, ஒருவன் இன்னொருவனுக்குப் புத்தி சொல்வதையோ, வழிகாட்டுவதையோ, ஆணையிடுவதையோ, கட்டுப்படுத்துவதையோ விரும்புவதில்லை. எனவேதான், மனிதனோடு இணைவைக்கமுடியாத, இணைவைக்கக்கூடாத ‘இறைவன்’ என்னும் கோட்பாட்டை உருவாக்குகிறான். தனக்கு இணையாகப் போட்டிக்கு வராதவன்; பொறாமைப்படாதவன், இறைவன் என்பதால், அவன் தனக்கு மேலானவன் என்று ஒப்புக்கொள்கிறான். தன்னால் புரிந்துகொள்ள முடியாத, வெல்ல முடியாத யாவற்றுக்கும் அடிப்படை அவனே, படைப்பவன் அவனே, பாதுகாப்பவன் அவனே, அழிப்பவன் அவனே என்று நம்புகிறான்.

அதாவது, தனக்கு இணைவைக்கமுடியாதவன் தனக்கு மேலானவன் இறைவன் மட்டுமே என்ற கோட்பாட்டை நம்புகிறான். எனவேதான் அத்தகைய இறைவனை முன்னிறுத்தும் உத்தியை மதங்கள் முன்னிறுத்துகின்றன. மதத்தை உருவாக்கிய, மதத்தை வழிநடத்துகிற, மதக் கோட்பாடுகளைப் போதிக்கிற ஒரு மதகுரு, சராசரி மனிதனிலிருந்து மேம்பட்டவராக இருந்தாலும், இறைவனின் தூதராகவோ அல்லது இறைவனின் மானுட அவதாரமாகவோ கருதப் பட்டாலும் அவரும் தன்னை முன்னிறுத்தாமல் இறைவனை முன்னிறுத்து வதைக் காணலாம். ‘தான் சொல்லவில்லை; இறைவன் சொன்னான்’ என்பதே ஒவ்வொரு மதத்திலும் வேதங்களாகப் போற்றப்படுகின்றன. சராசரி மனிதரிலிருந்து மேம்பட்ட, அறிவிலும் ஆற்றலிலும் வல்லமை பெற்ற மகான்களாய், மத குருக்களாய், இறைத் தூதர்களாய் விளங்கும் மாமனிதர்களே தன்னை முன்னிறுத்துவதைத் தவிர்த்து இறைவனை முன்னிறுத்துகின்றனர். இறைவனின் வடிவமாகவோ, இறைவனின் தூதராகவோ மதிக்கப்படும் ஒருவரே, ‘இதைத் தான் சொல்லவில்லை; தன் மூலம் இறைவனே சொல்கிறான்’ என்று கூறுவதற்கு, தன்னை முன்னிறுத்தக் கூடாது என்பதே அடிப்படையாகும். தன்னை முன்னிறுத்தாமல் இறைவனை முன்னிறுத்துவது மானுடவாழ்வை ஒழுங்குபடுத்தும், நெறிப்படுத்தும் ஒரு கோட்பாட்டை முன்னிறுத்துவதற்கே ஆகும்.

மதத்தின் கோட்பாடுகளை ‘இறைவன் அருளிய வேதம்’ என்று கூறுவதில் இறைவனை முன்னிறுத்துவதைப் போலவே, கோட்பாடுகளை மீறுவோரைத் தண்டிக்கும்போதும் ‘இறைவனே தண்டிக்கிறான்’ என்று இறைவனை முன்னிறுத்தும் போக்கைக் காணலாம். அதாவது, ‘தனது கோட்பாடு, தனது சட்டம்’ என்று தன்னை முன்னிறுத்தாமல், ‘இறைவனின் வேதம், இறைவனின் தண்டனை’ என்று இறைவனை முன்னிறுத்தும் உத்திகளை இறைத்தூதர்களாய் மதிக்கப்படும் மகான்களும் மத குருமார்களுமே கையாளுகின்றனர். மாபெரும் நிறுவனங்களாய் வலிமை பெற்றுள்ள மதங்களை நிறுவிய மகான்களும் மத குருமார்களுமே இத்தகைய உத்திகளைக் கையாளுவதற்கு முதன்மையான நோக்கம், இறைவனின் பெயரால் தமது கோட்பாடுகளை, நெறிமுறைகளை யாவராலும் ஏற்கச் செய்வதே ஆகும்.

இறைவன் உண்டா இல்லையா? இறைவன் வேதத்தைச் சொன்னானா இல்லையா? இறைவன் தண்டித்தானா இல்லையா? போன்ற கேள்விகளுக்கு விடைகாணுவதல்ல இதன் நோக்கம். இறைத்தூதரானாலும் மதகுருவானாலும் ‘தானே கடவுள்’ என்றும் ‘தனது வாக்குகளே வேதம்’ என்றும் தன்னையே அவர்களால் முன்னிறுத்த முடியும். ஆனால், அவ்வாறின்றி இறைவனின் ஆணைப்படியே தான் இயங்குவதாகவும் தன்னை இறைவனின் தொண்டனாகவும் வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது. அறிவிலும் ஆற்றலிலும் வல்லமை வாய்ந்த ஒருவரே, தன்னை ஒரு தொண்டனாகக் கருதுகிறார்; தன்னைவிட மேலானவன் ஒருவன் இருக்கிறான் என நம்புகிறார்; தான் நம்புகிற வேதம் சொல்லும் நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்; தன்னை நம்புவோருக்கு நல்வழி காட்டுகிறார் என்பது ‘கீழ்ப்படிதல், பின்பற்றுதல், வழிகாட்டுதல்’ என்னும் அவரது தலைமைப் பண்புகளை வெளிப்படுத்துகிறது. இவை, அமைப்பாக்க நடவடிக்கையின்போது களப்பணியாற்றுவோர் தங்களுக்கிடையில் கடைப் பிடிக்கவேண்டிய நடைமுறைகளாகும். இறைத்தூதரால் அறியப்படுவோரும் மதகுருவாய் செயல்படுவோரும்கூட தங்களை முன்னிறுத்தாமல், தலைக் கனமில்லாமல், தாம் ஏற்றுக்கொண்ட மதத்தின் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படிதல், பின்பற்றுதல், வழிகாட்டுதல் என்னும் கடமைகளை ஆற்றுகின்றனர் என்பதே இதில் அறிய வேண்டியதாகும்.

அதாவது, இறைவன் மிகப் பெரியவன் என்று தனது மதம் கூறுவதை ஏற்று இறைவனுக்குக் கீழ்ப்படிவதையும், தனது மதத்தின் வேதம் கூறும் நெறிமுறைகளைப் பின்பற்றுவதையும், தானே ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து பிறருக்கு வழிகாட்டுவதையும் இறைத்தூதர்களிடமும் மத குருமார்களிடமும் காணமுடிகிறது. இவர்களின் இத்தகைய அணுகுமுறை களே மதம் என்னும் அமைப்பை வலிமைமிக்க நிறுவனமாக்கியுள்ளன.
அமைப்பாக்க நடவடிக்கையில், தனக்கு மேலான பொறுப்பிலுள்ளவர் களையும் தனக்கு மேலான ஆற்றல் உள்ளவர்களையும் தனக்கும் மேலான பங்களிப்புள்ளவர்களையும் தன்னைவிட மேலானவர்கள் அல்லது வலிமை மிக்கவர்கள் அல்லது மதிப்புக்குரியவர்கள் என்று ஒப்புக்கொள்வதுதான் கீழ்ப்படிதல் என்னும் நடைமுறையைக் குறிக்கும். அமைப்பாக்க நடவடிக்கையில் ‘கீழ்ப்படிதல்’ என்பது அடிமையாதல் என்றாகாது. அமைப்பு நலன் கருதி நல்லிணக்கத்திற்காக ஒத்துழைப்பதாகும். பகைமைக்குக் கீழ்ப்படிதல் அடிமையாதலாகும். தோழமைக்குக் கீழப்படிதல் வலிமையாதலாகும்.

உடன்பணியாற்றுவோருக்கிடையில் ஒருவருக்கொருவர் மதிப்பளித்தலும் ஒத்துழைத்தலும் மிகவும் இன்றியமையாதவையாகும். அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், மேலான அல்லது கூடுதலான அதிகார வலிமை யுள்ளவர்களுக்கு உரிய மதிப்பளிப்பதும் உடன் ஒத்துழைப்பதும்தான் அவர்களுக்குக் கீழ்ப்படிதல் என்பதாக அமையும். அமைப்பை அல்லது அமைப்பின் சட்டங்களை, உரிமைகளை முன்னிறுத்துவதன் மூலமே, தன்னைவிட வலிமையுள்ளவர்கள் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளவும் அவர்களுக்கு உரிய மதிப்பை அளிக்கவும் ஒத்துழைக்கவும் இயலும்!
அமைப்பின் சட்டங்களையும் விதிகளையும் முன்னிறுத்துவது என்பது, அவற்றை மதிப்பதையும் அவற்றுக்குக் கட்டுப்படுவது அல்லது பின்பற்றுவதையும் குறிக்கும். அதாவது, அமைப்பைக் கட்டமைக்கவும், பாதுகாக்கவும், வழிநடத்தவும் தேவையான சட்டங்களும் விதிகளும் வரையறுக்கப்படும். அவ்வாறு வரையறுக்கப்பட்ட சட்டங்களையும் விதிகளையும் களப்பணியாற்றும் ஒவ்வொருவரும் மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும். அவ்வாறு சட்டங்களை மதிக்காதவர்களால் அவற்றைப் பின்பற்ற இயலாது. அமைப்பை முன்னிறுத்தாதவர்களுக்கு அவற்றின் சட்டங்களை மதிக்கத் தெரியாது. தன்னை முன்னிறுத்துவோரால் தனது அமைப்பை முன்னிறுத்த முடியாது.

அமைப்பில், தனக்கு மேலானவர்களை மதிக்கவேண்டும் என்பதால் தனக்கு இணையானவர்களையும் தனக்கு அடுத்தபடிநிலையில் உள்ளவர் களையும் மதிக்கக்கூடாது என்று பொருளாகாது. தனக்கு மேல், கீழ் என எந்நிலையிலிருந்தாலும் அனைவரையும் மதித்தல் வேண்டும்; மதித்தலோடு ஒத்துழைத்தலும் வேண்டும். இதற்கு அமைப்பையும் அமைப்பின் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான கட்டமைப்பு முறையையும், அவற்றுக்கான சட்டங்கள் மற்றும் விதிகளையும் மதித்தல் வேண்டும். அமைப்பையும் சட்டங்களையும் மதிக்கத் தெரியாதவர்கள் அமைப்பை முன்னிறுத்த இயலாது. அத்தகையோரால் அமைப்புக்கு, அமைப்பின் சட்டங்களுக்குக் கட்டுப்படவோ அல்லது கீழ்ப்படியவோ, அவற்றைப் பின்பற்றவோ இயலாது. அவ்வாறு கீழ்ப்படியவோ, பின்பற்றவோ இயலாதவர்களால் ஒருக்காலும் பிறருக்கு வழிகாட்டவும் முடியாது.
அமைப்பாக்க நடவடிக்கையில், ஒருவர் இன்னொருவருக்கு வழிகாட்ட வேண்டியது தவிர்க்க இயலாததாகும். அமைப்பு நலன், மக்கள் நலன், கொள்கை நலன் போன்ற பொது நலன்களைக் கருத்தில் கொண்டு, ‘அமைப்பை’ மதிக்கவும் அமைப்பின் வரையறுக்கப்பட்ட ‘சட்டங்கள்’ மற்றும் எழுதப்படாத மரபுகள்’ ஆகியவற்றை மதிக்கவும் பின்பற்றவும் ஒருவருக்கொருவர் ‘வழிகாட்டுதல்’ வேண்டும். வழிகாட்டுதல் என்பது ஒருவர் பிறருக்கு முன்மாதிரியாய் வாழ்ந்துகாட்டுதலைக் குறிக்கும்.

தன்னை முன்னிறுத்தாமல், அமைப்பையும் அமைப்பின் சட்டங்களையும் மதித்து, அவற்றுக்குக் கீழ்ப்படியவும் அவற்றை பின்பற்றவும் செய்கிற ஒருவரால்தான் மற்றவர்களையும் அரவணைத்து அதேவகையில் வழிகாட்டவும் இயலும். தனக்கு இணையாகவோ துணையாகவோ, தனக்கு அடுத்தபடிநிலையிலோ உடன் பணியாற்றுவோருக்கும் அடுத்த தலைமுறை யினருக்கும் வழிகாட்டக்கூடிய ஒருவர், நடைமுறையில் அவ்வாறு வாழ்ந்து காட்ட வேண்டும். அப்போதுதான் அவரைப் பிறர் பின்பற்ற வாய்ப்பிருக்கும். பின்பற்றுதல் இல்லாத ஒருவரை யாராலும் பின்பற்ற இயலாது! அவரைப் போலவே ஒழுங்கு மீறுவோரால்தான் இயலும்! தன்னை முன்னிறுத்தும் ஒருவரைத் தன்னை முன்னிறுத்துவோரால்தான் பின்பற்ற இயலும்! அமைப்பை, சட்டங்களை, கொள்கைகளை, மக்களை முன்னிறுத்தும் ஒருவரை அதே பண்புள்ளோரால்தான் பின்பற்ற இயலும்! அல்லது தன்னை முன்னிறுத்து வோரைப் பின்பற்றும் ஒருவர், தன்னையே முன்னிறுத்துவார். அமைப்பை முன்னிறுத்துவோரைப் பின்பற்றும் ஒருவர் அமைப்பையே முன்னிறுத்துவார்.

அமைப்பின் நடவடிக்கையில், களப்பணியாற்றும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் அமைப்பை வழிநடத்தக்கூடியவர்களே ஆவர். அவ்வாறு வழிநடத்தக்கூடியவர்கள்தான் பிறருக்கு வழிகாட்டக் கூடியவர்களும் ஆவர். எனவே, களப்பணியாளர்கள் யாவரும் கீழ்ப்படிதல், பின்பற்றுதல், வழிகாட்டுதல் என்னும் நடைமுறைகளை அல்லது கடமைகளைச் செயற் படுத்துதல் மிகவும் இன்றியமையாத தேவையாகும். அவ்வாறின்றி, ஒவ்வொருவரும் தன்னை முன்னிறுத்தி, அமைப்பைப் பின்னுக்குத் தள்ளினால், அல்லது அமைப்பைப் பொருட்படுத்தத் தவறினால், ஆளாளுக்கு நாட்டமை செய்யும் அவல நிலை மேலோங்கும்! நட்பு வளராது! தோழமை மலராது! ஒழுங்கு விளையாது! அமைப்பாதல் நிகழாது! எனவே, அமைப்பாதலை வெற்றிகரமாக நிகழ்த்திட அமைப்பையும் அமைப்புக்கான கொள்கை மற்றும் சட்டத்தையும் முன்னிறுத்துவதே முதன்மையான கடமையாகும்!

அமைப்பை முறைசெய்யும் விதிகள் மதிப்போம்! – வீணாய்
ஆளுக்கொரு வழிசெல்லும் ஆணவம் தவிர்ப்போம்!

நவம்பர் – 2015

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here