சொலல்வல்லன்..சோர்விலன்… அஞ்சான்

0
1275

சொற்களை விதைப்பவன் வந்தான்

விதைகள் ஊன்றப்படும் நிலங்கள்

கண்களை விரித்து கைகளைத் தட்டின

ஒலிவாங்கிகள் அவன் சொற்களின்

தீவிரத்தினை அறிந்திருந்தன

முறுக்கிய அவன் மீசையினைத்

தொட்டுவந்த சொற்கள் நெருப்புத்துண்டங்கள்

யாராலும் தடுத்து நிறுத்த முடியாதன

நியாயமானவை அவை அவனைப்போலவே

அவன் சொற்களின் மெய்ம்மையில்

தோலுரிந்திருந்தன பொய்மையின் முகங்கள்

கறுத்த அவனின் சொற்கள் காந்தச்சுவையுடையன

பாசாங்கான எதையும் அவை பேசுவதில்லை

முள்முனையென அவன்சொல்

குத்தும் தைக்கும் காலம்காட்டும்

 

புகழுரைகளும் பசப்புகளும்

நிறைய வீணும் நிறைந்திருந்த சொற்குப்பைகளை

அன்று செம்மொழி மாநாட்டில்

கற்கால நெருப்பைத் தன் சொற்களாக்கிச் சுட்டான்

அன்றுதான் நிறைய காதுகள் உண்மையைக் கேட்டன

 

தமிழன் நாடு இலங்கை என்றான்

அவன் ராவணச் சொற்கள் ஆண்டன

இந்தியநாட்டின் மொழி தமிழ் என்றான்

புரட்சியாளர் அம்பேத்கர் ஆய்வு

அவன் சொற்களாகி பொய்ம்மொழிப் புலவர்களின்

சாதிமொழியை அறுவை சிகிச்சை செய்தன

காந்திக்கு தமிழ்சொன்ன தாத்தாவின் சொற்களில்

தமிழெதிரிகளை அவன் தாவிப்பிடித்தான்

சொல்வேலி துறைக்குள் இருந்தவர்களை

அன்று அவன் முள்வேலித்துறைக்கு அழைத்தான்

வெம்மையான கண்ணீர்த்துளிகளாயின அவன் சொற்கள்

மொழிமாநாட்டில் அதைப் பேசும்மக்களின்

துயர் துடைக்க ஒற்றைக் காகமெனக் கரைந்தான்

கோடித்தமிழர் நெஞ்சங்களில் குடிபுகுந்தன அவன் சொற்கள்

 

இரவலற்ற அவன் சொற்கள் ரத்தச்சுரப்பு

ஆர்ப்பரிக்கும் கடலலை பிரமிப்பு

செம்மொழியின் செம்மைக்காத்த மாநாடு அவன்சொற்கள்

யாரோடும் சமரசமாகாத

போராடும் அவன் விழிகள் சொற்கள்

சொற்களை விதைத்தவன் சொற்காரன் மட்டுமல்ல

அச்சமில்லா செயற்காரன்

 

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்

திருமா வளவனை இகல்வெல்லல்

யார்க்கும் அரிது.

 

யாழன் ஆதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here