திருமாவளவன் குறித்து கூறிய கருத்துகளுக்காக தமிழிசை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா

0
648

திருமாவளவன் குறித்து கூறிய கருத்துகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திருமாவளவன் மீதும் அவரது கட்சியின் மீது அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய மக்களின் கடுங்கோபத்திற்கு உள்ளாகியுள்ள பாஜக தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள இயலாமல், அந்தக் கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் அளிக்கத் திராணியில்லாமல் தனிமனிதர்களைத் தாக்குவதும், வருமான வரி, அமலாக்கத்துறை மூலம் அவர்களை மிரட்டுவதும் வாடிக்கையாகியுள்ளது.

இதற்கு ஒருபடி மேலே சென்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌதர்ராஜன் சகோதரர் திருமாவளவனின் ஆணித்தரமான கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் அவர் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும் அபாண்டமான அவதூறு பரப்பியுள்ளார்.

பாஜகவை பொறுத்தவரை கட்டப்பஞ்சாயத்து செய்வது என்பது டெல்லியில் உள்ள மோடி, அமித்ஷா முதல் உள்ளூர் தலைவர்கள் வரை செய்து வரும் செயல். தமது கட்சி தலைவர் முதல் தொண்டர்கள் வரை செய்யும் கட்டப்பஞ்சாயத்தை திருமாளவன்தான் செய்துவருகின்றார் என்று தமிழக பாஜக தலைவர் பேசியிருப்பது வேடிக்கையானது. சமீபத்தில் ஒரு நகைச்சுவை நடிகரிடம் கட்டப்பஞ்சாயத்து நடத்தி அதில் பாஜக நிர்வாகி மூக்குடைப்பட்டார் என்பதே இதற்குச் சரியான எடுத்துக்காட்டு.

அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ள கட்சிகளை சி.பி.ஐ., வருமானவரி, அமலாக்கத் துறை போன்றவற்றைக் காட்டி மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து தமக்குச் சாதகமாக பணிய வைத்து தமிழகத்தில் கொள்ளைப்புறமாக ஆட்சி செய்வது பாஜகவா? அல்லது விசிகவா?

ஆட்சியில் நடக்கும் அவலங்களை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களையும் அதன் நிர்வாகிகளையும் மிரட்டுவது பாஜகவா? அல்லது விசிகவா?

திரைப்படத்தில் ஆட்சியை விமர்சித்த காட்சியை மையமாகக் கொண்டு மதத்தின் பெயரால் நடிகர்களுக்கு மதச்சாயம் பூசுவது பாஜகவா? அல்லது விசிகவா?

குஜராத்தில் பட்டேல் சமூகத் தலைவரை வளைத்துப் போட ரூ. 1 கோடி வரை பேரம் பேசி அதற்கு முன்பணமாக ரூ.10 லட்சத்தை கொடுத்தது பாஜகவா? அல்லது விசிகவா?

இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்தை எல்லாம் பாஜகாவினர் செய்துவிட்டு தமிழகத்தில் சமூக நீதி அரசியலை துணிச்சலுடன் முன்னெடுத்திருக்கும் திருமாவளவனை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது.

திருமாளவன் குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கூறிய கருத்துக்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here