கந்துவட்டிக் கொடுமை – தொல்.திருமாவளவன் அறிக்கை

0
488

கந்துவட்டிக் கொடுமை
காவல்துறையும் வருவாய்துறையும் பொறுப்பேற்க வேண்டும்
தொல்.திருமாவளவன் அறிக்கை

திருநெல்வேலியில் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய கந்துவட்டி இப்போது சென்னையில் திரைப்படத்துறையைச்சேர்ந்த ஒருவரின் உயிரைக் குடித்திருக்கிறது. கந்துவட்டியைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அந்த கொடுமை தொடர்வதற்கு காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம். கள்ளச்சாராய சாவு நேரிட்டால் எப்படி அந்தப்பகுதியில் உள்ள காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை அரசு பொறுப்பேற்கச் செய்கிறதோ அப்படி கந்துவட்டி தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்தால் அந்தப்பகுதியில் உள்ள காவல்துறை வருவாய்துறை அதிகாரிகளைப்பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

கந்துவட்டிக் கொடுமை சமூகத்தில் பல்வேறு தீங்குகளை உருவாக்குகிறது. கறுப்புபணம் வைத்திருப்பவர்கள் அதை கந்துவட்டித் தொழிலில் முதலீடு செய்கிறார்கள். அது மேலும் கறுப்புப் பணத்தை பெருகச் செய்கிறது. கறுப்புப் பண ஒழிப்பில் தீவிரமாக இருப்பதாக கூறிக்கொள்ளும் மத்திய அரசு வருவாய் புலனாய்வுத் துறையின் மூலம் கந்துவட்டிக்காரர்களை விசாரிக்க வேண்டும். அவர்கள் மீது PMLA சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்துவட்டியை ஒழிப்பது என்பது ஏழை நடுத்தர மக்களுக்கு பொருளாதார தற்சார்பை உருவாக்குவதோடு தொடர்பு கொண்டதாகும். சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு சுழல் நிதி வழங்கப்பட்ட பிறகு கிராமப்புறங்களில் கந்துவட்டிக் கொடுமை சற்றே குறைந்தது. அந்த அனுபவத்தைக் கவனத்தில் கொண்டு சுழல் நிதியின் அளவை அதிகப்படுத்துவதோடு நகர்புறத்துக்கும் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். சிறு குறு வணிகர்களே கந்துவட்டிக்கு பணம் வாங்குவதில் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு சிறப்பு கடன் உதவி திட்டத்தை வகுப்பதன் மூலம் கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்க முடியும்.

வளரும் நாடுகளில் வறுமை ஒழிக்கப்பட அங்குள்ள சிறு தொழில் முனைவோருக்கு வங்கிகள் அல்லாமல் சிறிய அளவில் கடன் உதவி வழங்கும் நுண் கடனுதவி நிறுவனங்களை (Micro Finance Corporations) அமைக்கலாம் என்று முகமது யூனுஸ் என்பவர் பங்களாதேசில் நடைமுறைப்படுத்திக் காட்டிய திட்டம் நல்ல பலனைத் தந்தது. அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை தமிழக அரசு நமக்கேற்ற விதத்தில் வடிவமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கந்துவட்டிக்காரர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் ஆதாரவில்லாமல் அந்த தொழிலைச்செய்ய முடியாது. எனவே, கந்துவட்டிக்காரர்கள் – அரசியல்வாதிகள் – காவல்துறை அதிகாரிகள் என்ற கூட்டணியை உடைப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கந்துவட்டியின் காரணமாக இன்னொரு மரணம் நிகழுமேயானால் அது இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்பட வேண்டும். இதை உணர்ந்து காவல்துறை வருவாய்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் – தலைவர்
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here