ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளருக்கு ஆதரவு

0
423

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
திமுக வேட்பாளருக்கு ஆதரவு
தொல்.திருமாவளவன் அறிவிப்பு
~~~~~~~~~~~

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என திமுக செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டின் அடிப்படையிலும் திமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வதென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடனேயே இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு விடுத்தது. அதற்காக சென்னையில் மாநாடு ஒன்றையும் நடத்தியது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் மதவாதிகள் மேலாதிக்கம் பெறுவது இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை உணர்ந்துதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் பல்வேறு போராட்டக் களங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உருவாக்கி வந்தது. அதன் தொடர்ச்சியாகவே எமது அரசியல் நிலைப்பாட்டை இந்த இடைத்தேர்தலிலும் மேற்கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் அரசியல் சதித்திட்டங்களை எதிர்ப்பதில் திமுக வெளிப்படையாக செயல்பட்டு வருவதை காணமுடிகிறது. இந்நிலையில் அதற்கு உறுதுணையாக இருக்கவேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.

தற்போது நடப்பது ஒரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மட்டுமல்ல; மதவாத சக்திகளின் சூழ்ச்சிக்கும் மதச்சார்பற்ற சக்திகளின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் இடையிலான போராட்டமாகும். எனவே, இப்போராட்டத்தில் சாதிய மதவாதசக்திகளை முறியடிக்கும் வகையில் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும் எனவும் இதனடிப்படையில் இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுகிறது. இத்தேர்தலில் திமுக பெறும் வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளுக்கான வெற்றியாக அமையும் என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர்- தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here