காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திரு.ராகுல்காந்திக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்து

0
410

வகுப்புவாத சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும்
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திரு.ராகுல்காந்திக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்து
~~~~~~~~~~

இந்தியாவின் நீண்ட பாரம்பரியம் கொண்ட கட்சியான காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர், பண்டிதர் நேருவின் சோசலிசப் பார்வையையும், இந்திராகாந்தி அம்மையாரின் அரசியல் உறுதியையும், திரு.ராஜீவ்காந்தியின் நவீனத்துவ சிந்தனையையும், திருமதி.சோனியாகாந்தி அவர்களின் அரவணைக்கும் குணத்தையும் ஒருங்கே பெற்று காங்கிரஸ் கட்சியை மட்டுமின்றி இந்தியாவையும் தலைமை ஏற்று வழிநடத்த வாழ்த்துகிறோம்.

இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பின் காங்கிரஸ் கட்சியின் 16ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு.ராகுல்காந்தி அவர்கள் கடின உழைப்பையும் அரசியல் தெளிவையும் சிறப்பாக வெளிப்படுத்திவந்துள்ளார். ஊழலுக்கு எதிரான அவரது கோபத்தையும், அரசியல் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அவருக்குள்ள அக்கறையையும் இந்த நாடு பார்த்துள்ளது. பிரதமர் உள்ளிட்ட பாஜகவினர் அவரை எள்ளி நகையாடியபோதும், சிறுமைபடுத்திப் பேசிய போதும் அவர் அரசியல் நாகரீகத்தை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை. அதுவே அவரது தலைமைத்துவத்துக்குச் சான்றாக உள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேல் பாஜகவின் பிடியிலிருக்கும் குஜராத்தை மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றும் என்கிற அளவுக்கு திரு.ராகுல்காந்தி அவர்களின் தேர்தல் பிரச்சாரம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பதறிப்போன வகுப்புவாதிகள் தரம்தாழ்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

’குஜராத் தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறது’ என ஆதாரமற்ற அவதூறு ஒன்றைப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், அபாண்டமான பொய்யைக் கூறியதற்காக நாட்டு மக்களிடம் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ராகுல்காந்தி தலைவர் பொறுப்பேற்பதைப் பார்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு சான்றாக உள்ளது.

வகுப்புவாதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பது எல்லோருக்குமே ஆபத்தானதாகும். காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றிருக்கும் திரு.ராகுல்காந்தி அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டி வகுப்புவாதிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென வாழ்த்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் – தலைவர்,
விசிக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here