மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்

0
464

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட உள்ள  நிவாரண உதவி போதுமானதாக இல்லை. இறந்துபோன மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.

‘கடந்த 4-ம் தேதி குமரி மாவட்டத்தைப் பார்வையிட்டேன். உயிர்ச்சேதம், பயிர்ச்சேதம், உடமைகள் சேதம் எனப் பல சேதங்கள் நடந்துவிட்டன. இன்னும் தமிழக அரசு மக்களின் துயரத்தைத் துடைக்க முன் வரவில்லை. குமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வல்லுநர்களைக்கொண்டு மதிப்பீடுசெய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.  புயல் வீசிய பிறகு சொல்வது ஆட்சி நிர்வாகத்துக்கு அழகல்ல. பாதிப்பை இன்னும் அரசு கண்டுகொள்ளவில்லை. பஞ்சாங்கம் எழுதுபவருக்குத் தெரிவது வானிலை ஆய்வு மையத்துக்குத் தெரியவில்லை. இதுதான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியா. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில், இந்தப் பாதிப்புபற்றி ஆட்சியாளர்கள் முன்கூட்டியே  அறிவிக்காதது ஏன். மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியாத, இறந்த மீனவர்களைப் பற்றிய தகவலைச் சொல்ல வக்கற்ற அரசு இது. மீனவர்களின் கதறல், அழுகையை வரவைக்கிறது. புயல் அடித்ததும் கடலோரப் பாதுகாப்புப் படை உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தால்,  நூற்றுக்கணக்கானவர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

மீன்பிடிப்பவர்கள், பல நாள்கள் கடலில் தங்கி மீன்பிடிப்பார்கள். ஒகி புயல் வீசும் என அவர்களுக்குத் தகவல் கொடுக்கவில்லை. பாதுகாப்பாக இருக்கச் சொல்லவில்லை. துயரம் நிறைந்தது மீனவர்களின் வாழ்க்கை. காணாமல்போன பல மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. மீனவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு சில மீனவர்களைத்தான் அரசு கண்டுபிடித்துள்ளது. கேரள மீனவருக்கும் தமிழக மீனவருக்கும் வேற்றுமை தெரிகிறது. அங்குள்ள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்களின் வேதனை தெரிகிறது.

ஆட்சியாளர்கள் தருகிற வலி பேரிடர் தரும் வலியைத் தருகிறது. கன்னியாகுமரியில் ஹெலிப்பேட் தளம் அமைக்க வேண்டும். கடலில் மீனவர்களைத் தொடர்புகொள்ள அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை மீனவர்களுக்குக் கொடுக்க வேண்டும். மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் ஏற்றுமதிமூலம் அந்நியச் செலவாணி கொடுக்கிறார்கள். அதன்மூலம் அரசுக்கு அதிக வருமானம்  கிடைக்கிறது. அவர்களை அரசு காப்பற்ற வேண்டாமா? ஆட்சி நிர்வாகம் விழிபிதுங்கி நிற்கிறது. மீனவர்களின் தேவையைப் புரிந்து, அவர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்கள் கூடிய டவர் அமைக்க வேண்டும். இறந்துபோன மீனவர்களின் குடும்பத்துக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here