குஜராத் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்

0
492

குஜராத் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்
மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்

விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு

குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரசிடமிருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதை வகுப்புவாத சக்திகள் கொண்டாடி மகிழ்கின்றன. குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்த போதிலும் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது நூறு இடங்களைக் கூட அதனால் பெற முடியவில்லை. அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சி திரு.ராகுல்காந்தி தலைமையில் அங்கே புத்தெழுச்சி பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. எனினும் குஜராத் தேர்தல் முடிவை நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது. இந்தியா முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதைத் தான் அது வலியுறுத்துகிறது. இனியும் தாமதிக்காமல் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

வளர்ச்சி முன்னேற்றம் என்ற முழக்கத்தை முன்வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்த பாஜக குஜராத் மாநில தேர்தலில் மீண்டும் வகுப்புவாதத்தை கையிலெடுத்தது. தான் வெற்றி பெறுவதற்காக பாஜக எதையும் செய்யத் தயங்காது என்பதேயே இது காட்டுகிறது.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வகுப்புவாத நடவடிக்கையின் மூலம் மக்களை பிளவுப்படுத்துவதற்கு பாஜக தீவிரமாக முயற்சிக்கும் என்பதற்கான அடையாளமே இந்தத் தேர்தல். இந்நிலையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து காங்கிரஸ் தலைமை அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

வகுப்புவாத சக்திகள் தம்பட்டம் அடிப்பதைப் போல பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி ஒன்றும் கிடைத்துவிடவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் வாங்கிய வாக்குகளைவிட பத்து சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் குறைந்துள்ளன. பாஜகவின் செல்வாக்கு மோடியின் சொந்த மண்ணிலேயே சரியத் தொடங்கிவிட்டதையே இது புலப்படுத்துகிறது. 2019 பொதுத்தேர்தலில் பாஜக அடையப்போகும் தோல்விக்கு குஜராத்தில் அது சந்தித்துள்ள பின்னடைவு ஒரு துவக்கம் என்றே கூறவேண்டும்.

குஜராத் தேர்தலில் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர் என்பதைக் காட்டுகிறது. இது வரவேற்கத் தக்க மாற்றமாகும்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கும் இடங்கள் ராகுல்காந்தி அவர்களின் தலைமை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிகையை காட்டுகின்றன. அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here