2 ஜி அலைக்கற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

0
967

2 ஜி அலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை!
சிஏஜி வினோத் ராய் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

திமுகவுக்கும் அது இடம்பெற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் அவப்பெயர் உண்டாக்கும் நோக்கோடு புனையப்பட்ட 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். நீதிக்கான போராட்டத்தில் மனந்தளராமல் உறுதியாக நின்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கும் திமுக தலைமைக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

’இந்த வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது’ என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்த சிஏஜி அறிக்கையில் கூறப்பட்ட 1.76 லட்சம் கோடி இழப்பு என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்பது சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும்போதே அம்பலமாகிவிட்டது. சிஏஜி தலைவர் வினோத் ராய் அரசுக்கு ஏற்பட்டதாக கூறிய இழப்புத் தொகை அவரது கற்பனை மட்டுமே. எந்தக் கணக்கின் அடிப்படையில் அந்த இழப்பைக் கண்டுபிடித்தார் என்பதை அவர் தெளிவுபடுத்தவே இல்லை.

2 ஜி விவகாரம் போலவே வினோத் ராயின் தவறான அறிக்கையின் காரணமாக நிலக்கரி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால் பொதுதுறை வங்கிகளின் வாரக்கடன் அளவு பல லட்சம் கோடி அதிகரித்துவிட்டது என கபில் சிபல் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். எனவே, தீய நோக்கத்தோடு செயல்பட்டு அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கிய வினோத் ராய் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை முன்வைத்துதான் 2011, சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி தோற்கடிக்கப்படது. இன்று மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கும் அந்த அவதூறுப் பிரச்சாரமே காரணமாக அமைந்தது. அரசியல் லாபத்துக்காக பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவும், தமிழகத்தில் அதை எதிரொலித்த கட்சிகளும் தமது தவறுக்குப் பொதுமக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்கவேண்டும்.

ஆ.ராசா ஒரு தலித் என்பதால் ஊடகங்களில் அவர் மீது சாதிய காழ்ப்புடன் தாக்குதல் நடத்தப்பட்டது. உயர் பதவிக்கு வந்தால் தலித் சமூகத்தினர் ஊழல் செய்வார்கள் என்பதைப்போன்ற ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டு ஏற்படுத்தினார்கள். அத்தகைய சக்திகள் இனியாவது மனம் திருந்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here