ஏசுபெருமானின் அறநெறிகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்!

0
1064
ஏசுபெருமானின் அறநெறிகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்!
எழுச்சித்தமிழர் வாழ்த்துச் செய்தி

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணுலகில் தோன்றிய மகான் இயேசு பெருமானின் பிறந்தநாள் விழா உலகமெங்கும் கொண்டாடப்படும் வேளையில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

ஏழை எளிய மக்களுக்கு எதிரான ஆட்சி நிர்வாகம், ஒடுக்குமுறை, சுரண்டல் போன்றவை மேலோங்கியச் சூழலில், அவற்றை எதிர்த்துப் போராடும் ஒரு மனிதநேயப் போராளியாக அன்றைய காலத்தில் ஏசுபெருமான் வெகுண்டெழுந்தார்.

அன்பும் அறமும் அநீதியை வீழ்த்துகிற ஆற்றல்வாய்ந்த ஆயுதங்கள் என்பதை அவர் அமைதிவழியில் போதித்தார். பிறர்மீது வெறுப்பை உமிழ்வதோ, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதோ நிலையான வெற்றிக்கு உதவாது என்பதை உலகுக்கு உணர்த்தினார். ஆனாலும், அன்று ஆட்சியதிகாரப் பீடத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஏசுபெருமானின் அன்புவழியையும் அறநெறிகளையும் கண்டு அஞ்சினர். ஆதலால், அவரை சிலுவையில் அறைந்து தமது ஆணவத்தை நிலைநாட்டினர். எனினும், ஏசுபெருமானின் அறநெறிகள் இன்று உலகம் முழுவதும் விரவிபரவி மானுடத்தை வழிநடத்திக் கொண்டிருகின்றன.

மனிதநேயம் நிறைந்த அவரது மகத்தான போதனைகள் இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலிலும், ஆதிக்க வெறியர்களின் கொட்டம் முற்றாக அடங்கிடவில்லை. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இன்னும் பிற அடையாளங்களின் பெயரால் எளியோரை ஒடுக்கிச்சுரண்டும் கும்பலின் ஆதிகத்தை, அநீதியை எதிர்த்துப் போராட ஏசுபெருமானின் பிறந்தநாளில் உறுதியேற்போம். சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் என்னும் உயரிய ஜனநாயக கோட்பாடுகளைத் தழைக்கச் செய்யவும் சமூக நல்லிணகத்தைப் பாதுகாக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்.

கடந்த நவம்பர் 29ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைக் கடுமையாகத் தாக்கிய ஓகி புயலால் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற கிறிஸ்தவ மீனவப் பெருங்குடி மக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால், பெரும்துக்கத்தில் மூழ்கி வாடிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மீனவ மக்களின் துயரத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் வகையில், இந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடுவதில்லை என அறிவித்திருக்கிறோம். எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கிறிஸ்தவப் பெருவிழாக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதே வேளையில் ஏசுபெருமானின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடும் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் மீண்டும் எமது இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here