தமிழ்நாடு பெயர் சூட்டல் – பொன்விழாவை வரவேற்கிறோம்!

0
697

தமிழ்நாடு பெயர் சூட்டல் – பொன்விழாவை வரவேற்கிறோம்!
தியாகி சங்கரலிங்கனாருக்கு சிலை!
பொன்விழா நினைவுத் தூண்!
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்!

சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டிருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேறிஞர் அண்ணா ஆவார். 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது. அதன் பொன்விழா ஆண்டு இப்போது துவங்கவுள்ளது. அதைத் தமிழக அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்போகிறோம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். வரலாற்றில் நிலைத்திருக்கும் விதமாக இந்த பொன்விழா ஆண்டைக் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டு உயிரிழந்தார் என்பது வரலாறு. அவர் கண்ட கனவு பேரறிஞர் அண்ணா அவர்களால் தான் நனவாகியது. தற்போது தமிழக அரசு பொன்விழா குறித்து சில அறிவிப்புகளை செய்துள்ளது. அது வரவேற்கத்தக்கது என்றாலும் இன்னும் சிறப்பாக இதை நாம் நடத்த வேண்டும். தமிழக அரசு மட்டுமே இதை நடத்துவதைவிடவும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இந்த விழாவை நடத்துவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு பொன்விழாவைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்கும் விதமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் இந்த வரலாறு எதிர்வரும் தலைமுறையினருக்கும் தெரியும் விதமாக தியாகி சங்கரலிங்கரனாரின் முழு உருவச் சிலையை நிறுவுவதோடு சென்னையில் பொன்விழா நினைவுத் தூண் ஒன்றை எழுப்பவேண்டுமெனவும் மாண்புமிகு முதல்வரை வலியுறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here