அன்னைத் தமிழ் அவமதிப்பு! இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

0
483

அன்னைத் தமிழ் அவமதிப்பு!

இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை

சென்னையில் (23.1.2018) நேற்று நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் ப்ரோஹித் அவர்கள் பங்கேற்றுள்ளார். அதே நிகழ்ச்சியில் காஞ்சி சங்கர மடத்தைச் சார்ந்த இளைய சங்கராச்சாரியார் திரு.விஜயேந்திரர் அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்.  அந்நிகழ்ச்சியைத் தொடங்கும் போது வழக்கம் போல தமிழ்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டுள்ளது. அப்போது மேதகு ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்றுள்ளனர். ஆனால், விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்க விரும்பாமல் அமர்ந்தபடியே இருந்துள்ளார். நிகழ்ச்சியின் நிறைவாக தேசியப் பண் இசைக்கப்பட்டுள்ளது. அப்போது விஜயேந்திரர் அவர்கள் எழுந்து நின்று தேசியப் பண்ணுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அவர் தேசிய பண்ணுக்கு மட்டும் எழுந்து நின்றிருப்பது அவர் வேண்டுமென்றே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.

தமிழை ‘நீச பாஷை’ என்று தொன்று தொட்டுக் கூறி வரும் இவர்கள் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்த்தாயை தமிழ்மண்ணிலேயே மேதகு ஆளுநர் கலந்துகொண்ட அவையிலேயே அவமதித்துள்ளார். தமிழ் மொழியின் மீதுள்ள அவரின் வெறுப்புணர்வு எத்தகையது என்பதை அவரது இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. தமிழக ஆளுநரே எழுந்து நின்ற அந்த அவையில் தமிழை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே மேதகு ஆளுநரையும் ஒட்டுமொத்த அந்த அவையையும் விஜயேந்திரர் அவமதித்துள்ளார். அவை நாகரிகம் என்பது அனைவருக்குமான ஒரு பொது நாகரீகமாகும். அத்தகைய உயர்ந்த நாகரிகத்தையும் அவரால் பின்பற்ற இயலவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆறு கோடிக்கும் மேலான தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டிலேயே மடம் அமைத்து தமிழர்களின் உழைப்பைச் சுரண்டிப் பிழைத்து வரும் இவர்கள் தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் ஒரு கிள்ளுக் கீரையாக குறைத்து மதிப்பிடுகின்றனர் என்று தெரியவருகிறது.

அத்துடன், தமிழர்களால் என்ன செய்துவிட முடியும் என்கிற இறுமாப்பும் அவரிடம் மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது. தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் மதிப்பளிக்க முடியாது என்று வெளிப்படையாகவே செயல்படும் விஜயேந்திரர் போன்ற தமிழர் விரோத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் நேராது என்கிற துணிச்சல் வளர்ந்துள்ளதை விஜயேந்திரரின் நடவடிக்கைகளின் மூலம் அறியமுடிகிறது.

விஜயேந்திரரின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிகிறது. தாய்த் தமிழை மட்டுமின்றி தமிழக ஆளுநரையும் அந்த அவையையும் அவமதிக்கும் வகையில் அநாகரீகமாக நடந்துகொண்ட விஜயேந்திரர் மீது தமிழக அரசு உரிய வழக்கைப் பதிவுசெய்ய வேண்டும்.  அத்துடன் அன்னைத் தமிழை அவமதித்த விஜயேந்திரர் வெளிப்படையாக தமிழ்மக்களிடையே வருத்தம் தெரிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

இவண்

தொல்.திருமாவளவன்,

நிறுவனர் – தலைவர்,

விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here