தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு இழுத்தடிப்பு! தமிழக அரசின் ஏமாற்று வேலை!

0
607

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு இழுத்தடிப்பு!
தமிழக அரசின் ஏமாற்று வேலை!
தொல். திருமாவளவன் அறிக்கை

தமிழ் நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 1-12-2015 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வும் நிலுவைத்தொகையும் இதுவரை வழங்கப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியதாகும்.மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத்தொகை மற்றும் காலிப்பணியிடங்களை உடனே நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை மின்வாரியத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்குழு, மின்வாரியத்தலைவர் மற்றும் மாண்புமிகு மின்துறை அமைச்சர் ஆகியோரிடம் வழங்கிய பிறகும் ஊதிய உயர்வு தொடர்பான இறுதி முடிவை எடுக்க முடியாமல் மின்வாரிய நிர்வாகமும் தமிழக அரசும் திணறி வருவது வேதனையளிக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தொழிற்சங்கங்களும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குழுவும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்பதும் கண்டனத்திற்குரியதாகும்.
21-10-2017அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வுக்கணக்கீட்டு காரணிகள் 2.57 விழுக்காடு என மின்வாரியம் ஒத்துக்கொண்ட நிலையில் அதனை நிறைவேற்றுவதில் தமிழக அரசின் நிதித்துறை தயக்கம் காட்டுவதோடு மட்டுமில்லாமல் மின்வாரியம் ஒத்துக்கொண்ட ஊதிய உயர்வுக்காரணியை நிராகரித்ததாக தெரியவருகிறது.

ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வில் தமிழக அரசு மிகுந்த அலட்சியப்போக்கை கடைபிடித்ததால்,போக்குவரத்து ஊழியர்கள் திடீரென போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள்.

ஆகவே,தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களும் போக்குவரத்து ஊழியர்களைப்போல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் தமிழக மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை தமிழக அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே மின்வாரியத் தொழிற்சங்கங்கள் கடந்த 23-1-2018 அன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில்,தொழிலாளர் நல ஆணையத்தில் 22-1-2018 நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாக அப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அப்பேச்சுவார்தையில் மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு வரும் 12-2-2018 க்குள் முடிக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே,தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், மழை வெள்ளம் புயல் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் உயிரை துச்சமென நினைத்து இரவு பகல் பாராமல் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் மின்வாரிய ஊழியர்களின் ஞாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் தொழிற்சங்கங்கள் வாயிலாக தமிழ்நாடு மின்வாரியம் முன்வைத்த கோரிக்கை பட்டியலை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு ஊதிய உயர்வும் நிலுவைத்தொகையும் வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.அத்துடன்,தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லத்திண்டாட்டத்தை போக்கும் வகையில் மின்வாரியத்தில் காலியாகவுள்ள சுமார் நாற்பதாயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல். திருமாவளவன்
நிறுவனர்-தலைவர் விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here