காவிரி சிக்கல்: ‘மத்திய அரசின் காலம் தாழ்த்தும் தந்திரத்துக்கு தமிழகஅரசு பலியாகக் கூடாது”

0
429
காவிரி சிக்கல்: ‘மத்திய அரசின் காலம் தாழ்த்தும் தந்திரத்துக்கு தமிழகஅரசு பலியாகக் கூடாது”
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
~~~~~~~~~~
‘ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் ‘ என உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைவதற்கு 20 நாட்களே உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாதிப்பதற்கு 4 மாநிலங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ‘காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் இறுதிக்குள் அமைப்போம்’ என மத்திய அரசு இதுவரை உறுதியாகக் கூறாத நிலையில், இப்படி பேச்சுவார்த்தைக்கு அழைப்பது காலம் தாழ்த்துவதற்கான தந்திரமாகவே தெரிகிறது. எனவே, பிரதமரிடமிருந்து இதுதொடர்பான வாக்குறுதி எதுவும் வராதபோது இந்த கூட்டத்தில் கலந்துகொள்வது மத்திய அரசின் தந்திரத்துக்கு பலியாவதாகவே பொருள்படும். எனவே, தமிழக அரசு இதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்கக் கூடாது பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் சிக்கிவிடக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்
காவிரி மேலாண்மை வாரியத்தை எப்படி அமைக்க வேண்டும், அதில் எத்தனை உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், அவர்களுக்கான தகுதி எப்படி இருக்க வேண்டும், மேலாண்மை வாரியத்தின் செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் -என அனைத்து விவரங்களையும் காவிரி நடுவர்மன்றம் விரிவாக வரையறுத்துள்ளது. எனவே, அது தொடர்பாக மீண்டும் விவாதிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை ஆலோசனைக் கூட்டம் என்கிற பெயரில் அழைப்பு விடுப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் சாக்குபோக்கு சொல்வதற்கே வழிவகுக்கும்.
காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் விவசாய சங்கங்களும் தமிழக அரசோடு ஒன்றுபட்டு நிற்கும் நிலையில் இது தொடர்பான எந்த முடிவையும் எல்லோரையும் கலந்தாலோசித்தே எடுக்க வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.

நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here