பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

0
748
இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான கணக்குத் தேர்வில் பாதிக்கும் மேற்பட்ட வினாக்கள் மிகவும் கடுமையாக இருந்த காரணத்தால் மாணவர்கள் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர். ஒரு மதிப்பெண்ணுக்கான வினாக்களில் ஐந்து மதிப்பெண்ணுக்கான வினாவைப் போல கடுமையான கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு மதிப்பெண்களுக்கான வினாக்கள் எல்லாமே வழக்கத்துக்குமாறான முறையில் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். கட்டாயம் பதிலளிக்க வேண்டிய இரண்டு வினாக்களும் கூட எளிதில் புரியாத முறையில் கேட்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுகிற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதோடு இது தேர்ச்சி விகிதத்தையும் பாதிக்கும் என்ற
அச்சம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. எனவே, தமிழக கல்வி அமைச்சர் இதில் உரிய நிவாரணத் தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு தமிழக கல்வி அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைள் பாராட்டுக்குரியவை தான் என்ற போதிலும் தேர்வு முறையில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் மாணவர்களை மிகவும் பாதிப்படைய செய்பவையாக இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். பத்தாம் வகுப்புத் தேர்வுகளையே எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ ஒரு மாத காலம் இந்த தேர்வுகள்
நடைபெற்று வருகின்றன. இது இந்த ஒரு மாத காலத்துக்கும் மாணவர்களை தேர்வு பயத்திலேயே வைத்துக்கொண்டிருக்கிறது. இதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் குறித்து கல்வித்துறை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல்தாளும் கடுமையாக இருந்தது என புகார் எழுந்தது. இப்போது கணித ஆசிரியர்களே திக்குமுக்காடும் விதத்தில் கணிதத்துக்கான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அணுகுமுறை கல்வி தரத்தை உயர்த்துவதற்கு ஒரு போதும் உதவாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் கேட்கப்பட்ட முறைக்கு மாறாக பொதுத்தேர்வு வினாக்கள் அமைந்திருப்பது மாணவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. இதே மனநிலையில் எஞ்சிய தேர்வுகளையும் அவர்கள் எழுதினால் நிச்சயம் சிறப்பான முறையில் தேர்வை எழுத முடியாது. எனவே, வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமான அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரை வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here