காவிரி வரைவுத் திட்டத்தை விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்

0
430
காவிரி வரைவுத் திட்டத்தை விவாதிக்க
அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
~~~~~~~~~~~~

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வரைவுத் திட்டம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் நகலை தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில் உள்ள விவரங்களை விவாதித்துத்  தமிழக அரசின் சார்பில் எதிர்வரும் 16ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி பிரச்சனை  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த பிரச்சனையில் தமிழகத்தின் கருத்தை இறுதி செய்ய உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசு முன்வைத்துள்ள வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள அமைப்பானது, காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி உத்தரவில் முன்வைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை ஒத்த அமைப்பு அல்ல எனத் தெரிகிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் வர வேண்டுமென்றால் தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்பு ஒன்றின் கீழ் அணைகள் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு முன்வைத்துள்ள அமைப்பு ஒரு மேற்பார்வை அமைப்பு என்று மட்டுமே தெரிகிறது. அத்தகைய அமைப்பால் தமிழகத்துக்கு உரிமை உள்ள நீரை பெற்றுத்தர முடியாது. எனவே, மத்திய அரசு தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பதாகவே இதைக் கருதத் தோன்றுகிறது.

‘மத்திய அரசால் அமைக்கப்படும் அமைப்பின் பெயர் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம், நமக்கு தண்ணீர் கிடைத்தால் போதும்’ என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. சட்டத்தின்படி ஒரு அமைச்சரின் பெயர் அதன் அதிகாரத்தோடுத் தொடர்புக் கொண்டதாகும். மேற்பார்வைக் குழு என்று பெயர் வைத்துவிட்டு அது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகச்  செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, நடுவர்மன்றம் கூறியதை போல காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு என்ற பெயர்களிலேயே அந்த அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் துரோகத்துக்குத் தமிழக அரசும் துணைப்போகிறது என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கும் வகையில், தமிழக அரசு எவ்விதத் தயக்கமுமின்றி நாளையே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்  கூட்ட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here