தூத்துக்குடிப் படுகொலை! ஆட்சியாளர்களின் சதியை முறியடிப்போம்!!

0
72
தூத்துக்குடிப் படுகொலை! இணைய சேவை முடக்கம்!
ஆட்சியாளர்களின் சதியை முறியடிப்போம்!
முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிப்பெறச்செய்ய 
பொதுமக்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அழைப்பு!
தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய படுகொலைகளைக் கண்டித்தும் தமிழக அரசு பதவி விலகக் கோரியும் நாளை 25.5.2018 அன்று திமுக மற்றும் தோழமைக் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச்செய்யுமாறு தமிழக மக்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
தூத்துக்குடியில் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துக்கொண்டே போகிறது. இன்று வரை 13 பேர் பலியாகியுள்ளனர். தமிழக வரலாற்றில் இவ்வளவுபேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது வேறு எப்போதும் நடந்ததில்லை. இந்தப் படுகொலைகளுக்கு தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட்டிருக்கும் இந்த அரசு இனியும் பதவியில் நீடிப்பது முறையல்ல.
படுகொலை செய்ததுமட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளையும் தமிழக அரசு முடக்கியிருக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள காஷ்மீர் மாநிலத்தில் கையாளப்படுகிற  இந்த உத்தியைத் தமிழ் நாட்டில் புகுத்தியிருப்பதன் மூலம் இங்கு சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று ஆளுங்கட்சியே ஒப்புக்கொண்டிருக்கிறது.
தமிழக மக்களின் உரிமைகளைப் பலிகொடுக்கும்,  அவர்களது உயிர்களுக்கு உலைவைக்கும் அதிமுக அரசின் அராஜகப்போக்கைக் கண்டித்து நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிப்பெறசெய்ய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அறவழியில் அமைதியாகப் பணியாற்றிட வேண்டுமெனவும் தமிழக மக்கள் இதற்கு முழுமையான ஆதரவை நல்கவேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர்- தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here