காஷ்மீருக்கான சிறப்பு உரிமையைப் பறிப்பதற்கு முயற்சியா?

0
160
காஷ்மீருக்கான சிறப்பு உரிமையைப் பறிப்பதற்கு முயற்சியா?
மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்
~~~~~~~~~~
காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370ன் படி சிறப்பு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அதனையொட்டி அம்மாநிலத்தில் யாருக்கு குடியுரிமை வழங்குவது என்ற அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்கும் உறுப்பு 35எ உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது உறுப்பு 35எ- வை ரத்து செய்ய பாஜக ஆதரவு அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. முத்தலாக் பிரச்சனையில் கையாண்ட உத்தியையே பயன்படுத்தி காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையை நீதிமன்றத்தின் மூலமாக பறிப்பதற்கு செய்யப்படும் முயற்சியோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மத்திய அரசு இதில் தனது நிலையைத் தெளிவுப்படுத்த வேண்டும். காஷ்மீரின்  சிறப்புரிமையைப் பாதுகாப்போம் என்று அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்தியாவில் குடியுரிமை பற்றிய சிறப்பு அதிகாரம் நாகாலாந்து, மிசோரம் முதலான மாநிலங்களுக்கு உள்ளது. குடியரசுத் தலைவரின் அறிவிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களுக்கும் அதற்கு முன்பே அங்கே இருப்பவர்களுக்கும் இடையில் வேறுபட்ட மதிப்பை அளிக்கும் நிலை புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளது. வழக்கு தொடுத்தவர்கள் அதையெல்லாம் எதிரிக்காமல் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமையை மட்டும் எதிர்ப்பது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையே காட்டுகிறது.
அசாமில் சுமார் 40 லட்சம் பேரின் குடியுரிமையைப் பறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அங்கு மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுளது. இந்த சூழலில் காஷ்மீர் மாநிலத்திலும் பதற்றத்தை உண்டாகும் விதமாக மத்திய அரசு நடந்து கொள்வது கவலை அளிக்கிறது.
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமையை நேரடியாகவோ மறைமுகமாகவோ பறிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக எந்த நிலையையும் எடுக்கக் கூடாது. அந்த அடிப்படையிலேயே உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here