திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வாழ்த்துக்கள் !

0
298
திமுகவை மட்டுமின்றி தமிழகத்தையும் வழிநடத்துவார்
 
திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வாழ்த்துக்கள் !
~~~~~~~~~~~~
திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்  திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, சமத்துவப் பெரியார் கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில் இன நலன், மொழி நலன் காக்கவும்; சமத்துவத்தை உட்கூறாகக்கொண்ட சமூகநீதியை வலுப்படுத்தவும் பாடாற்றவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது 15 ஆவது வயதிலேயே இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி கட்சிப் பணிகளில் ஈடுபட்டவர். அதுவே பின்னர் திமுகவின் இளைஞரணியாக உருவெடுத்தது. தனது 23 ஆவது வயதில் அவசரநிலைக்கால கொடுஞ்சிறையையும் அடக்குமுறைகளையும் சந்தித்தவர்.
1989 முதல் தான் போட்டியிட்ட அனைத்து தேர்தகளிலும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர். சென்னை மாநகர மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் சிறப்பான முறையில் பணியாற்றியவர்.
திமுகவில் இளைஞரணி செயலார், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் எனப் படிப்படியாக பல பொறுப்புகளை வகித்தவர்.  திமுகவின் தலைவராக இருந்து அரை நூற்றாண்டுகாலம் அந்தக் கட்சியை வழிநடத்திய சமத்துவப் பெரியார் கலைஞரால் அடுத்த தலைவர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டவர். இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு உதாரணமாகத் திகழும் திமுகவின் மரபுப்படி இன்று தேர்தல் மூலம் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இந்திய அரசியல் இப்போது ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துக்கொண்டுள்ளது. “மாநில சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி” என்ற வரலாற்று முழக்கத்தின்மூலம் இந்திய கூட்டாட்சிக்கு புதிய பரிமாணத்தை அளித்த தலைவர் கலைஞர், தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவிலும் மதச்சார்பின்மை தத்துவத்தை உயர்த்திப்பிடித்து ஜனநாயகத்தைப் பாதுகாத்தார். ஆனால் இன்றோ பெரும்பான்மைவாத ஆட்சியை அமைக்க விரும்பும் வகுப்புவாத சக்திகள் முனைப்பு பெற்றிருக்கின்றன.  இந்தச் சூழலில் மதச்சார்பின்மை என்னும் கொள்கையைத் தளர்வின்றி முன்னெடுத்துச்செல்லுதல் அவசியமாகும். தமிழ்நாட்டில் சாதிய, மதவாத சக்திகள் தலைதூக்காமல் தடுப்பதே இன்று தலைவர் பொறுப்பேற்றிருக்கும் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னால் இருக்கும் முதன்மையான சவால்.
மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படும் நிலையில். 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உரிமை நீதிமன்றத்தின் அச்சுறுற்றலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில் 1960 களைப்போல போர்ப் பரணி பாட வேண்டிய வரலாற்றுக் கடமை திமுகவுக்கு இருக்கிறது.
திமுக என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்  சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்ற கொள்கை வெளிச்சத்தில் கட்சியை மட்டுமின்றி வெகு விரைவில் நாட்டையும் வழிநடத்த வாழ்த்துகிறோம்.
இவண்
தொல். திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here