பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  மனித உரிமை ஆர்வலர்களை விடுதலை செய்க! 

0
305
பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள
மனித உரிமை ஆர்வலர்களை விடுதலை செய்க! 
மகாராஷ்டிரா அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
~~~~~~~~~~~~
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென மகாராஷ்டிர மாநில அரசையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறோம்.
மகராஷ்டிர மாநிலம்  பீமாகோரேகான் என்னும் இடத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த யுத்தத்தில் தலித்துகளின் மகர் ராணுவம் பெற்ற வெற்றியின்  200 ஆவது ஆண்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பண்பாட்டு விழா ஒன்றை தொடர்ந்து நடந்த கலவரத்தைக் காரணம்காட்டி அதில் தொடர்பிருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தலித்துகளுக்கு ஆதரவான மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மகாராஷ்டிர அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறதோ என்ற அய்யத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த கைதுகளை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர்.
இந்தக் கைதுகளை எதிர்த்து புகழ்பெற்ற வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர்  உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடுத்துள்ளனர். பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றமும் டெல்லி உயர்நீதிமன்றமும் இதில் இருவரது கைதுகளைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக அரசு அப்பட்டமான தலித் விரோத போக்கைக் கடைபிடித்து வருகிறது. தலித்துகள் மீதான வன்கொடுமைகள்

 நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன . இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பும் மனித உரிமை ஆர்வலர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அவர்களையெல்லாம் மாவோயிஸ்டுகள் எனச் சொல்லி பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைத்ததன் மூலம் தலித்துகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க எவரும் முன்வரமுடியாதபடி தடுத்துவிட வேண்டும் என்று மத்தியிலும் மகாரஷ்டிரா மாநிலத்திலும் ஆளுகிற பாஜக அரசுகள் எண்ணுவதாகத் தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
அவசரநிலை காலக்கொடுமைகளை விமர்சித்துப் பேசும் பாஜகவினர் அதைவிட கொடூரமான சர்வாதிகார ஆட்சியை நடத்த முற்படுவது முரண்பாடாக உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். இந்த அடக்குமுறையை எதிர்த்துக்  குரலெழுப்புமாறு  ஜனநாயகத்தின்பால் பற்றுள்ள அரசியல் கட்சிகளைக்  கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.

நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here