மதவாத வன்முறையைத் தூண்டும்  எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்க!

0
148
மதவாத வன்முறையைத் தூண்டும் 
எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்க!
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்  
தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து மதவாத வன்முறையைத் தூண்டும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

 

தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடையலாம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முயற்சித்து வருகிறார். “வெட்டுவோம், கொலை செய்வோம், தலையை எடுப்போம்”  என்றெல்லாம் சட்ட விரோதமாகப் பொதுக் கூட்டங்களில் அவர் பேசி வருகிறார். தந்தை பெரியாரின் சிலையை உடைக்க வேண்டுமென்று அவர் பேசியதையொட்டி சிலை உடைக்கப்பட்டு பெரும் பதற்றம் ஏற்பட்டதை அனைவரும் அறிவோம். கவிப்பேரரசு வைரமுத்துவின் தலையை வெட்ட வேண்டுமென்று பகிரங்கமாகப் பேசி கலவரத்தை ஏற்படுத்த அவர் முயற்சித்தார். இப்படி ஒவ்வொரு நாளும் போகிற இடமெல்லாம் கலவரத்தைத் தூண்டி வருகிறார். அவரது பேச்சின் காரணமாகவே தென்காசியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருமயத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கூட்டமும் ஊர்வலமும் நடத்த முயற்சித்து கலவரத்தை மூட்டியுள்ளார். உயர்நீதிமன்றத்தையும் காவல்துறையையும் சொல்லத் தகாத வார்த்தைகளால் அவர் வசை பாடிய வீடியோ சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் கடந்த இரண்டும் நாட்களாகப் பரவி வருகிறது. அவர் மீது திருமயம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டிருந்தாலும் இதுவரை அவரை போலீசார் கைது செய்யவில்லை. நீதிமன்றத்தின் மாண்பைக் காக்கவும் காவல்துறையினரின் கடமையுணர்வு குன்றாமல் தடுக்கவும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அவரைக் கைது செய்ய வேண்டும்.
 சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்கக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனத் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

 

தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று அவரது உருவச்சிலைக்கு மரியாதை செய்யப் பலரும் கூடியிருந்த நேரத்தில் அவர்களின் கண் முன்பாகவே சென்னையில் உள்ள தந்தை பெரியார் சிலையை சனாதன பயங்கரவாதி ஒருவன் அவமதித்துள்ள செயல் அதிர்ச்சியளிக்கிறது. அவனைப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் .

இவண்
தொல்.திருமாவளவன்.

நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here