பதவி உயர்வில் இடஒதுக்கீடு ! உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை வரவேற்கிறோம் !

0
307
பதவி உயர்வில் இடஒதுக்கீடு !
உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை வரவேற்கிறோம் !
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகள் விரும்பினால் அதற்கு எந்தத் தடையும் இல்லையென உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இதனடிப்படையில் மத்திய மாநில அரசுகள் பதவி உயர்வில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட உரிய ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

 

நாகராஜ் என்பவர் வழக்கில் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பதவி உயர்வில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை எனவும்; அப்படி வழங்க விரும்பினால் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் சமூகத்தில் பின்தங்கி உள்ளனர் என்பதை நிரூபிக்கும் புள்ளிவிவரங்களைத் திரட்டி முன்வைக்க வேண்டும் என்றும்; உயர்பதவிகளில் இந்தப் பிரிவினர் போதுமான அளவில் இல்லை என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகளும் வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் சமூகத்தில் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் பின்னடைந்து இருப்பதை நிரூபிக்கும் புள்ளி விவரம் எதையும் மாநில அரசுகள் திரட்டத் தேவையில்லை. நாகராஜ் வழக்கில் உச்சநீதிமன்றம் அப்படிக் கூறியிருப்பது இந்திரா சஹானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு முரணாக உள்ளது எனவே அது செல்லாது எனக் கூறியுள்ளது.
நாகராஜ் வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகு,  புள்ளி விவரங்களைத் திரட்டவேண்டும் என்ற காரணத்தைக் காட்டி பல்வேறு மாநில அரசுகள் எஸ்சி/எஸ்டி  பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க மறுத்து வந்தன. சில மாநிலங்களில் அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டபோது நாகராஜ் வழக்கின் தீர்ப்பைக் காட்டி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு செல்லாது என உயர்நீதிமன்றங்கள் கூறியிருந்தன. அந்தக் குழப்பங்களையெல்லாம்  மாற்றுவதற்கு இன்றைய தீர்ப்பு வழிவகுத்துள்ளது.
இந்த வழக்கில் அரசு சார்பில் வாதிட்ட தலைமை வழக்கறிஞர் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் அளவைக் கணக்கிடும்போது மக்கள் தொகையில் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் எவ்வளவு இருக்கிறார்களோ அதற்கேற்ப அதை நிர்ணயிக்கவேண்டும் என வாதிட்டார். அது கவனிக்கத்தக்கதாகும்.
இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையையும் போடவில்லை. ஏற்கனவே நாகராஜ் வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனையை இது நீக்கியுள்ளது. எனவே இனியும் காலம் கடத்தாமல் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய  மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here