தமிழக முதல்வர் மீது சிபிஐ விசாரணை ! உடனே அவர் பதவி விலக வேண்டும் !

0
350
தமிழக முதல்வர் மீது சிபிஐ விசாரணை !
உடனே அவர் பதவி விலக வேண்டும் !
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

 

தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இந்நிலையில் அவர் பதவியில் நீடிப்பது விசாரணைக்கு தடையாக அமையும். எனவே, உடனடியாக அவர் பதவி விலக வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தப்பணிகள் வழங்கப்பட்டதில் சுமார் 4800கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் உட்பட உயர் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் எல்லோருமே பதவியில் நீடித்துக்கொண்டுதான் உள்ளனர். இப்போது முதலமைச்சர் மீதே  விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

 

முதலமைச்சர் பொறுப்பிலிருக்கும் ஒருவர் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில் அவர் பதவியிலிருந்தால் சாட்சிகளை கலைக்கவும் விசாரணையை திசை திருப்பவும் வாய்ப்பு ஏற்படும். எனவே, தமிழக முதலமைச்சர் தானே முன்வந்து பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அப்படி முன்வராவிட்டால் நாட்டின் நலன் கருதி
அவரைப் பதவி விலகுமாறு குடியரசுத் தலைவர் ஆணையிட வேண்டுமென்றும்  கேட்டுகொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.

நிறுவனர் – தலைவர்
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here