இலங்கை நெருக்கடி: “தமிழ் அரசியல் சக்திகள் ஒருமித்து செயற்பட வேண்டும்”

0
251

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியில் நெருக்கடி நிலைமையில் தமிழ் அரசியல் சக்திகள் ஒருமித்து செயல்பட வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தாயகத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையோடு, தமிழர்களின் தாயகத்தை மீட்க தமிழ் அரசியல் சக்திகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள திருமாவளவன், யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் மரங்கள் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருடன் இணைந்து மரங்களையும் நட்டு வைத்தார்.

“தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றேன். கார்த்திகை மாதம் முழுவதும் மரங்களை நாட்டுகின்றதையும் மரங்கள் வழங்குவதையும் பசுமை இயக்கம் செய்த வருகின்றது. இதற்கமைய பாடசாலையில் மரங்களை நாட்டியுள்ளோம். தொடர்ந்து மரங்களையும் வழங்கி வைக்க இருக்கின்றோம்.

கடந்த 2002ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்திருக்கின்றேன். அப்போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றேன். அதன் பின்னர் 2004ஆம் ஆண்டிலும் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதும் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரைடியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொல். திருமாவளவன்

அதன் பின்னர் 2010ஆம் ஆண்டில் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமானதையடுத்து இலங்கைக்கு வந்து அவரின் இறுதிக்கிரியையிலும் பங்கேற்றேன். அதன் பின்னர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் காலமானபோது அவரின் இறுதி அடக்க நிகழ்வில் பங்கேற்க வந்த போது விமான நிலையத்தில் வைத்தே தாயகத்துக்கு திருப்பி அனுப்பபட்டேன்.

அவ்வாறு ஒரு இடைவெளிக்கு பின்னர் தற்போது யாழ்ப்பாணம் வந்திருக்கின்றேன். இங்கு தற்போது பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆறுதலடைகிறேன். நான் இங்கு வந்திருக்கின்ற போது பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேன அறிவித்திருக்கின்றார். இதனால் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் தமிழ்ச் சமூகம் நிதானமாக எச்சரிக்கையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையோடு ஒருமித்து முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது.

நமது தாயகத்திலிருந்து இன்னமும் இரானுவம் முழுமையாகக் வெளியேற்றப்படவில்லை. சிங்களக் குடியேற்றம் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. சிங்கள மயமாதல் எனும் செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான சூழலில் தமிழர்களுக்குரிய தாயகம் தமிழர்களுக்கே மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் சக்திகள் எல்லோரும் ஒருங்கிணைந்து தமிழர்களின் நலனைக் கருத்திற் கொண்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையாகும்.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமையில் தமிழ் அரசியல் சக்திகள் ஒருமித்த முடிவை எடுத்து இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Thanks : BBC Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here