தர்மபுரி மாவட்டத்தில் ஆதிவாசி மாணவி படுகொலை!

0
258
தர்மபுரி மாவட்டத்தில் ஆதிவாசி மாணவி படுகொலை!
கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய் !
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
 

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஆதிவாசி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். கடந்த ஒருவாரமாக இதில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்புப் படித்து வந்த ஆதிவாசி மாணவி தீபாவளி விடுமுறைக்காக சிட்லிங் மலை கிராமத்தில் இருந்த தனது வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச்சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவரை அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வாயில் துணியை வைத்து அடைத்து தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியுள்ளனர். மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவிக்கு வந்ததால் குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அந்த சம்பவம்  தொடர்பாக அன்றைய தினமே மணவியின் பெற்றோர் குற்றவாளிகள் யார் என்பதைக் குறிப்பிட்டுக் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் கூட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்துள்ளது. அந்த மாணவிக்கு மருத்துவ சிகிச்சைகூட தராமல் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படாததால் அந்த மாணவி10ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தலையிட்ட பிறகுதான்  காவல்துறை உரிய பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது. ஆனால், இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சேலத்துக்கு அருகில் சிறுமி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டு சில நாட்களிலேயே இந்தப் படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மாணவியின் உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்; மானவியின் பெற்றோர் அளித்த  புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது  சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here