கஜா புயல் பாதிப்பு: நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக!

0
259
கஜா புயல் பாதிப்பு:
நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக!
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

கஜா புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக தமிழக அரசு மேற்கொண்டது. அதை எதிர்க்கட்சிகளும் பாராட்டின. ஆனால், புயல் கடந்ததற்குப் பிறகு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்ற பரவலான புகார்கள் எழுந்துள்ளன. மக்களுக்குக் குடிதண்ணீர் கூட கிடைக்கவில்லை. உணவு விநியோகமும் சரியான முறையில் செய்யப்படவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமது பகுதிகளை அதிகாரிகளோ, அமைச்சர்களோ வந்து பார்வையிடவில்லை என்று பல இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடக்கிறது. சாலைகளிலும் வீடுகளின்மீதும் விழுந்த மரங்களை அகற்றும் பணி தொய்வாக உள்ளது. பழுதடைந்த மின் மாற்றிகள், விழுந்த மின் கம்பங்கள் சீர் செய்யப்பட்டு மின் விநியோகம் உடனடியாகத் துவக்கப்படவேண்டும். மின்சாரம் இல்லாவிட்டால் குடிதண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதோடு நோய் பாதிப்பும் தீவிரமடையும். மக்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். புயலின் பாதிப்பு அதிகம் இல்லாத தஞ்சாவூர் நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இதுவரை மின் விநியோகம் சீரமைக்கப்படாதது மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பேரிடரால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வீடுகளில் உள்ளவர்களுக்கும் என்னென்ன விதமான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென்று 2015ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை முறையாக செயல்படுத்தி இருந்தாலே இந்தப் பிரச்சனை எழுந்திருக்காது.

பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தி கோபமாக வெடிப்பதற்கு முன்பே தமிழக அரசு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here