நந்தீஸ், சுவாதி ஆணவ படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்

0
99

நந்தீஸ்-சுவாதி ஆணவ படுகொலையை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் கொலை செய்யப்பட்ட நந்தீஸ் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியை திருமாவளவன் வழங்கினார்.

தமிழகத்தில் மேலும் ஒரு ஆணவக்கொலை ஓசூர் அருகே நிகழ்ந்து உள்ளது. அண்மை காலமாக சாதியின் பெயரால் இத்தகைய படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. நந்தீஸ், சுவாதி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தார் ஆவேசம் அடைந்து இருவரையும் கடத்தி சென்று மிகவும் கொடூரமாக கொலை செய்து, கை கால்களை கட்டி காவிரி ஆற்றில் வீசி உள்ளனர். இதுபோன்ற கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த வழக்கை கர்நாடகா போலீசார் விசாரிப்பதா? அல்லது தமிழக போலீசார் விசாரிப்பதா? என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

நந்தீஸ்-சுவாதியை ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றதால் இந்த வழக்கை தமிழக போலீசுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த வழக்கை ஓசூர் போலீசார் விசாரித்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கூலிப்படையினரின் தலையீடும் உள்ளது. தமிழகத்தில் கூலிப்படைகளை தடுப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். திட்டம் தீட்டியவர்கள் போலீசில் சிக்குகின்றனர். இதனால் கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கூலிப்படை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

இத்தகைய ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஜாமீனில் வெளிவராதவாறு சிறையில் வைத்து வழக்கை விரைவாக முடித்து தண்டனை வழங்க வேண்டும்.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் (சி.பி.ஐ.) வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கில் சரணடைந்தவர்களை தவிர, இன்னும் பலர் சம்மந்தப்பட்டு இருப்பதால், சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரித்து தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.

“காலம் காலமாக சாதிய ஆணவக்கொலை நடைப்பெற்றுத்தான் வருகிறது. தற்போது சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் வெளிச்சத்துக்கு வந்துக்கொண்டிருக்கிறது.

ஓசூரில் ஒரு வருடத்திற்குள்ள 7 சாதிய கொலைகள் நடந்திருப்பதாகவும், இந்த பகுதியில் சாதிய பாகுபாட்டால் பிரச்சனைகள் அதிகரித்து வருவதால் ஓசூரை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.

தற்போது சாதியப்பாகுபாடுகள் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமல்லாமல் காவல்துறை, வருவாய்துறை என எங்கும் சாதி, எதிலும் சாதி வளர்ந்திருப்பது வெட்கக்கேடானது எனவும், சாதிய பிரச்சனைகளை அரசியலில் பங்கேற்காத அமைப்புகளும் பேசுவதில்லை, பெரிய கட்சிகளும் பேச துணிவில்லாதபோது, பொதுவாழ்க்கையில் இருப்பதில் அர்த்தமில்லை, காலம் கனிந்து வருகிறது, ராமதாஸ் திருந்தி வருகிறார் என்பதை அவரது அறிக்கை உணர்த்துகிறது.

சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு விசிக மட்டும் பேசுகிறது பெரிய கட்சிகள் பேசுவதில்லை என ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன, விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவாக்கப்பட்ட பின்பே தலித்களும் வாய்திறக்க ஆரம்பித்துள்ளனர்.

இளைஞர்கள் தன்னுடைய காதலிகளை பாதுகாக்க, காதலிகளின் தற்கொலையை தடுக்கவே எதிர்வினை அறிந்தும் திருமணம் செய்கிறார்கள்.

ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற முடியாது என்றாலும், கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பேசினார். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நந்தீஷ் குடும்பத்திற்கு 2.50 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here