வக்கிர தாக்குதலின் அடுத்தகட்டம்! வாழ்ந்த இடமும் வீழ்ந்தது!

Sridhar Kannan
வக்கிர தாக்குதலின் அடுத்தகட்டம்!
வாழ்ந்த இடமும் வீழ்ந்தது!

நன்றி :ஜீனியர் விகடன் 09-05-10


லங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் காட்சிகளையும் இந்த உலகம் பார்த்து ஒரு வருடமாகப் போகிறது. வருகிற மே 18-ம் தேதியன்று அந்த வெற்றியை விமரிசையாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் சிங்கள அரசு, அதற்கிடையிலேயே மற்றொரு கேவலத்தை அரங் கேற்றி இருக்கிறது. ஈழத் தமிழர்களின் புனிதத் தலமாக வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரன் வாழ்ந்த வீடு, மண்ணோடு மண்ணாகத் தகர்க்கப்பட்டிருக்கிறது! இதைக் கேட்டு பன்னாட்டு தமிழர்களும் கொதித்துக் கிடக்க… 




நாம் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பேசினோம். பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை மறைந்த சமயத்தில் கடைசியாக வல்வெட்டித்துறைக்குப் போய்வந்த திருமாவளவன், பிரபாகரனின் வீடு குறித்த நினைவுகளை உருக்கமும் ஆவேசமுமாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

 ”மேதகு பிரபாகரனின் வீடு புலிகளின் அடையாளத் தலமாக, வீரத்தின் விளைநிலமாக தமிழர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டது. நான் 2002-ம் ஆண்டு போர் நிறுத்த நேரத்தில் பிரபாகரனின் வீட்டுக்குப் போயிருந்தேன். பல நாடுகளில் இருந்தும் அந்த வீட்டைப்பார்க்க ஏராள மானோர் வந்திருந்தார்கள். பிரபாகரனைப் பாராட்டியும் தனி ஈழத்தை வாழ்த்தியும் அந்த வீட்டின் சுவர்கள் முழுக்க எழுதப்பட்டிருக்கும். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், உருது என பல மொழிகளில் அந்த வீடு முழுக்க எழுதப்பட்டிருந்தது. ஏ-9 பாதையின் வழியாக அவரது வீட்டுக்கு நிறைய சிங்கள மக்களும் வந்தார்கள். அவர்களும் சிங்கள எழுத்துகளால் வாழ்த்தி, எழுதிவிட்டுப் போனார்கள். 2002-க்கு முன்னர் நடந்த போரில் சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்த வீட்டின் மேற்கூரை சிதைக்கப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அடை யாளங்களோடு உள்ள அந்த வீட்டைப் பார்க்கும்போதே, நம்மையும் மீறி நரம்புகள் புடைக்கும். அந்த வீட்டைப் பார்த்துவிட்டு,பிரபாகரன் இருந்த இடத்துக்கு வந்தேன். ‘உங்கள் வீட்டைப் பார்த்தேன். உங்களின் வீரம் அந்த வீட்டில் தெரிகிறது’ என்றேன். லேசாகச் சிரித்தவர், ‘நான் சின்ன வயதிலேயே அந்த வீட்டைவிட்டு வந்து விட்டேன். மறுபடி அங்கே போகவே இல்லை’ என்றார். தன் வீட்டைப் பற்றி கவலையே படாதவர், யாழ் நகரில் கோப்பாய் பகுதியில் இருந்த மாவீரர் துயிலும் இடத்தை ராணுவம் சிதைத்து விட்டதை நினைத்து, ரொம்பவே வருத்தப்பட்டார். பழையபடியே மாவீரர் துயிலும் இடத்தைக் கட்டுவதற்காக, கையில் மேப்போடு தயாராகிக் கொண்டிருந்தார். நினைவிடங்களின் மீது அந்த மாவீரன் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் அப்படிப்பட்டது. ஆனால், மனிதநேயமே இல்லாமல், இனவெறி பிடித்த வல்லூறுகளாகப் பிரபாகரனின் வீட்டை இடித்த சிங்களப் பாவிகளை என்னவென்று சொல்வது?” என்றவர், இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

”சில மாதங்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை இறந்த போது, நான் வல்வெட்டித்துறைக்குப் போய் பிரபாகரனின் வீட்டை மறுபடியும் பார்த்தேன். ‘அவரது வீட்டைப் போலவே அவர் கட்டிய நாட்டையும் சல்லடையாக்கி விட்டார்களே…’ என மனம் நொந்து, அந்த வீர மகனின் காலடிபட்ட மண்ணைக் கைநிறைய அள்ளி வந்தேன். சிங்கள மூர்க்கத்துக்கு பயப்படாமல் முதுகு நிமிர நின்ற அந்த வீடு, மறுபடி உணர்வுகளை உசுப்பும் களமாக மாறிவிடுமோ என்ற எண்ணம் அவர்களை உறுத்தியதோ என்னவோ… மனிதாபிமானமற்ற முறையில் அதனை மண்ணோடு மண்ணாக்கி இருக்கிறார்கள். பிரபாகரனின் வீர அடையாளங்களையும், ஈழத்தின் மிச்சங்களையும் வரலாற்றுச் சுவடுகளில் இருந்து அழித்தொழிக்கவே சிங்கள அரசு இப்படி வன்மம் காட்டுகிறது. வல்வெட்டித்துறையில் உள்ள வீட்டை வேண்டு மானால் அவர்கள் அழிக்கலாம்… சிதைக்கலாம். ஆனால், உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும்

 வாழுகிற தமிழர்கள், பிரபாகரனுக்காக அவர்களின் இதயங்களில் கட்டி வைத்திருக்கும் வீட்டை இலங்கை அரசால் என்ன செய்ய முடியும்? சமீபத்தில், மாவீரன் திலீபனின் நினைவிடத்தை சிங்கள இளைஞர்களும், ராணுவத்தினரும் சிதைத்திருக்கிறார்கள். மொத்தத்தில், ஈழம் முழுக்கவே ராணுவம். மாணிக்ஃபார்மில் இருந்து சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பப் பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்கள், ராணுவ முகாம்களுக்கு அருகிலேயே டென்ட் அடித்து தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். நரிகளுக்கு மத்தியில் தமிழ்ப் பெண்களின் கற்புக்கான பாதுகாப்பு எப்படி இருக்கும்? பல இடங்களில் தமிழ்ப் பெண்களை ராணுவக் கயவர்கள் சீரழிக்கிற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதைவிட பெரும் கொடுமை… சிங்கள இளைஞர்களுக்கு தமிழ்ப் பெண்களைக் கட்டாய மாகத் திருமணம் செய்து கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகளிலும் சிங்கள அரசு இறங்கி இருக்கிறது. கொத்துக் கொத்தாகத் தமிழர்கள் செத்து விழுந்ததை போர்க் காலத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்திய அரசு, இப்போதும் இரக்கமோ அக்கறையோ இல்லாமல் பாராமுகம் காட்டிக் கொண்டிருக்கிறது. எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பார்கள். ஆனால், ஈழத்தின் துயரங்களுக்கு மட்டும் அந்த எல்லை இல்லவே இல்லை போலும்!” – பரிதவிக்கிறது திருமாவின் குரல்.



– இரா.சரவணன்

Share This Article
Leave a comment