இந்திய அரசியலமைப்புச் சட்டமானது மத்தியில் ‘கூட்டாட்சி’ முறையை வலியுறுத்துகிறது. மாநில அரசுகளின் ஒன்றியமே மத்திய அரசு என அது விவரிக்கிறது. வலிமைமிக்கதாக மத்திய அரசு அமைய வேண்டும் என்பதும் அந்த வலிமையானது மாநில அரசுகளின் வலிமையிலிருந்தே அமைய வேண்டும் என்பதும் இதன் பொருளாகும். அதாவது, மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தைக் கட்டமைப்பதன் மூலமாகவே மத்தியில் கூட்டாட்சி நிர்வாகத்தை நிறுவ முடியும். ஆக, மாநில சுயாட்சி என்பது ஏதோ மாநிலங்கள் சார்ந்த தனித்த பொருள் அல்ல!
கூட்டாட்சி என்பது ஒரு ஜனநாயக நெறிமுறை. இதன் அடிப்படையைப் புரிந்துகொள்வதன் மூலமாகவே மாநில சுயாட்சியையும் புரிந்துகொள்ள முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள், மாநில அரசுகள் என்னும் பன்மைத்துவக் கூறுகள் ஒருங்கிணைந்து, மைய அரசு என்னும் ஓர்மையை உருவாக்கும்போது, அது கூட்டாட்சி முறையைக் கொண்டதாக அமைய வேண்டும் என்கிற தேவை எழுகிறது. இதனடிப்படையில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் கூட்டாட்சி முறையை வலியுறுத்துகிறது.
ஆக, மாநில சுயாட்சி என்பது மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றைப் பற்றி மட்டுமின்றி, மத்தியில் அமைய வேண்டிய கூட்டாட்சியைப் பற்றியும் உள்ளீடாக உணர்த்துகிற ஒரு ஜனநாயகக் கருத்தியல். அதாவது, மத்தியில் வலிமைமிக்கதொரு அரசு அமைய வேண்டும் என்னும் அதேவேளையில், அது கூட்டாட்சி என்னும் கூட்டரசாக அமைய வேண்டும் என்பதே அதன் உண்மையான பொருள்.
ஆனால், இன்றைய கள நிலவரம் என்ன?
மத்தியில் வலுமிக்க அரசு அமைய வேண்டும் என்பதற்காக வலுவான அதிகாரங்கள் யாவற்றையும் ஒரே இடத்தில் குவிப்பது இன்று உச்சத்தில் இருக்கிறது. மாநில அரசுகளுக்கான அதிகாரங்களை இப்படிப் பறிப்பது, முதலில் மாநில அரசுகளை வலுக்குன்றச் செய்யும். கூடவே, மாநில அரசுகள் தமது தேவைகள் யாவற்றுக்கும் மத்திய அரசையே முழுமையாக சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாகும். மிக விரைவில் மத்திய அரசே மாநில அரசுகளுக்கான கொள்கை முடிவுகளைத் தீர்மானிப்பதாக மாற, மத்திய அரசின் முடிவுகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துகிற வெறும் நிர்வாக அலகுகளாக மாநில அரசுகள் மாறிவிடும்.
இப்படி மாநில அரசுகள் பலமிழக்கும்போது இந்தியா போன்ற மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஏற்படும் மிகப் பெரிய வீழ்ச்சி அந்தந்த மாநிலங்களில் வாழும் குடிமக்களின் மொழிநலன்கள், இனநலன்கள், கலாச்சார நலன்களில் ஏற்படவல்ல சேதம். அதாவது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் பறிபோகும்போது அவர்களுடைய முன்னுரிமைகளும் பறிபோகும். கூடவே அடையாளமும் பறிபோகும். காலப்போக்கில் இது மோதலுக்கு வித்திடக் கூடியது; அதுவே ஒன்றியத்தின் பலவீனத்துக்கும் வழிவகுக்கும்.
இந்திய ஒன்றியமானது ஏற்கெனவே மாநிலங்களுக்கு நிறைய அதிகாரங்களை வழங்க வேண்டிய நிலையில் இருந்துவருகிறது. நாளாக நாளாக இருக்கிற அதிகாரங்களும் பறிபோவதே இன்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரங்கள் யாவும் வகைப்படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளன. அதாவது, மத்திய அரசுக்குரிய அதிகாரங்கள், மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்கள் மற்றும் இரு தரப்பும் ஒருங்கிணைந்து கையாள வேண்டிய அதிகாரங்கள் என மூன்று வகையான அதிகாரங்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.
இந்த அதிகாரங்களில் மாநிலங்களின் பட்டியலிலுள்ள அதிகாரங்களை மத்தியப் பட்டியலுக்கு மாற்றுவது என்பது தொடர்ந்து நடந்துவருகிறது. அதாவது, மாநில அரசுகளுக்குரிய பல அதிகாரங்கள் இரு தரப்பாருக்கும் பொதுவான ‘ஒத்திசைவுப் பட்டியலுக்கு’ மாற்றப்பட்டன. குறிப்பாக, கல்வி, வனங்கள், அளவைமுறைகள், கொடிய விலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. தற்போதைய நிலையில், 52 வகையான அதிகாரங்கள் ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பெயர் என்னவோ, பொதுவானதாக ‘ஒத்திசைவுப் பட்டியல்’ என்று சூட்டப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் இவை யாவும் மத்திய அரசுக்கான அதிகாரங்களாகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அந்த அதிகாரங்கள் தொடர்பான முடிவுகள் எவையாயினும், அவை குறித்து மாநில அரசுகளின் கருத்தை அறியவும் அவற்றின் ஒப்புதலைப் பெறவும் வேண்டுமென்கிற நடைமுறைகள் பெரும்பாலும் பெயரளவில் மட்டுமே உள்ளன. ஒருபோதும் மாநில அரசுகளின் மாற்றுக் கருத்துகளையோ எதிர்க் கருத்துகளையோ மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. மத்திய அரசின் முடிவுகளே இறுதியானவை என்பதுதான் நடைமுறையாகவுள்ளது. எடுத்துக்காட்டாக, மருத்துவக் கல்வி தொடர்பான ‘நீட்’ தேர்வு குறித்து தமிழக அரசு முன்வைத்த மாற்றுத்திட்டங்களையோ சட்ட மசோதாக்களையோ மத்திய அரசு ஏற்கவில்லை என்பதை அறிவோம். அதனால், அனிதா என்கிற மாணவி உயிரிழந்ததையும் நாடறியும்.
விரும்பும்போதெல்லாம் மாநில அரசுகளுக்கான அதிகாரங்களை வேறு பட்டியலுக்கு மாற்றிக்கொள்ளவும், தமது விருப்பம்போல் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மத்திய அரசால் முடியும் என்ற சூழல் நல்லதே அல்ல. ஏனென்றால், பெரும்பாலும் மாநிலங்களுக்கான அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் மொழிவழி சார்ந்தே அமைந்திருக்கின்றன. மொழியுரிமைகளும் இனவுரிமைகளும் மாநில உரிமைகளில் முதன்மையானவையாக உள்ளன. இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமை நீடிக்க மொழிவழி தேசிய இனங்களின் உரிமைகளும் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்படுவது அவசியம் என்பதாலேயே மொழிவழியாக இந்நாட்டில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால், இன்றைக்கு எங்கே பெரும் தாக்குதலை பாஜக அரசு செய்துகொண்டிருக்கிறது என்றால் அங்கேதான் செய்துகொண்டிருக்கிறது.
இந்தி அல்லாத பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களிலெல்லாம் இந்தியைத் திணிப்பதில் முனைப்பாகவுள்ள மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக ‘ஒரே தேசம்; ஒரே கலாச்சாரம்’ என்னும் குரலுடன் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது மாநிலங்களின் நலன்களையும் மக்களின் நிம்மதியையும் மட்டும் அல்ல; ஒன்றியத்தின் பலத்தையும் பாதிக்கக் கூடியதாகும். ஆக, மத்தியில் கூட்டாட்சி என்பது நிறைவடையவே மாநிலங்களில் சுயாட்சி தேவையாகும்!
நன்றி தி இந்து (தமிழ்)
சனவரி 25 – மொழிப் போர் தியாகிகள் தினம் அன்று வெளியான கட்டுரையின் முழுவடிவம்.