சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு எம்பிக்களையும், இரண்டு சதவிகித வாக்குகளையும் பெற்றால் மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கும். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, விசிக தொண்டர்கள் அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் திருமாவளவனுக்குபொன்னாடை அணிவித்தும், பரிசுகளை வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாதவது, “1991ஆம் ஆண்டு மூப்பனார் தேர்தலில் போட்டியிட கொடுத்த ஐந்து இடங்களில், இரண்டு மட்டும் போதும் எனக் கூறி சிதம்பரம், பெரம்பலூர் என இரண்டு தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது நான் அரசு ஊழியராக இருந்தேன். அப்போது எனக்கு வாக்களித்தவர்களை கடுமையாக தாக்கினார்கள். தலித் அல்லாதவர்களுக்கு ஒரு எதிரி என்கின்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். இந்த நேரத்தில் என் வெற்றியை அவர்களுக்கு சமர்பிக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “2009 விழுப்புரத்தில் வெற்றி பெற்று இருந்தால், 15 ஆண்டுகளுக்கு முன்பே மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்திருக்கும். மேற்குவங்கம் மற்றும் கேராளவில் தனித்து போட்டியிடும் நிலை உள்ளது. இதனால் குறைபாட்டுடன் இந்தியா கூட்டணியில் கையில் தேசத்தை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. இந்தியா கூட்டணி பக்குவம் பெற வேண்டும் என்று மக்கள் கால அவகாசம் கொடுத்துள்ளனர்.
பாஜக ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மையை தரவில்லை. கடந்த முறை 303 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை 240 இடங்களில் வெற்றி பெற்று 63 இடங்களை தவறவிட்டுள்ளது. பாஜகவிற்கு தோல்வியில் ஒரு வெற்றி. ஆனால், இந்தியா கூட்டணிக்கு வெற்றியில் ஒரு தோல்வி. 52 இடங்களில் இருந்த காங்கிரஸ் 99 வந்துள்ளது.
பாஜகவின் நச்சுப்பல்லை பிடுங்கியுள்ளது இந்த தேர்தல். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரை கண்காணிகளாக போட்டு ஆட்சி அமைக்குமாறு இந்திய சமூகம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பாக பார்க்கிறேன். இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெற வேண்டும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போன்று இரண்டு தொகுதிகளிலும் வெற்றி. தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் என்று மகத்தான அங்கீகாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்துள்ளது. சமூக அங்கீகாரத்தைப் பெற்று, அரசியல் அங்கீகாரத்தை தொட்டு, சட்ட ரீதியான அங்கீகாரத்தை இன்று பெற்றுள்ளோம். இனிமேல் தான் வேகமாக உழைக்க வேண்டும். நெருப்புகளை கடந்து கரையை தொட்டுள்ளோம்.
திருமாவளவன் கண்கள் மட்டும் அல்ல, 50 லட்சம் கண்களும் ஒரே இலக்கைக் கொண்டு செயல்பட வேண்டும். கட்சியில் மறு சீரமைப்பு செய்ய உள்ளேன். அடுத்த சில நாட்களில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் காலத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசி வந்தார்கள். தாமரை மலர இங்கு தாடகம் இல்லை எனவும், வடக்கே ஓடுங்கள் என்பது தான் இந்த தேர்தல் முடிவு கொடுத்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.