2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் தான் பானையை உடைக்க வந்திருப்பதாக கூறும் சமூக வலைதளங்களில் உலாவரும் காணொளிக் காட்சி ஒன்றைக் கண்டோம்.
80களில் நாங்கள் மதுரை சட்டக்கல்லூரியில் பயின்ற போது பிற்பட்டவர் இடஒதுக்கீட்டு பட்டியலில் இடம்பெற்ற படையாட்சி, பள்ளி, வன்னியர், வன்னியக் கவுண்டர் ஆகிய உட்பிரிவுகளை கொண்ட வன்னியர் சமூகத்தினர் தங்களது இடஒதுக்கீட்டு உரிமைக்காக மிகத்தீவிரமாக போராடிக் கொண்டிருந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கட்டைகளால் சாலைத் தடைகளை ஏற்படுத்தி சாலை போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
செப்டம்பர் 1987 இல்இட ஒதுக்கீடு போராட்டக்காரர்கள் 11 பேர்கள் அன்றைய அதிமுக அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்நாளில் தமிழ்நாட்டின் வெகுசன பத்திரிக்கை ஒன்றுக்கு டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்ற துளுவ வேளாளர், நாடார், செட்டியார் ஆகிய சமூகங்கள் தங்களுக்கான இடஒதுக்கீட்டை பறித்து விடுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
ஓரளவிற்கு அவரது கூற்றில் உண்மையும் இருந்தது.
பின்னர் திமுக ஆட்சி காலத்தில் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடமளிக்க அன்றைய திமுக முதல்வர் கருணாநிதி அவர்கள் 1989 ஆம் ஆண்டில் உரிய சட்ட திருத்தங்களை மேற்கொண்டு வன்னியர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறச் செய்தார்.
தமிழ்நாட்டிற்கான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஆண்டிப்பண்டாரம், அரையர், போயர், பரதவர் (கன்னியாகுமரி, செங்கோட்டை – நீங்கலாக) தொண்டைமான், வலையர், வண்ணார் (கன்னியாகுமரி, செங்கோட்டை – நீங்கலாக) யோகீஸ்வரர் உள்ளிட்ட 48 பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கும் குறவர், வலையர், கள்ளர், வேட்டுவக் கவுண்டர் உள்ளிட்ட 68 பட்டியல் நீக்கப்பட்ட சமூகங்களும் தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக பட்டியலில் இடம் பெற்றனர்.
இச்சமூகங்களில் எண்ணிக்கையில் மிகப்பெரும்பாலான வன்னியர் சமூகமும் அடுத்த நிலைகளில் கள்ளர், வலையர், குறவர் ஆகிய சமூகங்களும் உள்ளன.
இந்நிலையில் இடஒதுக்கீட்டு பயன்களை முழுமையாகப் பெற உள்ஒதுக்கீடும் வேண்டுமென கருதிய வன்னியர் சமூகத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ஒதுக்கீடு தங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட திரு.எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 26.02.2021ஆம் நாள் சிறப்பு இடஒதுக்கீடு சட்டத்தை இயற்றி அதன்படி 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை வன்னியர் சமூகத்தினருக்கு வழங்கியது.
அந்த சிறப்பு இடஒதுக்கீட்டு சட்டம் வேலைவாய்ப்பில் மட்டுமின்றி கல்வியிலும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்திற்கு வழங்க வழிவகை செய்தது.
ஆனால் மேற்சொன்ன 26.02.2021ஆம் நாள் இயற்றப்பட்ட வன்னியர் சமூகத்தினருக்கான சிறப்புச் சட்டத்தை எதிர்த்து வி.வி.சாமிநாதன் என்ற மனுதாரரும் மற்றும் 32 பேர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கிட்டனர்.
வன்னியர் சமூக உள்ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏராளமான சீனியர் வழக்கறிஞர்களும் பிற வழக்கறிஞர்களும் அவ்வழக்கில் வாதிட்டனர்.
வாதங்களின் பின்னர் 01.11.2021ஆம் நாள் வன்னியர் சமூகத்திற்கான உள்ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லாதெனக் கூறி நீதிபதிகள் எம்.துரைச்சாமி மற்றும் கே.முரளிசங்கர் இருவரும் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
அதன் பின்னர் பட்டாளி மக்கள் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பட்டாளி மக்கள் கட்சி எதிர் மயிலேறும் பெருமாள் மற்றும் பலர் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புத் திரட்டில் இடம்பெற்ற (2023) 7 SCC 481 அவ்வழக்கில் மறுபடியும் ஏராளமான சீனியர் வழக்கறிஞர்களோடு பட்டாளி மக்கள் கட்சி உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கியது.
அம்பாசங்கர் ஆணையம் மற்றும் பிற ஆணையங்களின் அறிக்கையின்படி வன்னியர் சமூகத்தினரின் சமூக பொருளாதார நிலை மிகவும் பின்தங்கி இருப்பதாக வழக்கறிஞர்கள்; வாதிட்டனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் நீக்கம் செய்யப்பட்ட 115 சமூகங்களில் வன்னியர் சமூகம் மிகவும் பின்தங்கி உள்ளதை காட்டும் எவ்வித புள்ளிவிபரங்களும் இல்லையென வன்னியர் சமூகத்தினருக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதே உச்சநீதிமன்றம் பொருளாதார அடிப்படை இடஒதுக்கீட்டை புள்ளி விபரங்கள் இல்லாமல் ஏற்றுக் கொண்டது முரண்நகையே.
1985ஆம் ஆண்டு அம்பாசங்கர் ஆணையர் வழங்கிய அறிக்கையின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ 4.99 கோடியாக இருந்த போது வன்னியர் சமூக மக்கள் தொகை ஏறத்தாழ 65 லட்சம் இருந்தது. அவ்வெண்ணிக்கை தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 13.01விழுக்காடு என 1983ஆம் ஆண்டு கணக்கீட்டின் அடிப்படையில் அம்பசங்கர் ஆணையம் கண்டது.
24.05.2012 நாள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் தலைவர் முன்னாள் நீதிபதி ஜனார்தனம் கொடுத்த அறிக்கையில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 விழுக்காடு வழங்க பரிந்துரை செய்திருந்தாலும், மிகவும் பிற்பட்ட சமூகப் பட்டியலில் கண்ட மீனவர், தொட்டிய நாயக்கர், மருத்துவர், சலவைத் தொழிலாளி, ஏர்ரகொல்லர் ஆகிய சமூகங்களில் இருந்தும் இது போன்றதொரு உள்ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை எழுந்ததையும் அந்த ஆணையம் சுட்டிக்காட்டியது.
இது தவிர 2010-2011ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி அரசு பணிகளில் வன்னியர் சமூகத்தினரின் பங்களிப்பு 8.6 விழுக்காடு உள்ளது என பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரின் 24.05.2018ஆம் நாள் அறிக்கை கூறியது.
அதன்பின்னர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தணிகாச்சலம் அவர்களின் தலைமையில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் மேலும் எட்டு உறுப்பினர்களுடன் 08.07.2020 அன்று மறுகட்டமைப்பு செய்யப்பட்ட பிறகு 22.02.2021ஆம் நாள் நீதிபதி தணிகாசலம் ஆணையம் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை அரசுக்கு வழங்கியது.
அந்த பரிந்துரை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜனார்த்தனம் அவர்களின் 2012 அறிக்கையின் அடிப்படையில் அமைந்தது.
ஆனால் அவ்வாணையத்தின் பிற உறுப்பினர்கள் அப்பரிந்துரைக்கு எதிராக எழுதிய குறிப்புரைகளுக்கு நீதிபதி தணிகாசலம் கண்டனம் தெரிவித்திருந்தாரே தவிர தகுந்த விளக்கம் கூறவில்லை.
2020ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி குலசேகரன் ஆணையம் போதுமான புள்ளிவிபரங்களையும், தமிழ்நாட்டின் சாதிகள், தொல்குடிகள் ஆகியவர்களின்; சமூக பொருளாதார நிலை குறித்து உரிய ஆய்வுகள் எதையும் செய்யவில்லையென்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதுதவிர வழக்கறிஞர் கோன்சால்வஸ் அவர்கள் அம்பாசங்கர் அறிக்கையைக் காட்டி மொத்தம் 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், பட்டியல் நீக்கப்பட்ட சமூகங்கள் ஆகியனவற்றிலிருந்து ஒரு மாணவர் கூட மருத்துவ கல்லூரி இடங்களைப் பெறவில்லை எனவும் அதே நேரத்தில் வன்னியர் சமூகத்தினர் 104 பேர் மருத்துவ கல்லூரி இடங்களை பெற்றுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி தணிகாசலம் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளை நிராகரித்த உச்சநீதின்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் கவாய் ஆகியோர் வன்னியர் சமூகத்திற்கான உள்இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என 31.03.2022 நாளில் தீர்ப்பளித்தனர்.
இவ்வாறாக 26.02.2021 அன்று கொண்டுவரப்பட்ட வன்னியர் சமூக உள்ஒதுக்கீடு அரைகுறையாக எட்டு மாதங்களுக்குள்ளாக உயர்நீதிமன்றத்தாலும் பின்னர் உச்சநீதிமன்றத்தாலும் ரத்து செய்யப்பட்டு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் அச்சட்ட முன்வடிவை கவனமாக கையாளாததாலும், நீதிமன்ற வழக்குகளை கையாண்ட முறையாலும் நந்தவனத்து ஆண்டி உடைத்த சட்டியாக உள்ஒதுக்கீடு சட்டம் உடைந்து போனது.
ஆனால் இதே போன்று 29.04.2009ஆம் நாளில் அன்றைய திமுக அரசால் அருந்ததியர் உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட போது பட்டியல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் 16 விழுக்காடு அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட போது வன்னியர் சமூக உள்ஒதுக்கீட்டைப் போன்ற ஒரு வழக்கை பட்டியல் சமூகங்களில் உள்ள மற்றொரு சமூகம் எதிர்த்து வழக்கிட்ட போது அவ்வழக்கில் சீனியர் வழக்கறிஞர் விஜயன் அருந்ததியர் உள்ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என வாதிட்டார்.
அவரது வாதத்திற்கு சட்ட அடிப்படை உண்டு, ஏனென்றால் ஏற்கனவே 2005ஆம் ஆண்டில் இ.வி.சின்னய்யா எதிர் ஆந்திரபிரதேச அரசு என்ற அரசியலமைப்பு சட்ட அமர்வு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பில் (2005 1 SCC 394) அவ்வாறான பட்டியல் சமூகத்திற்கான உள்ஒதுக்கீடு செல்லாதென வழங்கப்பட்ட தீர்ப்பைச் சுட்டிக்காட்டி சீனியர் வழக்கறிஞர் வாதிட்ட அக்காலகட்டத்தில் அருந்ததியர் சமூகத்திற்கு ஆதரவாக ஏராளமான வழக்கறிஞர்கள் களம் இறங்கினர்.
வழக்கறிஞர் பிரபுராஜதுரை, அஜ்மல்கான், திருமுருகன் உள்ளிட்ட எங்கள் அலுவலகம், மாஞ்சோலை ராபர்ட் இன்றைய உயர்நீதிமன்ற நீதிபதியும், அன்றைய வழக்கறிஞருமான ஜி.ஆர்.சுவாமிநாதன், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த உ.நிர்மலா ராணி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் ஒய்.கிருஷ்ணன், வழக்கறிஞர் ரஜினி, சென்னை வழக்கறிஞர் ரஜனிகாந்த், வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் எல்.ஐ.சி.மலைச்சாமி, ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மற்றும் என ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் பலர் அவ்வழக்கில் அருந்ததியர் சமூகத்திற்கு ஆதரவாக இருந்தனர்.
நான் நினைவில் நின்ற பெயர்களையே குறிப்பிட்டுள்ளேன் மேற்சொன்ன பட்டியல் முழுமையானதல்ல.
எட்டு மாதங்கள் முடிந்த வன்னியர் உள்ஒதுக்கீடு தீர்ப்பு போலன்றி உச்சநீதிமன்ற அரசியல் சாசன தீர்ப்பு எதிராக இருந்த போதிலும் 2009 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் நீதிபதிகள் பால்வசந்தகுமார் மற்றும் ஆர்.சுப்பையா அவர்ளது தீர்ப்பால் அருந்ததியர் இட ஒதுக்கீடு இன்று வரை வருடம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அன்றைய திமுக அரசின் ஆதரவும், அருந்தியர் இடஒதுக்கீட்டுக்காக ஆதரவான அரசியல் சூழலும், அனைத்து சமூக சகோதர வழக்கறிஞர்களின் பங்களிப்பும் அவ்வழக்கில் குறிப்பிடத்தக்கது.
அருந்ததியர் உள்ஒதுக்கீட்டு வழக்கை கண்ணின் கருமணியைப் போல் காப்பாற்றிய எல்.ஐ.சி. வழக்கறிஞர் மலைச்சாமி குழுவினர் அவரது அந்நாளைய வழக்கறிஞர் தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எதிர்தரப்பு வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட சண்டையிட்டு வழக்கை பிறிதொரு நாள் நடத்தச் செய்த வழக்கறிஞர் பிரபுராஜதுரை என ஏராளமான வழக்கறிஞர்கள் அவ்வழக்கில் கட்டணமின்றி முன்னிலையாகி உள்ஒதுக்கீடு தொடர உதவினர்.
உச்சநீதிமன்றத்திலும் அருந்ததியர் உள்ஒதுக்கீடு மேல்முறையீட்டில் 27.08.2020 அன்று இ.வி.சின்னைய்யா தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பவும் பெரும் வழக்கறிஞர்கள் பட்டாளம் அருந்தியர் சமூகத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் களமாடினர்.
இன்றைய உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞரான வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் அவ்வழக்கில் அருந்ததியர் சமூகத்திற்கு ஆதரவாக வாதிட்டனர்;.
பத்து வருடங்களுக்கு முன்பாக கல்லூரி ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு பணியாளர்கள் என பெரிய அளவிலான சமூக பங்களிப்பு இல்லாத சூழலில் தற்போது அந்த உள் ஒதுக்கீட்டின் பலனை அருந்ததியர் சமூகத்தினர் பெற்று விளிம்புநிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மையம் நோக்கி நகர்வதை நாம் கண்கூடாக காண இயலும்.
அருந்ததியர் சமூக இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா அமர்வின் தீர்ப்பை பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் வரவேற்று அறிக்கை ஒன்றை 27.8.2020 அன்று வெளியிட்டார்.
கடந்த 15 வருடங்களாக தொடரும் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டுக்கு அச்சமூக தலைவர்கள் கோவை அதியமான், நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட பலர் எடுத்த அரசியல் நடவடிக்கைகளும் பிற சமூகங்களையும், அனைத்து சமூக வழக்கறிஞர்களையும் தங்களுக்கு ஆதரவாக களம் இறங்க செய்த சமயோசிதமும் காரணம் என அறுதியிட்டுக் கூற முடியும்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பெரும்பான்மை கொண்ட சமூகங்களின் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசியலில் செல்வாக்குப் பெற்ற பட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான டாக்டர் ராமதாசும் அவரது மகனும் மாநிலங்களவை அவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் இருவரும் பிற சமூகங்களை தங்களுக்கு ஆதரவாக இணைப்பதற்கு பதிலாக சமூக பிரிவினையையே செய்து கொண்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் தங்கள் சமூகத்திற்கு கல்வியும், அரசுப்பணிகளில் போதிய பங்களிப்பு இல்லையென வாதிட்ட பட்;டாளி மக்கள் கட்சியினர் அரசியல் தளங்களில் தாங்கள் சத்திரிய உயர் சாதியினர் என்று முழக்கமிடுவது ஒருவரை முரண்நகையே.
சொல்லப்போனால் வன்னியர் என்ற பெயர் காடவர் என்ற தமிழ் பெயரின் சமஸ்கிருத மொழியாக்கமேயன்றி அக்னிக்கும் அதற்கும் எவ்வித தொடர்புமில்லை.
சோழர்களின் 429 வருட ஆட்சியின் இறுதியில் அவர்களது அதிகாரம் மங்கிய போது மூன்றாம் ராஜேந்திர சோழனை சிறைப்பிடித்தவர் காடவ சிற்றரசர் என வரலாறு கூறுகிறது.
இலங்கையின் வடபகுதியிலும் வன்னியர் என்ற பெயர் காடவர் என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது.
வனம் என்ற வடமொழி வேர்ச்சொல்லில் இருந்து வன்னியர் என்ற பெயர் வந்தது.
தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் நுழைவதற்கு முன்பாக இருந்த ஒரு சில சமூகங்களில் வன்னியர் சமூகத்தினரும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. வடமொழி ஆதிக்கத்தின் முன்னே வாழும் வன்னியருக்கும் அக்னிக்கும் தொடர்பு இருப்பதாக கூறுவது ஒரு சமூகம் இந்து மேல்நிலையாக்கத்தின் விளைவாக வன்னியர்களை சமஸ்கிருதமயமாக்குவதாகத்தான் கருத முடியும்.
தமிழ்நாட்டின் பிற சமூகங்களுக்கு பொதுவான பிரச்சனை வன்னியர் சமூகத்தினருக்கும் பொதுவானவை. நீட்தேர்வு, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கான இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் சமூக இடஒதுக்கீட்டை பாதிக்கும் மத்திய அரசின் பொருளாதார இடஒதுக்கீடு ஆகிய சமூக சிக்கல்களில் பிற சமூகங்களுடன் இணைந்து போராட வேண்டிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவரின் மகன் தான் பானையை உடைப்பதற்கு வந்துள்ளேன் எனக் கூறுவது சாமான்ய மக்களை அவர்களது அரசியலுக்கு எதிராக நிறுத்துகிறது.
ஏறத்தாழ தமிழ்நாட்டின் வன்னியர் சமூக மக்கள் தொகை எண்ணிக்கையைப் போன்று இருக்கும் கேரளாவின் ஈழவர் சமூகத்தை சேர்ந்த தலைவர் பினராய்விஜயன் முதல்வராக கேரள ஆட்சி கட்டிலும் அமர்ந்து இருப்பதற்கு காரணம் அவர் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியாக இருப்பதே தவிர அவர் சார்ந்த ஈழவ சமூகம் ஆண்டபரம்பரை என்ற அவர் ஒருபோதும் வீண் பெருமை பேசவில்லை.
சொல்லப்போனால் தான் ஒரு தென்னையின் பாளையைச் சீவும் சீவல் தொழிலாளியின் மகன் (செத்து தொழிலாளி) என்றே ஒருமுறை தன்னை அவர் குறிப்பிட்டார்.
பத்தாண்டுகள் கேரளாவின் திவானாகப் பணியாற்றிய சி.பி.ராமசாமி அவர்கள் ஒருமுறை இந்தியாவின் சத்திரியர்களைப் பற்றி குறிப்பிடும்போது, இந்திய சத்திரிய சாதிகள் 200 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் குழிமுயல்களைப் போல பயந்து ஓழிந்து தங்கள் ஆட்சியைக் காப்பாற்றி இறுதியில் மன்னர் மானியங்களைப் பெற்றுக் கொண்டனர் என இழிபாக கூறுவதை மனு எஸ் பிள்ளை தனது ஐவரித்ரோன் நூலில் பதிவு செய்துள்ளார் .
மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பானையை உடைக்க பாய்ந்தால் அவர் ஒரு நாளும் தமிழ்நாட்டில் முதல்வராக மட்டுமல்ல மக்களவை உறுப்பினராக கூட ஆக முடியாது என 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மெய்ப்பிக்கிறது.!
அதென்னவோ உடைந்தது பானையல்ல! சட்டிதான்!!
குறிப்பு : தொகுக்க உதவிய புஷ்பவள்ளிக்கு நன்றி.!
தி.லஜபதி ராய்
07.06.2024
புதுத்தாமரைப்பட்டி