தமிழரசு கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மறைவு!
ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தனது இறுதி மூச்சுவரை குரல்கொடுத்தவர் !
விடுதலைச் சிறுத்தைகள் இரங்கல்!
ஈழத் தமிழர்களின் முதுபெரும் தலைவர் திரு. இரா.சம்பந்தன் அவர்கள் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. 1956 ஆம் ஆண்டு தனது 23 ஆவது வயதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து, தனது 91ஆவது வயது வரை ஓய்வு ஒழிவின்றித் தமிழர் நலன்களுக்காகப் பாடாற்றியவர். அவரது மறைவு தமிழ்த் தேசிய அரசியலில் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் தமிழ் மக்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சுதந்திரத்திற்குப் பிறகான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாத ஒரு ஆளுமையாக அய்யா இரா.சம்பந்தன் இருந்தார். ஈழத்தமிழர் சிக்கலுக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு அதில் உறுதியாகவும் இருந்தார்.
1983ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் உறுதிமொழி ஏற்கும்படியான நிலைபாட்டை எதிர்த்து, சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக, அவ்வாறு உறுதிமொழி ஏற்க மறுத்தும் ; 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். அதனால் அப்போது இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எப், டெலோ உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து 2001ஆம் ஆண்டு “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டமைப்புக்கு திரு. இரா.சம்பந்தன் தலைவராகப் பொறுப்பேற்றார்.
2001ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவர் 2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக இலங்கையில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து அழுத்தங்களைக் கொடுப்பதிலும், தமிழர் நலன்களுக்கு ஆதரவு திரட்டுவதிலும் அவர் சோர்ந்ததே இல்லை.
அரசியல் ரீதியாக எத்தனையோ விமர்சனங்களை அவர்மீது மிகவும் கடுமையாக முன்வைப்பவர்களும்கூட, ஈழத் தமிழரின் இனச் சிக்கலை அவரளவுக்கு ஆழமாகப் புரிந்துகொண்ட, அவரைப்போல செறிவாக எடுத்துக்கூறும் ஆற்றல்கொண்ட ஒரு தலைவர் இன்று ஈழத்தில் இல்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். அவரது மறைவு எவ்வளவு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும். ஈழத்தந்தை செல்வா அவர்களின் வழியில்
நாடாளுமன்ற சனநாயகத்தின் மூலம், ஈழச்சிக்கலுக்குத் தீர்வுகாணப் போராடிய பெரியவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி