ஆரிய எதிர்ப்புக்கான மாற்று அரசியலின் மூலவர் சீனிவாசனார்!

Sridhar Kannan

சூலை -07

மாமனிதர் ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாளில் அவரின் சமூக- அரசியல் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். சாதிப்பெருமை பேசி சாதியத்தை வளர்த்து சனாதன பிற்போக்கு சக்திகளுக்கு துணைபோவதல்ல மாமனிதர் சீனிவாசனார் முன்னெடுத்த அரசியல். மாறாக, பறையன் என்பது தொன்மை வாய்ந்த பழம்பெரும் சமூகத்தின் பூர்வீக அடையாளமே தவிர அது இழிசொல் அல்ல என்பதை உணர்த்தியவர்.

அதேவேளையில், சாதிஒழிப்பே அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வழி என்பதையும் புரட்சியாளர் அம்பேத்கருக்கு முன்னரே உயர்த்திப் பிடித்தவர். பின்னர், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களோடு இணைந்து சாதிஒழிப்பு அரசியலை இம்மண்ணில் வலுவாக வேரூன்றச் செய்தவர். பண்டிதர் அயோத்திதாசரும் அய்யா சீனிவாசனாரும் ஆரியத்துக்கு எதிராக வித்திட்ட சாதிஒழிப்பு அரசியல்தான் திராவிட அரசியலுக்கான மூலவேர் ஆகும். அதாவது, ஆரியம்- பார்ப்பனியம்- சாதியம்- சனாதனம் என அறிப்படும் பாகுபாடு , சுரண்டல், மற்றும் ஒடுக்குமுறை அரசியலுக்கு எதிரான திராவிட அரசியல் எனும் மாற்று அரசியலின் மூலவர்கள் இவர்களே ஆவர். சாதிஒழிப்பை முன்னிறுத்திய சமூகப்புரட்சியாளர் மாமனிதர் சீனிவாசனாருக்கு இந்நாளில் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவண்:

தொல். திருமாவளவன்,

நிறுவனர்- தலைவர், விசிக.

Share This Article
Leave a comment