இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு:

Sridhar Kannan
Sridhar Kannan 1 Min Read

இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு:

விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

இசுலாமிய விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் திரு. தர்வேஸ் ரஷாதி ஹஸ்ரத்(60) அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. படுக்கையிலிருந்த நிலையிலேயே அவர் காலமாகியிருக்கிறார். இத்தகவல் கிடைத்ததும் காலை 8.30 மணியளவில் வடபழநியிலுள்ள மசூதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

திரு. ரஷாதி அவர்கள் இசுலாமிய  மார்க்க அறிஞராக இஸ்லாத்தைப் பரப்பும் பணிகளைச் சிறப்புற ஆற்றியவர். அதேவேளையில், இசுலாமியரிடையே அரசியல் விழிப்புணர்வை ஊட்டும் களத்திலும் பங்கேற்றுப் பணியாற்றியவர். விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று விளிம்புநிலை மக்களுக்கான ஒற்றுமை குறித்த அரசியலை வலியுறுத்தியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியைப் பெரிதும்  விரும்பியவர். ஆண்டுதோறும்  சிறுத்தைகளின் துணைநிலை அமைப்பான இசுலாமிய சனநாயகப் பேரவை ஒருங்கிணைக்கும் நோன்பு நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்றவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்படும் கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் விருது அவருக்கு அளித்து சிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்மை அவ்வப்போது அரசியல் ரீதியாகத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியவர். அவரது மறைவு இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி  விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரது மறைவால் இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த திரு. ரஷாதி அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.

Share This Article
Leave a comment