சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏற்கனவே வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி எப்படிப்பட்ட ஊழல்களில் ஈடுபட்டார் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. ஆனால் அது கண்டும் காணாமல், அனைவராலும் கடந்து செல்லப்பட்டது அதிர்ச்சி அளித்தது. இந்த சூழலில் ஹிண்டன்பர்க் அறிக்கை மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாஜ ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதானி போன்றவர்களின் ஆதிக்கம் அனைத்து தளங்களிலும் மேலோங்கி இருக்கிறது, ஊழல் முறைகேடுகள் எவ்வாறு தலைதூக்கி இருக்கிறது என்பது இதுபோன்ற அறிக்கைகள் மூலம் அம்பலமாகி இருக்கிறது. எனவே அனைத்து ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்து இதுதொடர்பாக குரல் எழுப்ப வேண்டும்.
அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு எஸ்சி-எஸ்டி மக்களுக்கு எதிராக கிரீமிலேயர் (creamy layer) பயன்படுத்த வேண்டும் என்று இருந்தது. இது நல்லெண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாக தெரியவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. ஆணவக்கொலை குற்றமில்லை எனக்கூறுவது அறியாமையை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.