சென்னை: “உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் ஏன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். மாநில அரசு எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது,” என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தும், கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது: “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்ட உடனே, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, வேறெந்த சமூகத்தினரைப் பற்றியும் கவலைப்படாமல், யாருடனும் கலந்து பேசாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், அவருடைய அரசியல் லாபத்துக்காக, அவருடைய கையில் அதிகாரம் இருந்ததால், உடனடியாக அறிவித்தார். பின்னர், அந்த உள்ஒதுக்கீடு சட்டப்படியான சிக்கலை சந்தித்து இன்று தேங்கி நிற்கிறது.
மாநில அரசுகளின் கைகளில் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை ஒப்படைக்கக் கூடாது என்ற கவலையும் அச்சமும் அம்பேத்கருக்கு இருந்தது. எனவே, பட்டியல் சாதிகளை எல்லாம், ஒரு பின் இணைப்பாக அரசியலமைப்புச் சட்டத்துக்குள் ஒரு பட்டியலாக இணைத்தவர் அம்பேத்கர்தான். பின்னர், அது பொருத்தமாக இல்லை என்று தெரிந்ததால், அதற்காக சட்டப்பிரிவு 341 மற்றும் 342 ஆகிய இரு உறுப்புகளை இணைத்தார். 341 – பட்டியல் சமூகத்தைப் பற்றியது. 342 பழங்குடியின சமூகத்தைப் பற்றியது. இவர்களைப் பற்றி எந்த முடிவுகளை எடுத்தாலும், நாடாளுமன்றத்தில் விவாதித்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் அம்பேத்கர்.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், நாடாளுமன்றத்துடன் ஏன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். நமக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது சரி. ஆனால், திமுக அரசு என்பது நிலையானது அல்ல. மாநில அரசுதான் நிலையானது. கட்சிகள் வரும், போகும். அது வேறு. சமூக நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், வருவார்கள் போவார்கள், அது வேறு. மாநில அரசு எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது.
இந்தியாவிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட பட்டியல் சமூகம் பஞ்சாப்பில்தான் இருக்கிறது. அங்கு எஸ்சி, எஸ்டியின் மொத்த மக்கள் தொகை 32 சதவீதம். 32 சதவீதம் உள்ள ஒரு சமூகம் தனித்து ஓர் அரசியல் சக்தியாக எழுச்சி பெற்றால், அவர்கள்தான் நிரந்தர முதல்வர்களாக இருக்க முடியும். ஆனால், முன்கூட்டியே 1975-களிலேயே வகைப்படுத்துதல் என்ற பெயரில், உடைத்துவிட்டார்கள்,” என்று திருமாவளவன் பேசினார்.
நன்றி : தி இந்து தமிழ்