“இப்படி ஒரு தலைவர் இருப்பதால்தான் பயமில்லாமல் இருக்கிறோம்” – திருமாவை வாழ்த்திய தேவா 

Sridhar Kannan

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியினர் சார்பில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திரைப்பட நடிகர் ராஜ்கிரண், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இசையமைப்பாளர் தேவா மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

அப்போது இசையமைப்பாளர் தேவா பேசுகையில், “ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவ்வளவு பெரிய பேரும் புகழும் கிடைத்தும் கூட மிகவும் தன்னடக்கமாக இருக்கிறார் திருமாவளவன். வேறு ஒருவராக இருந்திருந்தால், ஆடிக்கொண்டு இருந்திருப்பார்கள். யாராக இருந்தாலும் எந்த நேரத்திலும் உதவி செய்வார் திருமாவளவன். இப்படி ஒரு தலைவர் இருப்பதால்தான் பயமில்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அவரின் இடத்திற்கு வேறு யாரும் வரவும் முடியாது, அதற்கு அவர்களுக்குத் தகுதியும் கிடையாது. அவர் ஒருவர் மட்டும்தான்.

சில நபர்கள் வீடியோ கேமரா இருந்தால்தான் உதவி செய்கிறார்கள். ஆனால் இவர் உதவி செய்வது யாருக்குமே தெரியவில்லை. ஏனென்றால் அவர் உதவி செய்யும் இடத்தில் கேமரா இல்லை. அந்தளவிற்கு நல்லவர் நம் தலைவர் எழுச்சி தமிழர். இந்த வார்த்தையை சொல்வதற்கே பெருமையாக உள்ளது. இன்றைக்கு நம் தலைவரை நேரடியாக பார்த்து வாழ்த்து சொல்வது பூர்வ ஜென்ம பலன்” என்று பாராட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Share This Article
Leave a comment