நாடே கொண்டாடும்
“வாழை”!
கண்ணீரில்
கருக்கொண்ட காவியம்.
கலையுலகே
புருவம் உயர்த்தும்
கலைநயம்.
உழைக்கும் மக்களுக்கு
வாழைக்குலைகள் மட்டுமல்ல
வாழ்க்கையே பெருஞ்சுமை.
புளியங்குளத்தில் முளைவிட்ட
பொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால்
மாரியின் வேர்களில் மார்க்சியம்.
போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும்
பொருளியல் முரண் விளக்கும்
புரட்சிகரப் படைப்பு!
வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும்
வரலாற்றுக் குறிப்பு!
விபத்தில்தான் பலி
என்றாலும்,
இது வெண்மணி வெங்கொடுமையின்
வேறொரு வடிவம்.
பச்சிளம் குழந்தை
பருவத்திலும்
குடல் முறுக்கும்
பசியடக்கி
கொடுந்துயர
தடைநொறுக்கி
வெகுண்டெழுந்து
போராடி
வெற்றி இலக்கை
எட்டித் தொட்ட
ஒரு பிறவிப்போராளியின் தன்வரலாறு.
இது மாரியின்
மழலைப்பருவ
வரலாறு எனினும்
ஒரு சமூகத்தின் உயிர்வலி!