தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு: “உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”

Sridhar Kannan

தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு:

“உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது.

வகுப்புவாத சக்திகளை எதிர்த்து சமரசமின்றிப் போராடிய போராளி ஒருவரை நாடு இழந்துவிட்டது. தோழர் யெச்சூரி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

1974 ஆம் ஆண்டு துவங்கிய அவரது கம்யூனிசப் பயணம் அரை நூற்றாண்டு கால வரலாறு கொண்டது. மாணவப் பருவத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். அவசரநிலைக் காலத்தில் தலைமறைவாக இருந்து பல போராட்டங்களை ஒருங்கிணைத்தவர். அதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் மாணவர் இயக்கத்திலும் பின்னர் கட்சியிலும் இணைந்து செயல்பட்டார். 1996 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசு உருவானபோது அதற்கான குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தைத் தயாரித்ததில் சீரிய பங்களிப்புச் செய்தார்.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் 60 மக்களவை இடங்களை வென்ற போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு அவரது அழுத்தம் காரணமாக இருந்தது.

12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மக்கள் பிரச்சனைகள் பலவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு பாஜக அரசின் வகுப்புவாத செயல் திட்டங்களை சமரசம் இல்லாமல் எதிர்த்துப் போராடினார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் பாசிச தாக்குதலை எதிர்த்தவர்கள் எல்லாம் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நேரத்திலும் அச்சமின்றி மோடி அரசின் அடக்கு முறையைத் துணிச்சலாக எதிர்த்துப் பேசியவர். இந்தியா கூட்டணி உருவாகப் பாடுபட்டவர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் ஒருங்கிணைத்த ‘வெல்லும் சனநாயகம் மாநாட்டில்’ பங்கேற்று இறுதிவரை இருந்து உரை நிகழ்த்தினார். அங்கு திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்களைப் பார்த்து மிகுந்த உத்வேகம் கொண்டார். “இலட்சக் கணக்கான இளைஞர்களை வகுப்புவாத அரசியலை எதிர்த்து இப்படித் திரட்டுவது மிகப் பெரிய சாதனை” என எங்களைப் பாராட்டினார் . “ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரு இடதுசாரிக் கட்சிதான். நாம் இணைந்து செயல்படுவோம்” என்று எங்களை ஊக்கப்படுத்தினார்.

தோழர் யெச்சூரியின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்குப் பேரிழப்பாகும். அவருக்கு எமது நெஞ்சார்ந்த செவ்வணக்கங்களைச் செலுத்துகிறோம். தோழர் யெச்சூரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

Share This Article
Leave a comment