உயர்நிலைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

Sridhar Kannan

2024 அக்டோபர் 10 ஆம் நாள் விசிக தலைமையகமான சென்னை- அசோக்நகர், அம்பேத்கர் திடலில் நடைபெற்ற உயர்நிலைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

1) கடந்த அக்டோபர்-02 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற “மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில்”, குறைந்தது இரண்டு இலட்சம் பெண்கள் உட்பட ஐந்து இலட்சத்துக்கும் மேலான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்று மாநாட்டை மாபெரும் அளவில் வெற்றிபெறச் செய்தனர். மாநாட்டின் மகத்தான வெற்றிக்குப் பாடாற்றிய கட்சியின் முன்னணி தோழர்கள் அனைவருக்கும் இந்த உயர்நிலைக்குழு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 

 2) நமது அழைப்பையேற்று மாநாட்டில் பங்கேற்று மாநாட்டின் நோக்கத்தை வரவேற்று ஆதரித்து உரையாற்றிச் சிறப்பித்த தோழமைக் கட்சிகளின் பிரதிநிதித்துவ தலைவர்களுக்கு இந்த உயர்நிலைக்குழு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 

3) மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் எனவும்; தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திட இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டுமெனவும்; இந்த உயர்நிலைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. 

4) மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டினை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் அம்மாநிலங்களின் விசிக சார்பில் ஒருங்கிணைக்கப்படும் என இந்த உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது. 

5) மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் குழுக்களை தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் மற்றும் பேரூர் மற்றும் நகர அளவில் உருவாக்குவதெனவும்; இக்குழுக்களின் சார்பில் தொடர் விழிப்புணர்வு பரப்பியக்கத்தை மேற்கொள்வதெனவும் இந்த உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது. 

6) மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கென கட்சியில் உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்குவது எனவும்; அக்குழுவானது, ஊடகங்கள், சமூக இயக்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முதலானவற்றை அணுகி இந்தப் பரப்பியக்க நடவடிக்கைகளை விரிவாக முன்னெடுத்துச் செல்லுவதெனவும் இந்த உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது. 

7) ‘சாம்சங்’ நிறுவனத்தைச் சார்ந்த தொழிலாளர்கள், தாங்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வதற்கான உரிமை கோரி, கடந்த ஒரு மாத காலமாகப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தொழிற்சங்கம் அமைத்திட அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. அத்துடன், பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டுமெனவும் இக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. 

8) இஸ்ரேல் நாட்டின் படைகள் பாலஸ்தீனத்தின்மீதும், சிரியாவின்மீதும் தொடுத்துவரும் தாக்குதல்கள் மூன்றாவது உலகப் போர் மூளுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் அநீதியான இந்த யுத்தத்தை இதுவரை அந்நாட்டுக்கு ஆதரவாக இருந்த பிரான்சு நாடு கண்டித்துள்ளது. உலகின் பல நாடுகளில் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு இஸ்ரேலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய ஒன்றிய அரசு பாலஸ்தீனப் பிரச்சனையில் இதுவரை கடைப்பிடித்துவந்த நிலையை மாற்றி இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவை வழங்கிவருவது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய ஒன்றிய அரசு தனது இஸ்ரேல் ஆதரவு நிலையை மாற்றிக்கொண்டு பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. இதனை வலியுறுத்தி சென்னையில் எதிர்வரும் அக்டோபர் 14 ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென இந்த உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது. 

 9) புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 21 மீனவர்களைச் சிங்கள கடற்படை கைதுசெய்துள்ளது. இலங்கை அரசின் இந்த அத்துமீறலை இந்த உயர்நிலைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதுவரை கைது செய்யப்பட்ட அத்தனை மீனவர்களையும் விடுதலை செய்வதற்கும், அவர்களது வலைகள், படகுகள் உள்ளிட்ட சொத்துகளை மீட்பதற்கும் இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது. 

10) அரசு வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்குத் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவதே வேலையின்மையைத் தீர்ப்பதற்கான வழியாக இருக்கும். எனவே, இதற்கான சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. 

11) திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையை ஏற்று மாநில எஸ்சி.எஸ்டி ஆணையம் அமைத்தது, எஸ்சி.எஸ்டி துணைத் திட்டத்துக்கான சட்டம் இயற்றியது, தொழில் முனைவோர்களுக்கென புதிய திட்டத்தை உருவாக்கியது உட்பட பட்டியல் சமூக மக்களுக்காகப் பல நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கு இந்த உயர்நிலைக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. அதே நேரத்தில், இன்னும் பல முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். குறிப்பாக, பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தகுதியானவர்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசமைப்புச் சட்டப் பிரிவு 16 (4 ) இன் படி சட்டம் இயற்ற வேண்டும்; அரசுத் துறைகள் அனைத்திலும் பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்; ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்; எஸ்சி. எஸ் டி, மக்களுக்கு எதிராகப் பெருகிவரும் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; எஸ்சி மக்களின் இட ஒதுக்கீட்டின் அளவை 24% ஆக உயர்த்த வேண்டும்; எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களில் இழிவைக் குறிக்கும் வகையிலுள்ள ‘ன்’ விகுதியை, பிற்படுத்தப்பட்டோருக்கு மாற்றப்பட்டது போல ‘ர்’ என முடியும் வகையில் மாற்ற வேண்டும் – போன்றவை உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கனவே அரசின் பார்வைக்கு முன்வைத்துள்ளோம். ஆனால், அந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவற்றை பரிசீலித்து காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றிட முன்வர வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 

இவண்: 

தொல். திருமாவளவன், 

நிறுவனர் – தலைவர், 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

Share This Article
Leave a comment