இயற்கை சாவல்ல; ஈவிரக்கமற்ற அடக்குமுறை ஆட்சியின் விளைவு! பேராசிரியர்_சாய்பாபா மறைவு

Sridhar Kannan

இயற்கை சாவல்ல; ஈவிரக்கமற்ற அடக்குமுறை ஆட்சியின் விளைவு!

பேராசிரியர்_சாய்பாபா மறைவு:

இயற்கை சாவல்ல; ஈவிரக்கமற்ற அடக்குமுறை ஆட்சியின் விளைவு!

விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!

டெல்லி பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் திரு. சாய்பாபா அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு ஜி.என்.சாய்பாபா அவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கொடுமையான யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மாற்றுத்திறனாளியான அவருக்கு அவர் பயன்படுத்தும் சக்கர நாற்காலியைக் கூட கொடுக்காமல் சிறையில் கொடுமைப் படுத்தினார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது. உடனடியாக பாஜக அரசு அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்தில் பிணைக்குத் தடை ஆணையைப் பெற்றது.

திரு. ஸ்டான் சாமி எப்படி சிறைக்குள்ளேயே உயிரிழந்தாரோ அப்படி இவரையும் உயிரிழக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக அரசு செயல்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் யாவும் ஆதாரமற்றவை என்று கூறி அவரை விடுதலை செய்தது.

10 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த திரு.சாய்பாபா அவர்கள் சிறை வாழ்க்கையின் போது அனுபவித்த சித்திரவதைகளின் காரணமாகப் பல்வேறு உடல்நலிவுகளுக்கு ஆளானார். அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் இப்போது உயிரிழந்திருக்கிறார். அவருடைய மரணத்தை இயற்கை மரணம் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இது ஈவிரக்கமற்ற அடக்குமுறை ஆட்சியின் கோர விளைவாகும். அதற்குத் துணை போகும் நீதித்துறையின் இதயமற்ற அணுகு முறையின் சாட்சியும் ஆகும்.

திரு. சாய்பாபாவைச் சிறையில் அடைத்தது போல பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்னும் பல சிந்தனையாளர்களை பாஜக அரசு யுஏபிஏ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது. உயர் நீதி அமைப்புகளும் அவர்களை விடுவிப்பது குறித்து அக்கறை காட்டாமல் இருக்கின்றன.
பாஜக அரசின் அடக்குமுறைகளுக்கு கொஞ்சமும் பயப்படாமல் உறுதியோடு போராடிய திரு.சாய்பாபா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

யூ.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சிந்தனையாளர்களையும் விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.


இவண்:
தொல் திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

Share This Article
Leave a comment